வேர்களைத் தேடும் உறவுகள்-தையிட்டி

இயற்கை வளம் மிகுந்த இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில்  வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள காங்கேசன்துறை பிரதேசத்தின் எல்லைக்கு உட்பட்ட ஒரு அழகிய கிராமம் தையிட்டி ஆகும். இலங்கையின் கரையோரப் பகுதியை மிகவும் அண்மித்த கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். தையிட்டி வடக்கு தையிட்டி தெற்கு தையிட்டி கிழக்கு என்னும் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ள  இக்கிராமத்தின் எல்லைகளாக  மேற்கில் காங்கேசன்துறையும், கிழக்கில் மயிலிட்டியும், தெற்கில் பளைவீமன்காமமும் காணப்படுகின்றன. தையிட்டி வடக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.

இது ஒரு விவசாய கிராமம் ஆகும். இங்கு கால்நடைகளின் வளர்ப்பும் பால்,நெய்,தயிர் போன்ற பால் உணவுகள் தாராளமாக கிடைக்கப் பெற்றதனாலே “தயிரிட்டி” என பெயர் பெற்ற இக் கிராமம் பின்னாளில் பெயர் மருகி தையிட்டி என்றழைகலாகிற்று. உயர்ந்த மேடுகளைக் கொண்ட இடமாக இக் கிராமம்  காணப்படுகிறது. இது வெப்பநிலை அதிகமாக உள்ள கிராமமாகும் ஆழமான நிலத்தடி நீரையும் நன்னீர் கிணறுகளையும் கொண்ட பிரதேசமாகும். இம்மண்ணில் தானியங்கள் காய்கறிகள் வெங்காயம் (சின்ன வெங்காயத்திற்கு புகழ்பெற்ற கிராமம்)  கிழங்குகள், பழங்கள் என எல்லாமே சிறப்பாக விளைய கூடியதாக அமைந்திருக்கிறது .  எமது முன்னோர்கள் சூத்திர கிணற்றில் இருந்து நீரை பெற்று விவசாயத்தை மேற்கொண்டனர். இங்கு கால்நடைகள் நீர் அருந்துவதற்காக கேணி ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கிராமத்தில் பனைமரங்கள் மிகவும் அதிகமாக உள்ளன. உலகின் மூத்த குடியான தமிழ்க்குடிக்கும், பனை மரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுபட்டது என்பதற்குச் சான்றாக  சங்க கால நூல்களான  தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பனை ஓலைச் சுவடிகள் மூலமாகவே நமக்கு பல இலக்கியங்கள் கிடைத்துள்ளன.

பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்கள் ஆகும். இவற்றை  எம் கிராம மக்களுக்குத் தந்து வளமாக வாழ பனை உதவுகிறது.

இலங்கையில் காணப்படும் சைவ சமய திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தார்.

போர்  ஆரம்பித்த காலகட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதி (கோவில் உட்பட) உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்த குடியிருப்பாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.  கோவில் இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதல்களுக்கு  இலக்கானது. கோவில் உடமைகளும் சூறையாடப்பட்டன. கோவில் பராமரிப்பின்றி பாழடைந்து .  2009  போர்   முடிவில் இராணுவத்தினர் கட்டுப்பாடுகளை சிறிதளவு தளர்த்தியதை அடுத்து, கோவில் பூசாரிகளும், பக்தர்களும் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோவிலின் 108 அடி உயரக் கோபுரம் மீளக் கட்டப்பட்டது, ஆனாலும் 1795 முதல் இருந்த கோவிலின் பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்தே காணப்படுகிறது. 2011 டிசம்பரில் இக்கோவில் தொல்லியல் பாதுகாப்புச் சின்னமாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டது.

