சமுதாய முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா ” என்று பெண்ணின் பிறப்பையே பெரும் பேறாய் கருதிப்பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

சமுதாயம் முன்னேற ஆணவரைக் காட்டிலும் பெண்களின் பங்கு மகத்தானது. சமுதாயத்தில் பெண்களுக்கு என்றுமே சிறப்பிடமுண்டு. முற்காலத்தில் தமிழ்மக்கள் தம் வாழ்வில் மகளிருக்குத் தனியிடமளித்துள்ளனர் என்பதை சங்க நூல்களிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ஒளவையார், காக்கை பாடினியார் போன்ற பெண்பாற் புலவர்கள் பெருமை (பீடு) பெற வாழ்ந்த வரலாறுமுண்டு.

இறைவன் படைப்பில் ஆண், பெண் இருபாலாரும் சமமே. ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றும் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றும் பேசுதல் பேதைமையாகும். குறிப்பாகப் பெண்கள் அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவர்கள். அன்னை தெரேசா உலகிலுள்ள அநாதைக் குழந்தைகளுக்கும் ஆதரவற்ற அனைத்து உள்ளங்களுக்கும் கருணையுள்ள தாயாகத் திகழ்ந்தார்.

கற்பின் உணர்வே பெண்மை என்பதை ஐம்பெரும் காப்பியங்களில் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் உயர்வை எடுத்துக் கூறியுள்ளார்கள்.

உயிரின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், வாழ்விற்கும் பெண்ணே முதன்மையானவள்.

19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த பெண்கள் பலர் உண்டு. அதில் வேலுநாச்சியார் முக்கியமானவர். இவர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வீரமங்கை.

இந்தியாவில் வெளியிடப்பட்ட ராணி வேலு நாச்சியார் முத்திரை

தமிழீழத்திலுள்ள வளங்கொழிக்கும் மட்டு நகரில்  இந்தியா இராணுவப்படையை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதத்தை “அன்னை பூபதி” அம்மாள் மேற்கொண்டார். இவர் காந்தியவழியில் தியாகத்தையும் வீரத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார். இதனாற்றான் பெண்ணைத் தியாகத்தின் சின்னமாகவும் கடமையின் காப்பாகவும் பொறுமையின் இருப்பிடமாகவும் போற்றினார்.

அன்னை பூபதி

அத்தகு சிறப்பு மிகு பெண்களை இழிவுப்படுத்தும் வேதவிதிகளும் சமூக மதக்கொடுமைகளும் இடைக்காலத்தே புகுந்தன. இதன் பேறாகப் போற்றிப் பேணப்பட்ட பெண்குலம் தாழ்வுற்றது. “அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு” எனக்  கேட்டனர்.

பெண்ணடிமைத் தளைகளைத் தகர்தெறிந்து ஆணுக்கிங்கே பெண்சமனென அறைகூவல் விடுத்தார் பாரதியார்; “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்து வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் அளைப்பில்லைக் காண் ” என்று அவர் முழங்கிய பின்னர் தான் பெண்ணுரிமை பரவத்தொடங்கியது. மகளிர் வாழ்வில் புதிய ஒளிமலர்ந்தது பெண்கள் விழித்தெழுந்தனர்.

பெண்கள் சமூகம், அரசியல், பொருளாதாரம், அறிவியல் துறை, மருத்துவத்துறை, சட்டத்ததுறை, காவற்துறை, இலக்கியத்துறை போன்ற துறைகளில் பங்கு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

இன்று பெண்கள் சகலதுறைகளிலும் ஆண்களோடு சரிநிகர் சமனாகப் பங்கு கொண்டு வருகின்றனர். சமுதாயத்தின் பல்வேறு ஆக்கப் பணிகளிலும் அவர்கள் ஈடுபடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழீழ காவற்துறையில் பெண் அதிகாரிகள்

