Arcuri, எதிர்வரும் திங்களில் இருந்து இன்னும் கடினமான சவால் ஆரம்பமாகின்றது.

“எதிர்வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை கட்டம் இரண்டு ஆரம்பமாகிறது. எமக்கு கடினமான சவால் ஒன்று ஆரம்பமாகிறது. நாம் ஒவ்வொருவரும் பெறவிருக்கும் சுதந்திரமானது நம் அனைவரின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக நிர்வகிக்கப்பட வேண்டும். இன்று வரை பல தியாகங்களைச் செய்துள்ளோம், இதற்காக அனைத்து மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். திங்கட்கிழமையிலிருந்து கூடுதலான பொறுப்புணர்ச்சியை மக்களிடம் எதிர்ப்பார்க்கின்றோம்” என கொரோனாவைரசு அவசரகால ஆணையர் Domenico Arcuri குறிப்பிட்டிருக்கிறார்.

வைரசு தொற்று மூலம் மட்டுமே பரவுகின்றது என்பதால், மக்களுக்கு இடையிலான பாதுகாப்புத் தூரத்தை கடைப்பிடிப்பது, தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது, முகக் கவசங்களை அணிவது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ந்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரிக்கப்பட்டு, அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆய்வகங்களில் திங்கட்கிழமை முதல் தெளியவியல் சோதனைகள் (Test sierologici) வந்தடையும் எனவும் இவ்வாறு, முதல் 150ஆயிரம் மக்களில் இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், பல மருந்தகங்கள் மற்றும் வணிகப் பிரதிநிதித்துவங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், மே 4ஆம் திகதியிலிருந்து, 50ஆயிரம் கடைகளில், அறுவைச்சிகிச்சைக்குப் பாவிக்கப்படும் முகக்கவசங்களை 50 சதங்களுக்கு வாங்கலாம். அத்துடன், இன்னும் பத்து நாட்களில் நாங்கள் தயாரித்த இயந்திரங்களூடாக முகக் கவசங்களின் உற்பத்தி ஆரம்பமாகி ஜூன் மாத நடுப்பகுதியில் ஒரு நாளுக்கு 4 மில்லியன் முகக் கவசங்களும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து 35 மில்லியன் முகக் கவசங்களையும் எமது இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் எனவும் இன்று வரை இதில் நடாத்தப்பட்ட ஊகம் முடிந்துவிட்டது எனவும் Arcuri அறிவித்தார். குழந்தைகளுக்கான முகக் கவசங்களை உற்பத்தி செய்வதற்கும் ஆலோசிக்கப்படுகிறது.

இறுதியாக, கட்டம் இரண்டில் திட்டமிடப்பட்ட மறு திறப்புகளால் ஏற்படக்கூடிய பொதுப் போக்குவரத்து ஓட்டத்தைத் தணிப்பதற்காக மிதிவண்டி விற்கும் கடைகளை திறப்பதற்கு ஆலோசிக்கப்படுகிறது. மேலும், இவற்றை வாங்குவதற்கு ஊக்குவிக்க அடுத்த பொருளாதார ஆணை ஊடாக ஒரு உதவி சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கவனத்திற்கு