மே 18: சிங்கள வெறியாட்டத்தின் உச்சம்

பச்சைப் பசேலாக மின்னிய எம் தேசம் இரத்த வெள்ளத்தில் மிதந்தது ஏனோ?
வீதிகளெங்கும் எம் உறவுகளின் புன்னகைக்குரல் அவலக்குரலாக மாறியது ஏனோ? எதிர்காலத்துக்கான கனவுகள் நிரம்பிய கண்கள் நிரந்தரமாக மூடப்பட்டது ஏனோ?
சிங்கள வெறியாட்டத்தின் பார்வையாளராக இன்று சர்வதேசம் நிற்பது ஏனோ?

சிங்களத்தின் கோரத்தாண்டவம் உச்சம் எட்டியது முள்ளிவாய்க்கால் மண்ணில். வாழ்வு தேடி பயணித்த எமது மக்கள் மீது ஈவு இரக்கமின்றி குண்டுமழை பொழிந்து கொத்துக் கொத்தாக கொன்று குவித்தான் சிங்களக் காடையன். ஒரு நேர உணவின்றி, அருந்துவதற்கு தண்ணீர் இன்றி, குணப்படுத்த மருந்துகள் இன்றி ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளைச் சொல்ல வார்த்தைகள் போதாது. எதையுமே பொறுப்படுத்தாமல், பொதுமக்கள் பதுங்கியிருந்த இடங்களை அடையாளம் கண்டு, தனது இனவெறியை தீர்த்துக் கொண்டது சிங்கள அரசு. உடல்கள் சிதறிக்கிடக்க, அவற்றை தாண்டி பகைவனின் குண்டிலிருந்து தப்பிக்க முயன்ற எம் தமிழ் உறவுகளின் ஓலக்குரல் இன்றும் எமது உள்ளங்களை கிழிக்கின்றது. ஒரு கையில் வாழ்வையும் மறு கையில் மரணத்தையும் பிடுத்துக் கொண்டு நந்திக்கடல் ஓரம் வந்த எம் தமிழ் மக்களுக்கு காத்திருந்தது அரவணைப்பா? இல்லை! இனவழிப்பு!

எதற்காக சாகுறோம் என்று அறியாத குழந்தைகள், தன் பிள்ளைக்கு கொடுப்பது கடைசிப் பால் என்றறியாத தாய், மனைவி பிள்ளைகளை தொலைத்து விட்டு மரணத்தை காத்திருந்த தந்தை, இவ்வாறு வாழ்விற்கு போராடிய எம் தமிழ் உறவுகளின் உயிர்கள் காட்டுமிராண்டித் தனமாக அறுக்கப்பட்டன.
“சுதந்திர தமிழீழத்தில் மீண்டும் சந்திப்போம்” என்று கூறி களமுனைக்கு சென்ற அண்ணாக்களும் அக்காக்களும் இன்று எம்முடன் இல்லை. “திரும்ப கதைப்போமா தெரியாது தங்கச்சி” என்று சொல்லி தொலைபேசியில் விடைபெற்ற அண்ணா இன்று இல்லை. அவர்கள் உயிர் திறந்தது எமக்காக. எம்மை சுதந்திர மண்ணில் வாழ வைப்பதற்காக. வாழும் வயதில் ஆயுதம் ஏந்தி எமது தமிழீழத்திற்காக வீரத் தலைவன் விதித்த பாதையில் வாழ்ந்தார்கள், போராடினார்கள், வீர காவியம் படைத்தார்கள். அவர்களின் கனவு கனவாகவே போவதற்கு இன்னும் வழி வகுக்கிறது சிங்கள இனவாதம்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பதை சிங்கள அரசும் சர்வதேசமும் ஏற்க மறுக்கிறது. தமிழ் என்னும் ஒரு இனம் வாழ்ந்ததற்கான அறிகுறியே இல்லாமல், தமிழர் அடையாளங்களை அழித்து, தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து, சிங்கள மயமாக்க நகரும் அரசுக்கு சர்வதேசம் மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனத்திற்கு எதிராக உரத்த குரல் கொடுக்கும் தமிழர்கள் மீது தடை விதிக்கப்படுகின்றது. உரிமைக்காக போராடும் ஒரு இனத்தின் விடுதலை இன்று பூகோள அரசியலால் பின்னடைகின்றது. இது தான் இன்றைய யதார்த்தம். வாழ்வோ சாவோ என்றதல்ல தமிழர்களின் போராட்டம். வாழ்வுரிமைக்கான போராட்டம். லட்சக்கணக்கான உயிர்கள் சிதைக்கப்பட்டதற்கான நீதிக்கான போராட்டம். அந்த நீதி கிடைக்கும் வரை, சுதந்திர தமிழீழம் மலரும் வரை ஓயோம் என இந் நாளில் சபதம் எடுத்துக் கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உங்கள் கவனத்திற்கு