இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களின் திட்டங்கள்

புலத்தில் பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண் மீது எமது இளையோர்கள் கொண்டிருக்கும் பற்றின் சான்றாக தொடர்ச்சியான முறையில் பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த வருடம், இத்தாலி வாழ் தமிழ் இளையோர்கள் ஆரம்பித்து வைத்த “உறவை வளர்ப்போம்” எனும் பெரும் திட்டத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். தாயகத்தில் உள்ள எமது தமிழ் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை சேகரித்து அனுப்புவதே இத் திட்டத்தின் முதலாவது இலக்காக அமைந்தது. இதனை அடுத்து, இதன் இரண்டாவது கட்டமாக, தாயகத்தில் பாதிக்கப்பட்ட எமது மாணவச் செல்வங்களுக்கு, துறைசார்ந்த ஆசிரியர்களால், மீட்டல் வகுப்புகள் நடத்துவதற்கான ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான துண்டுப் பிரசுரங்களை குறுகிய நாட்களுக்குள் தயார் படுத்தி, இத்தாலி வாழ் தமிழ் மக்களின் ஒரு சிறிய பங்களிப்பையும் கோரி இத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர் எமது இளையோர்கள்.

ஈழத்திற்கும் புலத்திற்கும் இடையிலான உறவை வளர்த்து, அதனை பேணி பாதுகாத்து வரும் அதே வேளையில், தமிழ்ர்களுக்கென்ற ஒரு சுதந்திர தமிழீழம் மலர வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களின் வீரத்தை மறவாமல் அவர்களின் கனவை நெஞ்சில் சுமந்து பணியாற்றி வரும் எமது இளையோர்களின் திட்டங்கள் பல்வேறுபட்டவை. அந்த வகையில், தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஒரு புத்தகம் தமிழ் மற்றும் இத்தாலி மொழியில் வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, எமது தாயகம் நோக்கிய ஒன்றுப்பட்ட சிந்தனையுடன் அயராமல் செயற்பட்டு வருகின்றனர் எமது தமிழ் இளையோர்கள். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!” என லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் கூற்றுக்கு இணங்க எமது மாவீரர்கள் கண்ட கனவு நனவாகி தமிழர்கள் விடுதலை பெறும் வரை இவர்களுடைய சேவை மென்மேலும் வளர வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு