கற்காலத்திற்கும் முன்னே – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 1

         வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இலக்கிய, தொல்லியல், அகழ்வாய்வு, கல்லெழுத்துப் பதிவுகளும் இன்று இவற்றை உறுதி செய்கின்றன. புத்தளம்பொன்பரப்பியிலும் , குஞ்சுபரந்தனிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஈமத்தாழிகள், மாந்தையிலும், ஆனைக்கோட்டையிலும், காரைநகரிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் என்பன, இந்தியத் தமிழ் நிலத்தோடு கற்காலந்தொட்டே ஈழத்துக்கு இருந்து வந்த  குருதி தொடர்பு பற்றிய உண்மையைப் பேசுகின்றன. மிகக்குறுகிய ஆழமற்ற கடல்வழி மட்டுமே இந்தியத்தமிழகத்தையும், ஈழத்தமிழகத்தையும் பிரிப்பதனால், திராவிடத் தமிழ் இனத்தின் இருப்பு கற்காலத்துக்கு முற்காலத்தையும் தாண்டியதாக இருக்கக் கூடுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

           இது போன்ற எத்தனையோ தொல்லியல் எச்சங்கள் தமிழர்களே இத்தீவின் மூத்த குடிகள் என்பதை நிறுவுகின்றன. கி.பி 6ஆம் நூற்றாண்டிலே மகாநாமதேரர் என்ற தேரவாதத் துறவியினால் பாளிமொழியிலே தொகுக்கப்பட்ட ‘மகாவம்சம்’ என்ற நூல், இலங்கையிலே காலடிவைத்த முதல் மனிதன் விசயன் என்றும், அவன் தான் சிங்களவர்களின் முன்னோடி என்றும் பேசுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தபால் முத்திரை

           இது இட்டுக்கட்டிய பொய்யான கதையென்றும், புழுகுரை என்றும், வரலாறு அல்லலென்றும், வரலாற்று ஆய்வாளர்கள், சிங்கள அறிஞர்கள் உட்பட ஏராளமானவர்கள் சொல்லி வருகின்றனர். இந்த மகாவம்சத்தின் முதுகிலே தான் “சிங்கள பௌத்தம்” என்ற சிம்மாசனமிட்டு இன்றைய சிறிலங்கா சிங்கள அரசு ஆள நினைக்கிறது.

         இலங்கையின் முதற்குடி தானே என்றும், தமிழர்கள் பிற்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த வன்கவர்வாளர்களின் வழித்தோன்றலான ‘வந்தேறு குடிகள்’ என்றும் சிங்கள மேலாண்மை வாய்வலிக்கப் பேசுகிறது. மிக அண்மைக்காலம்வரை இந்தக் கதைதான் எல்லோராலும் நம்பப்பட்டு வந்தது. இன்று வரை சிறிலங்கா அரசின்  பாடநூல்களிலும்கூட, இந்தப் பொய்கதைகளே வரலாற்று உண்மைகளாகச் சொல்லப்பட்டும், புகழப்பட்டும், மாணவர்களின் வரலாற்று அறிவு திட்டமிட்டு மழுங்கடிக்கப்படுகிறது. விசயன் தான் இந்தத் தீவின் முதற்குடிமகன் என்றும், கானான் பிரதேசம் கடவுளால் யூதருக்கு வாக்களிக்கப்பட்டதைப் போன்று இலங்கை, விசயனுக்கு புத்தமெருமானால் வாக்களிக்கப்பட்டது என்ற மகாவம்சப் புரட்டை நம்பிய, நம்புகின்ற நடுநிலையற்ற வரலாற்று ஆசிரியர்கள், விசயன் வந்த சமகாலத்திலேயே தென்னிந்தியாவிலிருந்து மிகப் பெருந்தொகையினராகத் தமிழர்கள் வந்து குடியேறினர் என்று மகாவம்சம் கூறும் இன்னொருசேதியை மனங்கொள்ளவே இல்லை.

உங்கள் கவனத்திற்கு