குமரிக் கண்டமும் தமிழும்

பலரும் அறிய வேண்டிய, அவிழ்க்கப்படாத சில முடிச்சுக்களோடு கடலுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றது ஒரு தேசம். இத்தேசம் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா? தமிழர்களாகிய நாம் கண்டிப்பாக, தவற விட்டு விடாது அறிய வேண்டிய ஒரு தேசம் தான் இது. அறிவோம் வாருங்கள்!

      குமரிக்கண்டம் என்று சொல்லப் படுகிற பரந்துபட்ட ஒரு நிலப்பரப்புத்தான் இத் தேசம். கண்டம் என்று சிறப்பித்துக் கூறுமளவிற்குப் பெரியதாகப் பரவிக் கிடந்தது. இதுதான் எமது பழந்தமிழகம். தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்ததுதான் நாம் கொண்டாடிப் போற்றும் குமரிக்கண்டம். இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம்.

      இக்கண்டத்திலேதான் மாந்த இனம் தோன்றியது. முதலில் தோன்றிய மாந்தன் இன்றைய மாந்தக் குரங்கைப் போல் மயிரடர்ந்த உடலோடு குனிந்து நடப்பவனாக இருந்தான். இவ்வகையான விலங்குத் தன்மை கொண்ட மாந்தனை ஆய்வாளர்கள் “இலெமூர்” என்று பெயரிட்டு அழைத்தனர். இக்கரணியத்தால் குமரிக்கண்டம் ஆய்வாளர்களினால் “இலமூரியா” என அழைக்கப்பட்டது.

      இந்த விலங்கியல் மாந்தன் பல்லாயிர ஆண்டு கால வளர்ச்சியில், நிமிர்ந்து நடக்கவும் ஒலிகள் வாயிலாகத் தன் எண்ணங்களை வெளிப்படுத்தவும் கற்றுக் கொண்டான். ஆய்வாளர் முடிவின்படி, மாந்த நாகரிகமும் உலகின் முதல் மொழியும் தோன்றிய இடம் குமரிக் கண்டமாகும்.

      தமிழ் மொழி ஆய்வில் 50 ஆண்டு காலம் மூழ்கித் திளைத்த செம்புலச் செம்மல் தேவநேயப் பாவாணர், தமிழிலுள்ள அத்தனை இலக்கியங்களையும் துருவித் துருவி ஆராய்ந்தார். அதன் பயனாக மாந்தத் தோற்றம், மொழித் தோற்றம், அவற்றின் வளர்ச்சிப் படிகள், இவற்றினூடான மாந்த குல வரலாறு அனைத்தையும் மறுப்பதற்கிடமின்றி, மேற்குலக ஆயவாளரும் ஏற்கும்படி ஆராய்ந்து மெய்ப்பித்து நிறுவினார். இதன் விளைவாக முதல் மாந்தன் தமிழன், அவன் பேசிய மொழி தமிழ்மொழி, அவனது பிறந்தகம் குமரிக்கண்டம் என்பதைக் கண்டறிந்தார்.

    குமரிக்கண்ட மக்கள் காலவோட்டத்தில் நாகரிகத்தின் உச்ச நிலையை எட்டியிருந்தனர். மேம்பட்ட இலக்கிய இலக்கண வளம் கொண்ட மொழியையும் கொண்டிருந்தனர். குமரிக்கண்ட மக்களின் தொழில் நுட்ப வளர்ச்சியின் தொடர்ச்சியே உலகம் வியந்து பார்க்கும் தஞ்சைப் பெரிய கோவிலாகும். அத்தோடு ஆலயங்கள் காட்டி நிற்கும் அற்புதமான கட்டடக் கலை, அதை அவன் கையாண்ட நுட்பம் அளவில் அடங்காதவை. மேலும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம் பூதங்களையும் குறிக்கும் ஐந்து  கோவில்களைச் செங்குத்தாக ஒரே நேர் கோட்டில் அமைத்திருக்கும் விந்தை அபூர்வமானது. குமரிக்கண்ட மக்களின் தொழில் நுட்ப வளர்ச்சியின் தொடர்ச்சியே இப்படி மேம்பட்டிருக்கும்போது, குமரிக்கண்டத்திலுள்ள மக்களின் திறமை எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தஞ்சைப் பெரிய கோவில்

     குமரிக்கண்டத்தின் மேற்கில் குமரிமலை அரண்போலத் திகழ்ந்தது. அந்த மலையில் தோன்றி வளம் கொண்டு நெடுக ஓடிய ஆறு குமரியாறு. அது இன்றைய குமரி முனைக்குத் தெற்காக 200 கல் தொலைவில் ஓடியது. குமரிமலைக்குத் தெற்கே பன்மலை அடுக்குத் தொடர் ஒன்று இருந்தது. இந்த மலைத் தொடரில் தோன்றி வற்றாமல் ஓடிய ஆறு பஃறுளி ஆறு எனப்பட்டது. இப்படி நீர் வளம் கொண்ட நாட்டின் செழிப்பைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

    குமரிக்கண்டம் கடல் கோளினால் உடைந்து சிதறிய பொழுது, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா ஆகிய நிலப்பரப்புக்கள் பிரிந்து போய்விட்டன. குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடலுள் மூழ்கியது. இந்தச் செய்தியை சிலப்பதிகாரம் கூறுகிறது.

” பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென் திசையாண்ட தென்னவன் வாழி “

(சிலம்பு 11.19.20)

   குமரிக்கண்டம் பற்றிய செய்திகள் நக்கீரன் எழுதிய இறையனார் அகப் பொருளுரையிற் காணப்படுகிறது.  

   மேலும், மூன்று முறை நடந்த கடற்கோளில் பெரும் பகுதி கடலினுள் ஆழ்ந்தது. கடைசிக் கடற்கோளின்போது இந்தியாவுடன் சேர்ந்திருந்த இலங்கை தனியாகப் பிரிந்தது. குமரிக்கண்டத்தில் அழியாமல் எஞ்சிய பகுதிகளாவன, தமிழகத்தின் தென் பகுதியும் இலங்கையுமாகும். இப் பகுதியில் வாழ்ந்த மக்கள் குமரிக்கண்ட மாந்தரின் வழித்தோன்றல்கள். குறிப்பாக இலங்கையை ஆண்ட இராவணனின் வழி வந்த மக்களும் இதில் அடங்கலாம்.

   மேலும் பரந்து விரிந்து கிடந்த குமரிக்கண்டம் பல்வேறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

  1. எழுதுவதற்கு ஓலை வழங்கிய ஏழ்குறும்பனை நாடு.
  2. தேனும் தினையும் தந்த ஏழ்குன்ற நாடு.
  3. செந்நெல் வளங் கொழித்த ஏழ்குணகரை நாடு.
  4. பஃறுளியாற்றின் பசுமை கொஞ்சும் ஏழ்மதுரை நாடு.
  5. தென்னை வளம் செறிந்த ஏழ்தெங்க நாடு.
  6. வீர மறவர்கள் வாழ்ந்த ஏழ்முன்பாலை நாடு.
  7. கடலும் காயலும் நிறைந்த ஏழ்பின்பாலை நாடு.

    இவ்வாறு ஏழு ஏழு நாடுகளாக 49 நாடுகள் காணப்பட்டன.

   குமரியாற்றுக்கும் பஃறுளியாற்ற்கும் இடையே பெருவளநாடு காணப்பட்டது. இது பெருவளங் கொண்டிருந்தது என்பதில் ஐயமில்லை. இந்த பெருவளநாட்டின் தெற்காக தென்பாலி நாடு காணப்பட்டது. வளங்கொழித்துச் சிறந்தோங்கிக் காணப்பட்ட குமரிக்கண்டம் அமைதியாகக் கடலுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

பண்டைய குமரிக்கண்டம் இலக்கியக் குறிப்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பின்னணி அறிவைக் கொண்டு வரையப்பட்டது.

   இதன் தலைநகராக, முத்துக் குளிக்கும் கடல் முத்தமிடும் தென்மதுரை விளங்கியது. இது தற்போதுள்ள குமரிமுனைக்குத் தெற்காக 200 கல் தொலைவில் காணப்பட்ட எழில் நகரம். எண்ணற்ற இலக்கிய மலர்கள் பூத்துக் குலுங்கிய தமிழ்ப் பூஞ்சோலையாகிய இந்த தென் மதுரையில் தான் தேமதுரத் தமிழை வளர்க்க பாண்டிய மன்னன் காய்சின வழுதி முதலாவதாகச் சங்கம் அமைத்தான்.

   கவியாளும் புலவர்களுடன் புவியாளும் மன்னர்களும் கூடியிருந்து தமிழ் வளர்த்தனர்.

                                தொடரும்…

    தமிழின் தொன்மையையும், தமிழனின் தோற்றத்தையும் பல்வேறு ஆய்வாளர்கள், அறிஞர்கள் அவ்வப்போது கூறிக் கொண்டு தான் வருகிறார்கள்.  அரசியல் மேலாண்மை கரணியமாக அவை வெளிச்சம் பெறுவதில்லை. தமிழர்களாகிய நாங்களே அவற்றை  முனெடுத்துச் செல்ல வேண்டும். 

உங்கள் கவனத்திற்கு