குணமடைந்தவர்களின் உடலில் பிறபொருளெதிரிகள் உருவாகுகின்றன!

ஏப்ரல் 29 அன்று “Nature Medicine” என்ற மருத்துவ பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு சீன ஆய்வு ஒரு நல்ல செய்தியைத் தந்திருக்கிறது. அதாவது, “வைரசினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அனைவருக்கும் வைரசுக்கு எதிரான பிறபொருளெதிரிகள் (anticorpi) உருவாகுகின்றன, இதனால் மீண்டும் தொற்றுக்கு உள்ளாகும் சாத்தியம் குறைவாக உள்ளது” என்று ஆய்வில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது .

தற்போது இத்தாலியில் புழக்கத்தில் இருக்கும் தெளியவியல் சோதனைகளுக்கு இது ஒரு நல்ல தொடக்க புள்ளியாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில், இது தெளியவியல் நோயறிதலை நம்பகமானதாக ஆக்குகிறது. மேலும், இந்த பிறபொருளெதிரிகள் பாதுகாப்பானவையாக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்திக்கு இது நன்றாக உறுதியளிக்கக்கூடும் என்று நச்சுயிரியல் வல்லுநர் Roberto Burioni கூறியுள்ளார்.

நுண்நோக்கியில் SARS-CoV-2 (கொரோனாவைரசு)

இந்த ஆய்வின்படி: சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 285 நோயாளிகளில் COVID-19 இன் அறிகுறிகள் தோன்றிய 19 நாட்களில் 100% சதவிகிதம் அனைவரின் உடலில் SARS-CoV-2 கு எதிரான பிறபொருளெதிரிகள் உருவாக்கியுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, இவை புதிய தொற்றிலிருந்து எந்தளவிலான பாதுகாப்பினை அளிக்கும் மற்றும் எத்தனை காலங்களுக்கு இவற்றின் திறன் நீடித்திருக்கும் என்பதை பற்றியான ஆய்வுகள் மேற்கொள்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக மனித உடலில் எதிர்ப்புப்புரதங்கள் (Immunoglobuline) எனப்படும் நோயெதிர்ப்பு ஊக்குவித்தல் புரதங்கள் உள்ளன. ஒரு நபருக்கு இந்த புரதங்களில் குறைபாடு இருக்கும் பட்சத்தில், உடலில் நோயெதிர்ப்பாற்றல் குறைந்த நிலைமை நிலவும். குறிப்பாக Gammaglobuline “IgG” என்று அழைக்கப்படும் நோயெதிர்ப்பு புரதம் குறைவாக காணப்பட்டால் அந்த நபர் எளிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்.

இந்த வகையான IgG பிறபொருளெதிரிகள், நோய்த்தொற்றுக்கு உள்ளாகியவுடன் அல்லது நோயை உருவாக்கும் வெளிப் பொருட்களின் (பிறபொருளெதிரியாக்கி, antigene) வெளிப்பாட்டின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது நீண்ட அல்லது குறுகிய காலத்திற்கு கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பிற்காக செயல்பட்டு வருகிறது. அத்துடன், IgG இன் உற்பத்தி ஒரு சாதாரண நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களில் ஒரு புதிய தொற்றுநோயைத் தடுக்க போதுமானதாக இருக்கிறது.

எனவே, இந்த ஆய்வு மூலம் கொரோனாவைரசை தடுக்கக்கூடிய IgG பிறபொருளெதிரிகளின் உற்பத்தி கண்டறியப்பட்டது குறுகிய காலத்திற்கு புதிய தொற்றில் இருந்து தற்காலிகமாக பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.

உங்கள் கவனத்திற்கு