12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern, Switzerland பாராளுமன்றத்தினை வந்தடைந்தது.

வாழ்வே போராட்டமாக மாறிய இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்த மாவீரர்களின் வழித்தடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது எம் மக்களின் புரட்சி. கிளைபரப்பி புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களாகிய எமது ஆணிவேர் தாயகத்திலே ஆழ வேரூன்றி நிற்கின்றது. கல்வி மான்களாகும் வாய்ப்புக்களை இழந்து ஏதிலிகளாக சிங்களப் பேரினவாத அரசின் கொடூரப்பிடிக்குள் சிக்குண்ட போதும் தம் இனம் வாழ போராட்டக்களத்தில் குதித்த மாவீரர்களின் வேணவாவில் நாம் இன்று வாழ்ந்து வருகின்றோம்.

எமது மாவீரர்களின் இலட்சியப் பிடிப்பே எம்மை இன்றும் இயக்கிக்கொண்டுள்ளது என்பதில் ஐய்யமில்லை. அந்த வகையிலே புலம் பெயர் தேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பல தடவைகள் அறவழிப்போராட்டங்களையும், பெரும் உயிர் தியாகங்களையும் புரிந்து இன்று அறவழியிலே தம்மை வருத்தி இச் சர்வதேசத்திடம் நீதியினை கேட்க பல வழிமுறைகளில் போராடி வருகின்றோம்.

2009 ம் ஆண்டு தமிழீழ மீட்புப் போராட்டத்தின் ஆயுதவடிவப் போர் மெளனிக்கப்பட்டதும் பெரும் திரளாக எமது தமிழ் மக்கள் ஐரோப்பிய வீதிகள் எங்கும் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்ததன் முதற் படியே இன்று தமிழின அழிப்பினை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு சேர்த்தது. அந்த வகையிலே தொடர்ந்தும் சோர்வுறாது 22ஆவது தடவையாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் மற்றும் தமிழீழமே எமக்கான நிரந்தர தீர்வு என்பதனை சர்வதேச மட்டத்திலே பல வழிகளில் பதிவு செய்தும் அழுத்தங்களையும் கொடுத்தவண்ணமே இருக்கின்றோம். அந்த வகையில் 12ம் நாளாக ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சு மற்றும் முக்கிய அரசியல் மையங்களின் ஊடாக தமிழின அழிப்பிற்கு பொறுப்புக்கூறும் வகையில் சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்தி நியாயமான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்பதோடு எமக்கான நிரந்தர தீர்வாக தமிழீழமே அமைய முடியும் என மனித நேய ஈருருளிப்பயணப் போராளிகள் வெளிப்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையிலே சென்ற 08.02.2021 அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் ஐ.நா முன்றலை நோக்கி நெதர்லாந்து, பெல்சியம், லக்சாம்பூர்க், யேர்மனி நாடுகளை ஊடறுத்து நேற்றைய தினம் (18.02.2021) சுவிசு நாட்டின் எல்லையினை வந்தடைந்ததினை அனைவரும் அறிவீர்கள்.

இன்று (19.02.2021) சுவிசு நாட்டின் இளையோர்களின் பங்களிப்புடன் பெரும் ஏற்றங்கள் மற்றும் எதிர்காற்று என இயற்கையோடு போராடி Bern,Switzerland ல் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் முன்றலில் தாரகமந்திரத்தோடு இனிதே நிறைவு பெற்றது. மீண்டும் நாளை 20.02.2021 எமது இலக்கு நோக்கி இலட்சிய உறுதியோடு பயணிக்க மாவீரர்கள் மற்றும் இயற்கையின் பாதுகாப்போடு பயணிப்போம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

உங்கள் கவனத்திற்கு