துறைமுக நகரமான  காங்கேசன்துறை பண்டைக் காலத்தில் கயாத்துறை என அழைக்கப்பட்டது. இவ்விடம் பின்னாளிலேயே பெயர் மாற்றம் பெற்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் முதன்மையைப் பறைசாற்றுவதாக காங்கேசன்துறைப் பிரதேசம் திகழ்ந்தது. ஆதி காலத்தில் தென்னிந்திய நகரங்களுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக விளங்கிய பருத்தித்துறை துறைமுகம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் யாழ் குடாநாடு இருந்த போது யாழ் குடாநாட்டிற்கான கடல்வழி போக்குவரத்து இந்த துறைமுகம் ஊடாக நடந்தது. திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 1995இல் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பருத்தித்துறை நகரைக் கைப்பற்றியபோது இந்த துறைமுகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.  அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை  துறைமுகம 2015 வரை பாவனையற்று காணப்பட்டது.

வடக்கின் அடையாளத்தை சொல்வதற்கென்று பல இடக்குறியீடுகள் காணப்படுகின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்குவது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை. 1950 ஆம் ஆண்டு வடக்கின் சூரிய உதயமென நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலை ஒரு காலத்தில் தமிழ் மக்களின் மகத்தான பொக்கிசமாகத் திகழ்ந்தது. யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக்தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் தேவைக்காக அந்த பகுதியில் சுண்ணாம்புக் கல் எடுப்பதால் எமது தாயக நிலப்பரப்பு மண்ணரிப்புக்கு உட்பட்டதாகவும்  ஓர் தகவல் உண்டு.

ஆரம்பிக்கப்ட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. இதன் காரணமாக தொழில் முடக்க நிலை ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறித்த காலப்பகுதியில்  காங்கேசன்துறை மயிலிட்டி தையிட்டி மாவிட்டபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்த காரணத்தினால் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை அண்டிய பிரதேசங்கள் சூனியப் பிரதேசங்களாகின. குறித்த காலப்பகுதியில் இப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய இலங்கை இராணுவம் சீமெந்து தொழிற்சாலையை கையகப்படுத்தியது. அன்றில் இருந்து இன்று வரைக்கும் தொழிற்சாலையினுள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக மக்களிற்கான சேவையை வழங்கி வருகிறது. வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றம் நடைபெற்ற பின்னர் தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின்  தேவையும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் ஐந்து வைத்திய அதிகாரிகளுடன் இயங்கிய வைத்தியசாலை தற்போது அறுபது வைத்திய அதிகாரிகளுடன் சேவைகளை வழங்கி வருகிறது. இங்கு புற்றுநோய் வைத்தியசாலையும் உள்ளது . இவ் வைத்தியசாலைகளில் சேவைகளால் எம் கிராம மக்கள் பெரும் பயன் பெறுகிறார்கள்.

காங்கேசன்துறை ஊறணி என்னும் புனித பூமியில் அழகாக வானளாவ வீற்றிருந்த புனித அந்தோனியார் ஆலயம் முற்றாக இடித்தொழிக்கப்பட்ட வரலாறு எமது நெஞ்சங்களை பிளந்த ஓர் மறக்க முடியாத கரிய இருள் சூழ்ந்த கொடிய சம்பவமாகிவிட்டது. எமது வீடுகள், சொத்துக்களை அழித்ததைக் கூட பெரிதாக நினைக்கத் தோன்றவில்லை எமது நம்பிக்கையின் இருப்பிடமும் எமது கிராமத்து அடையாளமுமாக விளங்கிய ஊறணி புனித அந்தோனியார் ஆலயம் தரையோடு தரையாகி இடித்தழிக்கப்பட்டதைக் கண்டு நம்பவே முடியாதவர்களாய் கண்களை பொத்திக்கொண்டு கதறிக் கதறி அழுது நொந்தோம். கோவிலற்ற அநாதைகளாகி எமது ஆறாத் துயரை ஊறணிக் கடலிலே கரைத்தோம்.

