பழந்தமிழர் பண்பாடுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் நன்றி கூறுதல் எனும் மரபிற்கேற்ப கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தைப்பொங்கல்த் திருநாளான தமிழர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பியல்லா திலீபன் தமிழ்ச்சோலையும் பியமொந்தே தமிழ்ச் சங்கமும் இணைந்து நடாத்திய தமிழர் விழா கொண்டாட்டமானது 28/01/2024 அன்று திரிவேறோ கலாச்சார மண்டபத்தில் 11.00 மணியளவில் பொங்கல் வைப்பதுடன் ஆரம்பமாகி கதிரவனுக்குப் படையலிட்ட பின்னர் மதிய உணவு வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடி ஏற்றல், அகவணக்கம் மற்றும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றல் என்பவற்றைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு பியல்லா திலீபன் தமில்ச்சோலை ஆரம்பித்த காலத்தில் முதல் மாணவர்களை இணைத்துக் கொண்ட பெற்றோர்களில் ஒரு பகுதியினர் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து வரவேற்புரை நடைபெற்றது. பக்திப் பாடலைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது. கவிதை, பேச்சு, தாயகப்பாடலுக்கான நடனம், கிராமியப் பாடலுக்கான நடனம், நாடகம் மற்றும் இசைக் கருவிகளின் இன்னிசை என மாணவர்களின் நிகழ்வுகள் சிறப்புடன் நிகழ்ந்தேறியது. அத்துடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து வழங்கிய “புலம் பெயர் தேசத்தில் இளையோரும் தலைமுறை இடைவெளியும் ” என்ற தலைப்பில் கருத்தாடுகளம் நடைபெற்றதைத் தொடர்ந்து அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வில் அதிதிறன் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் பொறுப்பாளர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு சிறப்புரையும் ஆற்றப்பட்டது. நன்றியுரையினைத் தொடர்ந்து தேசியக்கொடி கையேற்றலுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் ஒலிக்கவிடப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு