முதியோர்களும் உளநலமும்

மானிட சமூகத்தில் மூத்தோர்கள் ஒரு முக்கியமான அங்கமாகத் திகழ்கின்றனர். கடந்த காலங்களில் முதியோர்கள் அதிகாரம் உள்ளவர்களாகவும் முதிர்ந்த அனுபவமும் அறிவும் கொண்டவர்களாகவும் கருதப்பட்டார்கள். ஆனால் இன்றைய காலப்பகுதிகளில், பெரும்பான்மையான பெரியோர்கள் தங்கள் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட நிலையிலும், மற்றவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கக் கூடாது என்ற சுயஎண்ணத்தினாலும் தனிமையில் வாழ்கின்றார்கள். இதனால் அவர்கள் உடல், உள ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

தற்போது கொரோனா வைரசுவின்  தாக்கம் அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் தனிமையில் வாழ்கின்ற முதியோர்கள் மட்டுமன்றி தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகின்றவர்களும் கூட உளரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். வீட்டிற்குள் முடங்கி இருத்தல், அதிகரிக்கும் முதியோர் மரணங்கள், உடல் நலிவுற்றிருத்தல், கூட இருந்தவரின் இழப்பு போன்ற பல காரணிகள் அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. இந்நிலையில் அவர்களை இச்சிக்கலில் இருந்து விடுவிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. தாத்தா பாட்டிக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் உள்ள உறவு மூலம் முதியவர்களின் உளரீதியான ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளலாம். அவர்கள் அனுபவித்த  இன்பங்களை மீண்டும் மீட்டிக்கொள்ளலாம்.

மனிதனின் நல்வாழ்விற்கு உடல்நலமும் மனநலமும் இன்றியமையாதவை. எனவே வயதானவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவர்களை உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவதோடு, உறவுகளுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து அளவளாவுவதற்கு வாய்ப்பு அளிப்பதுவும் சிறந்த முறையாகும். குறிப்பாக, இக்காலகட்டத்தில் அவர்களுடன் கலந்துரையாடி, ஆறுதல்படுத்துவது அவர்களுக்கு நன்மையளிக்கும்.

பொதுவாக முதியவர்களின் ஏக்கங்கள் கடந்தகால அனுபவங்களை நிகழ்காலத்துடன் ஒப்பிடும் கற்பனைகளில் இருந்து தோன்றும். ஆனால் அவர்களின் ஞாபகங்கள் காலம் கடந்துபோக மாறுபட்டு வருகின்றன. வேலையிலிருந்து ஓய்வெடுக்கும்போதும், உடல் வலிமை குறையும்போதும், இவர்கள் தங்கள் திறன்கள் மீது நம்பிக்கையின்மையை வளர்த்துக்கொண்டு தங்களால் எதுவும் இயலாது என்கின்ற மனப்பான்மையினை வளர்த்துக் கொள்கின்றார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் தங்களால் மற்றவர்களை புரிந்து கொள்ள முடியாது என்று எண்ணியோ மற்றவர்கள் தங்களின் உணர்வுகளை புரிந்து கொள்கின்றார்கள் இல்லை என்று நினைத்தோ தயங்குவார்கள்.

ஆகவே குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதோடு அவர்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுப்பதன்மூலம் அவர்கள் மனமுடைந்து போகாமல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக் கொண்டுசெல்ல வழிவகுக்க வேண்டும்.

உளநலனை அடைவதற்கு விருப்பசக்தி மிக அவசியமாகும். இவ் விருப்பசக்தி மூலமே அவர்களின் அறிவாற்றலை ஊக்குவிக்கலாம். பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்திக்கொடுத்தல், அவர்களின் தனிமையைப்போக்க வழிசெய்தல், அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்த்து மதிப்பளித்தல், அவர்களது உணர்வுகளை மதித்து, அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் போன்றவை முதியோர்களை மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கும் சிறந்த அம்சங்களாகும். எனவே, சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் முதியோர்களின் பிரச்சனைகளும் தேவைகளும் பூர்த்திசெய்யப்படவேண்டும். அவர்களின் வாழ்வின் எல்லைவரை மகிழ்ச்சியாக வாழவைப்பது குடும்பத்தினரதும் சமூகத்தினரதும் கடமையாகும்.

உங்கள் கவனத்திற்கு