தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவுகூரல். Reggio Emilia திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் ஆக்கம்

விடுதலை யாகத்தில் வித்தான வீரன் லெப்.கேணல் திலீபன்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் ஊரெழு என்னும் கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி நவம்பர் மாதம் இராசையா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக திலீபன் பிறந்தார். இவரது இயற்பெயர் இராசையா பார்த்தீபன். சிறுவயதில் தாயாரை இழந்து தகப்பனாரின் வழிநடத்தலிலும் அண்ணன்மாரின் அரவணைப்பிலும் செல்லப் பிள்ளையாகவும் வளர்ந்தார், இவருடைய சகோதரர்கள் கல்வியில் எப்படி திறமையானவர்களோ அதுபோலவே திலீபனும் கல்வியில் மிகவும் திறமையானவராக திகழ்ந்தார்.

இவருடைய இலட்சியம் தான் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று மிகவும் ஆர்வத்தோடு கல்வி கற்று வந்தார். அந்த வேளையில் தான் எமது தாயகத்தில் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை கண்ணீரால் எழுதப்பட்டது. எமது தேசத்தில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் ஏற்படுத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கை பல மாணவர்களை பாதிப்படைய வைத்தது. 1980 காலப் பகுதியில் சிறீலங்கா படைகள் பல்வேறு அடக்குமுறைகளையும், பெண்கள் மீதான வன்புணர்வுகளையும் அரங்கேற்றினர். எனவே அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்தாலே எம் ஈழம் எமக்கு கிடைக்கும் என நம் தேசத்திலுள்ள இளைஞர்களின் மனம் எல்லாம் தீயாய் கொதித்து எழுந்தது. திலீபன் அவர்களும் மருத்துவ பீடத்துக்கு தெரிவானார். ஆனால் அவருடைய மனமோ அக்கினி தீயாய் கொதித்தெழுந்து,
மருத்துவராகி கத்தி பிடிக்க வேண்டிய கை மண்ணுக்காக துப்பாக்கி பிடிக்க எண்ணி தமிழின உணர்வோடு பொங்கி எழுந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சிய உறுதியை சரியாக இனங்கண்டு அவ் அணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவ் வேளையில் திலீபனுடைய வயது 24. அவரது எண்ணமெல்லாம் ஒன்றேதான், தன்னுடைய மக்களுக்கு சுதந்திரமான வாழ்க்கை பெற்றுத்தர வேண்டும் என்பதே.

லெப் கேணல் திலீபன் அவர்கள் அவரது உண்ணாவிரத போராட்த்தின் போது

தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்த திலீபன் இராணுவ பயிற்சியில் மிகவும் திறமை உள்ளவராக இருந்தார். எமது தேசியத் தலைவருக்கு மிகவும் பிடித்தவராகவும், கொடுக்கப்படும் பொறுப்புகள் அனைத்திலும் அதி உயர் திறன் செயற்பாட்டை உறுதிப்படுத்தியதாலும் நமது தலைவரால் இவருக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பதவியையும் வழங்கப்பட்டது. இவருடைய அறிவுக்கூர்மையும் தந்திரோபாயங்களையும் கண்டு நமது தலைவர் வியந்தது உண்டு . எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களையும் வீர காவியங்களையும் செய்திருக்கின்றது. ஆனால் திலீபன் அவர்கள் இந்திய அரசின் போக்கை அறிந்து
ஆயுதப் போராட்டத்தால் சாதிக்க முடியாததை, வியக்கத்தக்க விதமான அகிம்சை வழியில் தான் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை தலைவரிடம் தெரிவித்தார். தலைவரோ இதை ஏற்க மறுத்து எவ்வளவோ புரியவைத்தார். ஆனால் திலீபனோ பிடிவாதமாக இருந்து தன்னுடைய முயற்சியால் பழந்தமிழ் மன்னனான சங்கிலியன் அரசாண்ட நல்லூரில் அதுவும் தமிழ்க் கடவுளின் சந்நிதியில் 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு மற்றும் நீர் அருந்தாத போராட்டத்தை ஆரம்பித்தார் . அவையே

  1. மீளக்குடியமர்த்த என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்
  2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
  3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும் .
  4. தமிழர்களின் பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் .
  5. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

இந்த ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து தொடங்கிய உணவுதவிர்ப்பு மற்றும் நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் வலிகளையும், வேதனைகளையும் தாங்கி எந்த ஒரு முடிவும் இல்லாமல் 26 ஆம் திகதி புரட்டாதி மாதம் 1987ஆம் ஆண்டுஇவருடைய உயிர் பிரிந்தது. அகிம்சை வழியும் தோற்றுப்போனது. திலீபனின் பூதவுடலை காண்பதற்காக மக்கள் வெள்ளமாய் திரண்டனர். கதறி அழுதனர். தியாகி திலீபனின் இழப்பு பெரும் சோகமானது உன்னதமானவரின் நினைவுகள் என்றும் எங்கள் மனதில் நீங்காத நினைவுகளாக காலம் காலமாய் உன்னுடைய தியாகம் பாரெங்கும் புகழ் பரப்பி நிற்கும். பட்டி தொட்டியெல்லாம் உன்னுடைய புகழ் பரப்பி வாழ்ந்து கொண்டிருக்கும்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”.
நன்றி.

திலீபன் தமிச்சோலை றெஜியோ எமிலியா

உங்கள் கவனத்திற்கு