“தேசம் காப்போம்” திட்டத்தில் கரம்கோர்த்த இத்தாலி வாழ் தமிழ் மக்களுக்கு

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக மகுடை நுண்மி (கொரோனாவைரசு) தாக்கத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி மக்களின் இருப்புக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் நெருக்கடியையும் பொருளாதார நிலையில் பெரும் இடர்ப்பாடுகளையும் ஏற்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே.

ஈழத்தமிழர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக சிறீலங்கா இனவாத அரசின் இராணுவ கெடுபிடிகள் காரணமாகவும் தொடர்ச்சியாக இனவாத அரசுகளின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளாலும் தமது பொருளாதார வாழ்வில் பெரும் சவால்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி இயற்கையின் சீற்றத்தால் மட்டும் இன்றி அவ்வப்போது தொற்றுநோய் தாக்கங்கள் என எம்தமிழினம் பல இன்னல்களை சந்தித்தே வந்துள்ளது

இவ்வாறான ஒவ்வொரு காலகட்டங்களிலும் புலம் பெயர்ந்த எம்தமிழர்களின் தார்மீக ஆதரவு தாயகத்தில் எம் மக்களின் துயரத்தை ஓரளவிற்காவது துடைத்து வருகின்றது.

ஈழத்தமிழர்களின் போராட்டம் முனைப்பு பெற்ற காலம் முதல் எமது தேசியத் தலைமையின் தூர நோக்கு சிந்தனைக்கு வடிவம் கொடுத்து புலம்பெயர்ந்த மண்ணில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கட்டமைப்புக்கள் தொடர்ச்சியாக ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான உரிமைக்கான பணிகளை முன்னேடுத்துவரும் அதே நேரம் போரினாலும் மற்றும் பிற காரணிகளாலும் அவ்வப்போது எம் தாயக மக்கள் எதிர் நோக்கும் பொருளாதார தேவைகளுக்காகவும் மனிதநேயம் மிக்க தேசிய பற்றுள்ள புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்புடன் பணி செய்து வருகின்றன.

அந்த வகையில் இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புகள் கடந்த மாதங்களில் தேசம் காப்போம் எனும் திட்டத்தினை தாயகத்தில் தொற்றுநோய் தாக்கத்தினால் வாழ்வாதார பிரச்சனையை எதிர்கொண்டிருக்கும் எம் மக்களின் உடனடி தேவைக்காக மேற்கொண்டிருந்தது.

தற்போதைய காலச்சூழலில் பொருளாதார சுமைகளுடன் வாழும் இத்தாலி வாழ் தமிழ் மக்கள் வழங்கிய இவ்வுதவியினால் உண்மையில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்களை இனங்கண்டு :
அராலி 200, தென்னைமறவாடி 70, தேவிபுரம் 48, புதுக்குடியிருப்பு 117, வட்டக்கச்சி 121, பனிக்கம் குளம் 51, பரந்தன் 60, உமையாள்புரம் 15, அரியாலை 50, கனகராயன்குளம் 19, நெழுக்குளம் 62 ஆக மொத்தம் 813 குடும்பங்கள் பயன்பெற்றனர்.

இதனை உணர்ந்து காலங்காலமாக எம்முடன் கைகோர்த்து இணைந்து செயலாற்றிவரும் இத்தாலி நாட்டில் வாழும் ஈழத்தமிழ் மக்களும் பாராட்டுக்குரியவர்கள்.

எம்தாயகமக்களுக்காக தொடர்ந்து பங்களித்து வரும் ஒவ்வோருவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறிநிற்கும் அதேநேரம் எம் தேசத்திற்காய் தொடர்ந்து இணைந்து செயலாற்றுவோம் என உறுதி எடுத்து கொள்வோம்.

உங்கள் கவனத்திற்கு