இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற சுனாமி அனர்த்தத்தின் 17வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

உலகையே உலுப்பிய சோகவரலாற்றுச் சம்பவங்களில் ஒன்றான சுனாமி ஆழிப்பேரலையின் 17வது ஆண்டு நினைவுதினம் இன்று. 24/12/2004 அன்று இந்து சமுத்திரத்தின் ஆழியில் ஏற்பட்ட பிளவுகள் பூகம்பமாகி, இந்தோனேசியாவின் சுமாத்திரா கடலிலிருந்து சுமார் ஆறுமீற்றர் உயரம் கொண்ட இராட்சதப் பேரலையாக நிலம்நோக்கிப் புறப்பட்டது. இந்தோனேசியா, ஈழம், இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் உட்பட 27 தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை அது காவு கொண்டது. ஆழிப்பேரலையின் கோரப்பசி 23000ற்கும் மேற்பட்ட தமிழீழ மக்களின் உயிர்குடித்தது. அந் நாளில் உயர்நீத்த எமது தாயக உறவுகளுக்கான நினைவுவணக்க நிகழ்வு இன்று பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் இடம்பெற்றது. இவ் வணக்கநிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், திலீபன் தமிழ்ச்சோலை மற்றும் மாலதி கலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், இளையோர் அமைப்பு உறப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர். இந் நிகழ்வின்போது அகவணக்கம், மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் என்பன இடம்பெற்றதுடன் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத துயரச்சம்பவமாக நிகழ்ந்த இவ் இயற்கை அனர்த்தம் தொடர்பான நினைவுப்பகிர்வும் இடம்பெற்றிருந்தது.

உங்கள் கவனத்திற்கு