1942 இரண்டாம் உலக போரின் போது பிரித்தானிய வான்படையின் பயன்பாட்டிற்காக நிர்ணயிக்கப்பட்டு பின்னர் நாட்டின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆக பயன்படுத்த பட்டு வந்த பலாலி விமான நிலையமும் இங்கு உள்ளது. இந்த விமான நிலையத்தால் எம் கிராம மக்கள் பல வேலைவாய்ப்புகளையும் போக்குவரத்து தன்னிறைவையும் அடைந்தார்கள். 1978ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கான விமான பயணம் தடைப்பட்டது. பின் இலங்கை வான்படை கையகப்படுத்தி தற்பொழுது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் ஒரே ஒரு விமான நிலையமாக பலாலி விமான நிலையம் காணப்படுகிறது. இவ் வானூர்தி நிலையம் ஈழப்போரில் பங்கேற்ற ஆயுதப் படையினருக்கு பயன்பட்டது. 1990களின் ஆரம்பத்தில் வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, அங்கு குடியிருந்த பொது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 1990 முதல் 2015வரை வலிகாமம் பகுதியில் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே இடம் இந்த உயர் பாதுகாப்பு வலயம் மட்டுமே.

இலங்கையின் மிக நீண்ட தொடருந்து சேவையான கொழும்பு தொடக்கம் காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவையும் இங்கு உள்ளது  .இச் சேவை எமது கிராமத்திற்கு மிகவும் அருகில் இருப்பதால் இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது . முற்காலத்தில் மக்கள் வேலைக்காகவும் கல்வி கற்கவும்  இலகுவான போக்கு வரத்துக்காகவும் இச் சேவையை பயன்படுத்தி வந்தார்கள். ஏராளமான மக்கள் வேலை வாய்ப்பையும் பெற்றிருந்தார்கள். அதுமட்டுமல்லாது புதிதாக கட்டப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சுற்றுலா விடுதியும் இவ்வூருக்கு மிக மிக அருகில் இருப்பதால் இவ்வூருக்கு அதிக பெருமையைச் சேர்க்கிறது.

அத்தோடு இக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் தமது மேல் கல்வியை தொடர்வதற்காக 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடசாலையான யூனியன் கல்லூரி  தெற்கு ஆசியாவின் முதலாவது கலவன் பாடசாலை எனும் பெருமைக்குரியது.

பொது இலவசப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கணிதம், புவியியல், திருமறை ஆகியன கற்பிக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. மதமாற்றமே மிஷனரிமாரின் முக்கிய நோக்கமாக இருந்த்தமையால் 1818இல் குடும்பவிடுதிப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டபோது ஐந்து பெண்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவ் வகையில் பெண் கல்விக்கு முதல் வாய்ப்பளித்ததோடு முதற் கலவன் பாடசாலையாகவும் இது திகழ்ந்தது. 1940ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் யூனியன் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்று சிறப்பாக இயங்கி வருகின்றது.

தேசிய பாடசாலையான யாழ் மகாஜன கல்லூரி நட்டநடுவே மைதானம், சுற்றிவர அடக்கமான வகுப்பறைகள், ஓரத்தில் மாணவர் விடுதி, அதன் அருகே அழகிய நடேஸ்வரப்பெருமாள் ஆலயம், மறுகரையில் திறந்தவெளி அரங்கம், முன்புறத்தில் வானளாவி நிமிர்ந்து நிற்கும் துரையப்பா நினைவு மண்டபம் கல்வி கற்கும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் அமைப்பைக் கொண்ட அழகிய கல்லூரியை எமது கிராமம் அருகே கொண்டதை எண்ணி பெருமை கொள்கிறேன். 1987களில் இக்கிராமம் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளானது கிராம மக்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி அயலில் உள்ள ஊர்களில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக வாழ்ந்தனர் அதன் பின்னர் தமது கிராமத்துக்கு திரும்பி சென்றனர் அதன் பின்னர் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து பல இன்னல்களை சந்தித்தனர் இந்தி இராணுவத்தினரின் ஒட்டுக்குழு இங்குள்ள பல இளைஞர்களை சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றது. அது போலவே பெண்களையும் சுட்டுக் கொன்றும்  பெண்களின்  உறுப்புகளையும் வெட்டியும் கொன்றனர்.