இதன் அடிப்படையில் “பெண்விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி” என்று கூறியவர் எம் தமிழீழத் தேசியத் தலைவர மேதகு வே. பிரபாகரன் அவர்கள்; தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தில் தமிழீழ அரசின் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஆழுமை உள்ளவர்களாக உருவாக்கி பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிந்ததை உலகம்பார்த்து வியந்தது யாவரும் அறிந்ததே. 10.10.1987 அன்று இந்தியப்படைகளுடன் நடந்த தாக்குதலில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப் மாலதி தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் பெண் மாவீரர் ஆவர். அந்நாளையே தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக  பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின், மகளிர்களுக்கான படைஅணிகணில் ஒன்றிற்கு மாலதிபடையணி என பெயர்சூட்டப்பட்டது. அப்படையணியானது தமிழ் மக்களைக் காக்கும் நோக்கோடு சிங்கள படைகளை எதிர்கொண்டு தனது வீரத்தை உலகிற்குக்காட்டி நின்றது.

அதனைத்தொடர்ந்து முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி “தமிழீழப் பெண்களின் வீரத்திற்கு இலக்கணமாய் எனது சாவு அமையும் எனக்காக யாரும் கலங்கக்கூடாது ” என்று கூறிய வண்ணம் தனது கையை அசைத்துக்கொண்டு அந்தக் கடற்கரைக் காற்றில் கலந்து கொண்டு தன் வீரத்தை எடுத்துக்காட்டி தியாகியானாள்.

“சாதிக்கத்துணிந்துவிட்டால் சாதாரண மனிதனும் சாதிக்க முடியும்” எனும் எமது தேசியத்தலைவரின் எண்ணத்திற்கு ஏற்ப வீரமங்கைகள் அனைவரும் வித்திட்டார்கள்.

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

தழிழ்மறை தந்த திருவள்ளுவர் வாழ்க்கைத்துனை நலம் பற்றிக் கூறும் போது இல்லறவாழ்வில் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் துணைவர் எனக் கொண்டு ஒற்றுமையோடு செயற்பட்டால் வாழ்க்கை சிறப்புறும் பண்பட்ட சமுதாயம் உருவாகும் என்கிறார்.

தொட்டிலை ஆட்டும் கையே உலகை ஆளும் கை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகிலே பெண்களே இன்று முன்னிலையில் திகழ்கின்றார்கள். சனாதிபதி முதல் உயர்நீதிமன்றம் வரை பல்கலைகழகங்கள் தொட்டுப் பாடசாலைகள் வரை பாராளுமன்றம் தொட்டு உள்ளூராட்சிச்சபைகள் வரை பெண்கள் உயர்ந்த பதவியில் இருப்பதைக் காணமுடிகிறது. இத்தகு சிறப்புக்கள் பெண்கள் பெற்றிருந்த போதிலும் அவர்களது உரிமைகளுக்கு வேட்டுவைக்கும் சில நிகழ்வுகள் இன்னும் காணப்படுகின்றன.

வரதட்சணை என்ற பெயரால் சீதனக் கொடுமையால் கன்னியர் பலர் கண்ணீருடன் காலங்கழித்திடும் அவலநிலையும் காணப்படுகிறது. பெண்களை வெறும் போகப் பொருளாகவும் பெண்களை விளம்பரப்பொருளாகவும் வியாபாரப்பொருளாகவும் சிலர் நடத்துகின்றனர். இந்த நிலை மாறவேண்டுமாயின் சமூகம் விழிப்புற வேண்டும்.

சமூகப்பணிகளில் பெண்கள் துணிச்சலுடன் ஈடுபடுவதன் மூலமே இக் கொடுமைகளை ஒழித்திட முடியும். சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டியது அவசியமாகும். எனவே நமது நாடு வளம் பெறவும் நங்கையர் வாழ்வு சிறப்புறவும் சமுதாய முன்னேற்றத்தில் பெண்கள் துணிச்சலுடன் பெரும் பங்கேற்க்க தமிழீழ பெண்கள் எழுச்சி நாளில் உறுதி கொள்வோம்.

உங்கள் கவனத்திற்கு