தியாகத்தின் அணையாத தீபம் திலீபன் மாமா

"நம்மை அடித்து கொன்றவனே 
நம் வீட்டு  வாசலுக்கு வந்து 
ஆறுதல் சொல்கிறான் மயங்காதே.....
நாடு கேட்பவர்களைக் கொன்றுவிட்டு மானியத்தில் வீடு கொடுக்கிறான் அடங்காதே.....
இலைகள் உதிரும்  கிளைகள் உடையும் 
வேர்கள் வீழாமல் காப்போம்"

ஈழத்து தமிழர்கள் வாழ்க்கை கண்ணீராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆவணமென்றே கூறவேண்டும். சிங்கள வெறியரசின் தொடர்ச்சியான இனப்படுகொலை 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சொல்லப்பட்டது. இப்படுகொலைகள் விட்டுச் சென்ற வடுவே நூறாண்டுகள் ஆனாலும் ஆறாத ரணமாகும். அந்த இனவழிப்பு போராட்டங்களில் எல்லாம் விடுதலைப் புலிகளின் பல படைப் பிரிவுகளைச் சேர்ந்த போராளிகள் தம் இன்னுயிரை துச்சமென எண்ணி போராடி மாவீரர் ஆனார்கள்.

திலீபன் மாமாவும் 1987 இல் இந்திய அரசுக்கு எதிராக 5 அம்சக்  கோரிக்கையை முன்வைத்து உண்ணா விரதத்தை ஆயுதமாகக் கொண்டு போராடி தன்னை ஆகுதியாக்கி  வரலற்றில் அணையா தீபமானார்.

இவர் 1963 நவம்பர் 29 யாழ்ப்பாணம் ஊரெழு அருகே உரும்பிராய் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் இராசையா  பார்த்தீபன். இவர் தந்தை ஒரு ஆசிரியர். மூன்று சகோதரர்களும் இருக்கிறார்கள். இவர் பிறந்து மூன்று மாதங்களிலேயே தாயை இழந்தார். சிறிது காலத்தின் பின் தந்தையையும் இழந்த இவர் சகோதரர்களால் வளர்க்கப்பட்டு யாழ் இந்துக்கலூரியில் கல்வி பயின்றார்.

போராட்டம் என்பதையே அறியாத இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவனாக 1980 இல் சேர்ந்தார். அக்காலப்பகுதியில் இனக்கலவரத்தின் கோரப்பிடியில் சிக்கி பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான சம்பவத்தை பார்த்து திலீபன் மாமாவின் தமிழ் ரத்தம் கொதித்தது. மருத்துவக் கல்வியை துறந்து தமிழ் மண்ணுக்காக துப்பாக்கியை ஏந்தினார். பார்தீபன் 1983 தமிழ் எதிர்ப்பு கலவரத்திற்கு முன்னரே விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். விடுதைப்புலிகள் இயக்கத்தால் இவருக்கு  திலீபன் எனும் பெயர் வழங்கப்பட்டது. 1987 இல் மே மாதம் வடமராட்சி  தாக்குதல் ஒன்றில் வயிற்றில் காயமடைந்த இவர் பின்னர் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ஆனார்.

1987 செப்டெம்பர் 15 அன்று இந்திய உயர்ஸ்தானிகருக்கு 5 கோரிக்கைகளை முன் வைத்து கடிதம் ஒன்றை ஒப்படைத்தார். அவையாவன:

  1. பயங்கரவாத தடுப்புச்சட்டம்  நீக்கப்படவேண்டும்;
  2. அவசரகால விதிமுறைகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்;
  3. தமிழ் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்;
  4. அவசரக்காலச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்;
  5. தமிழ் பகுதிகளில் புதிதாக சிங்கள காவல் நிலையங்கள் திறப்பதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறான கோரிக்கையினை முன் வைத்து நல்லூர் கந்தசாமி கோவில் முன் உண்ணாவிரதமிருந்தார். 12 நாட்கள் உணவு தண்ணீரை மறுத்த இவர் உடல் நிலை மோசமடைந்ததால் 26 செப்டெம்பர் 1987 இல் தனது 23வது  வயதில் திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் சுமந்து வீரமரணமடைந்தார். திலீபனின் சிலை 1988இல் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பின்னால் கட்டப்பட்டது. 18 நவம்பர் 2007 இல் ஆயுதமேந்தியவர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. பதிவுகள் அளிக்கப்பட்டாலும் அவரின் நினைவுகளும் தமிழீழத்துக்காக வீரமரணமடைந்த அந்த மாவீரனின் தேசப்பற்றும் என்றும் அழிக்கமுடியாத கல்வெட்டுக்களே….!

“இலைகள் உதிரும் கிளைகள் உடையும்  வேர்கள் விழாமல் காப்பாற்றுவோம்”

கருணாகரன் கவி 
திலீபன் தமிழ் சோலை பியல்லா 

உங்கள் கவனத்திற்கு