உலகம் பார்த்து வியந்த தமிழீழக் காவல் துறை

எம் தமிழீழத்தில் எமது தானைத் தலைவன் மாண்புமிகு பிரபாகரன் அவர்கள் ஒரு அரசாங்கத்தை நடத்தினார். அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது. லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் என்றாலே என்னவென்று தெரியாது! ஏழை பணக்காரர் என்ற பேதம் இல்லை! மேலும், இவ் அரசாங்கத்தின் மிக முக்கியமான தலைசிறந்த அமைப்பு காவல் துறை.

1991 கார்த்திகை 19ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்டது.  

தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக் காவல்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது « தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களோடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்மந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். தமிழீழ காவல்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும் »

குறிப்பு:- சிங்கள காவல்துறையினரால் யாழ். பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருநீல காட்சட்டை + இளநீலத்தில் மேற்சட்டையும் அணியும் தமிழீழ காவல் துறை உறுப்பினர்கள் நிச்சயமாக ஐரோப்பிய காவல்துறையை  நினைவுபடுத்துவார்கள். ஐரோப்பியரிடம் இருக்கும் கம்பீரம் அவர்களிடமும் இருக்கும்.  தமிழீழ காவல் துறைக்கு யாரும் லஞ்சம் கொடுக்க முற்பட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்ககப்படும்.

அரசியற்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன்

எம்  சமூகச் சூழலில் முரண்பாடுகளும், மோதல்களும், கசப்பும், காழ்ப்புணர்ச்சியுமே மனிதர்களின் இயல்பாகிப்போகிறது. இதனால்தான் சமூக வாழ்வில் சில வரையறைகளும், நியதிகளும் தவிர்க்க முடியாத தேவைகள் ஆகின்றன. இந்த வரையறைகளை வடிவமைத்து மக்களின் மத்தியில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதே ஒரு அரசாங்கத்திற்கான காவற்துறையின் பணியாகும். அதிலும் போராடும் ஒரு தேசத்தின் நடைமுறை யதார்த்தம் மிகவும் சிக்கலானது. மக்களது இயல்பு வாழ்வே குழம்பிப்போயிருக்கும்போது சட்ட ஒழுங்கை மேற்கொள்வது கடினமானது.

எனினும் எமது தமிழீழத்தைப் பொருத்தவரை தேச விடுதலையுடனான சமூக விடுதலையையும் முன்னெடுக்கும் கொள்கைக்கு அமைவாக மக்களின் இயல்பான நிம்மதியான வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு பலமிக்க கட்டமைப்பாகவே தமிழீழக் காவற்துறை உருவாக்கப் பட்டுள்ளதை நாம் அறியமுடியும். உலக நாட்டிலேயே அதி சிறந்த காவல் துறையில் எமது தமிழீழ காவல்துறையும் ஒன்று எனக் கூறுவதில் எந்தவித ஐயமும் இல்லை.

மேலும் எடுத்துக்காட்டுக்கு காவல்துறையின் சீர்கேடுகளுக்கு  சிங்கள காவல் துறையை எடுத்துக்கொண்டால் எமது தமிழீழப் பிரதேசங்களில் இருந்து வரும் மக்களை  சிங்கள காவல்துறை சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்வதும், தமிழ்ப்பிரதேசங்களில் சோதனை முகாங்களைக் கிட்டத்தட்ட 10 நிமிட தூர பயண இடைவெளிக்கு ஒன்றாக வைத்து மக்களின் மனநிலையை சீர்குலைத்தல், லஞ்சம் என்று சொல்லப்படுகின்ற பணத்துக்கு முன்னுரிமை கொடுத்து தங்களுக்கு ஏற்றாற்போல் மக்களை வழி நடத்தல், சிங்கள அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு வடிவம் கொடுக்கும் அரச அலகாகும். தமிழ் மக்களை அழிக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை தவரான வழிகளில் பயன்படுத்தி தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கூட வழங்காது அச்சுறுத்தி காணமல் போகச்செய்தல்; சமூகவிரோத செயல்பாடுகளை தமிழர் தேசத்தில் செயல்பட அனுமதிப்பதன் மூலம் எமது வருங்கால சந்ததியை சீரழித்தல் என சிங்கள காவல் துறை சட்ட ஒழுங்கை மீறி செயற்படுவதும், காவல் துறைக்கு உரிய விதிமுறைகளை மீறி தமிழ் மக்களை துன்புறுத்துவதும் தான் அவர்களுடைய தலையாய கடமையாக இருக்கிறது…, இருந்தது.

ஆனால் எம் காவல்துறையின் ஒழுங்கு நடவடிக்கையில் மிக முக்கியமானதொன்று காவல்துறை அமைப்பு விதிகளுக்கு முரணாக செயற்படும் எந்த உறுப்பினர் மீதும் காவல் துறை பொறுப்பாளர் உடன் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார். எம் தமிழீழ காவல்த் துறையில் இருப்பவர்கள் தேசப் பற்று உடையவர்களாகவும், கண்ணியம், நேர்மையும் மிக்கவர்களாகவும், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்தல் பழக்கமற்றவர்களாகவும், லஞ்ச ஊழல் என்பனவற்றுக்கு உட்படாதவர்களாகவும், தங்களுடைய சேவையிலே மிகவும் விசுவாசமாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் நடந்து கொள்பவர்களே தமிழீழ தேசிய காவல் துறையினர். தமிழீழ தேசம் எதிர்கொண்ட இயற்க்கை அனர்த்தங்கள், போர்ச்சூழல் என அனைத்து துன்பங்களிலும் மக்களுக்கான சேவைகளையும் மிகவும் அர்ப்பணிப்புடன் முள்ளிவாய்க்கால் வரை சிறப்புற செய்ததை இந்த அகிலமே வியந்து பார்த்த தமிழீழத் காவல்துறையும், எமது அரசாங்கமும் முற்றுமுழுதாக மௌனிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ளது.. “எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் எம் சுதந்திரத்திற்காகப் போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஆக்கம்: Napoli திலீபன் தமிழ்ச்சோலை

உங்கள் கவனத்திற்கு