இது யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட ஒரு கிராமம் ஆகும். இக் கிராமத்திலிருந்து மக்கள் அனைவரும் ராணுவ நடவடிக்கை காரணமாக வெளியேற்றப்பட்டனர் அதன் பின்னர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ராணுவ வதை முகாமாகவே இக்கிராமம் இருந்தது. இந்து ஆலயங்கள் எல்லாம் பாழ் அடைந்த நிலையிலும் தையிட்டி வடக்கில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டு பாடசாலைகள் தரைமட்டமாக்கப்பட்டு வீடுகள் கட்டிடங்கள் எல்லாம் அளிக்கப்பட்டு பற்றைக்காடுகள் ஆக காணப்பட்டது.

இக் கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் மல்லாகம் சுன்னாகம் கந்தரோடை தாவடி கொக்குவில் என இன்னும் பல ஊர்களில் குடியேறினார்கள். பல வருடமாக தமது கிராமத்தை திரும்பப் பெறப் போராடிக் கொண்டிருந்தார்கள் இவ்வூர் மக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன் ஒன்று கூடி மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பல மனுக்களை பல வருடங்களாக அரசுக்கு அனுப்பி வைத்தனர் எந்த பயனும் கிடைக்கவில்லை கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களின் பின் தையிட்டி மக்களுக்கு 2015 12 29 முதற்கட்டமாக மக்கள் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர் அதன் பின்னர் ஓரிரு ஆண்டுகளில் முழு கிராமமும் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு மீண்டும் மக்கள் குடியேற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமது கிராமங்களை பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்துள்ளனர்.

இங்கு எண்ணிலடங்காத பல இந்து ஆலயங்கள் இருந்தாலும் ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த  கணைய வித் பிள்ளையார் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் எம் கிராம மக்களுக்கு மட்டுமல்லாது நாடளாவிய ரீதியில் மக்களின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய சிறப்பு மிக்க ஆலயமாக விளங்குகிறது.

நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் காங்கேசன்துறை, தையிட்டி உள்ளிட்ட வலி. வடக்கின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இவ்வனர்த்தம் காரணமாக கணையவிற் பிள்ளையார் கோயிலும் முற்றாக அழிவுக்குள்ளாகி இருந்தது.

தூதுவோடை கண்ணகி ஆலயமும் இங்குள்ளது. இவ்வாலயமும் பாரம்பரிய முறைகளைக் கொண்ட கோவிலாக  திகழ்ந்தது. இக் கோவிலும் போரின் போது பாழடைந்து அழிவடைந்ததால் தற்போது  புனரமைக்கப்பட்டு வருகிறது.

எமது தாயக விடுதலைப் போராட்டத்திற்காக எமது கிராமத்திலும் பல வீரர்கள் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்துள்ளார்கள் எமது நாட்டிற்காக என பலப்பல புதல்வர்கள் இம்மண்ணில் பிறந்து மாவீரர் ஆகியுள்ளார்கள் என எனது தாய் கூறி நான் கேட்டிருக்கிறேன். மேற்கத்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் என் பெற்றோர் தேடுவது என்னவோ எங்கள் பிறந்த மண்ணைத் தான். சொர்க்கம் என்றால் அது நமக்கு நாம் பிறந்த மண் தான் என்றுஎனது அம்மா  அடிக்கடி எமக்கு கூறிக் கொண்டிருப்பார். வீர காவியமாகி போனவர்கள் விவரம் சில.

திலீபன் தமிழ்ச்சோலை பியல்லா
செல்வி நிஷாந்தன் நிஷானிகா

உங்கள் கவனத்திற்கு