பலெர்மோவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் சு.சச்சிதானந்தம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

03/03/2021 அன்று COVID-19 தொற்றுநோயின் பாதிப்பிற்குள்ளாகி உயிர்நீத்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் கீழ்ப்பிராந்திய நிர்வாகப் பொறுப்பாளர் “நாட்டுப்பற்றாளர்” சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் இன்றைய தினம் நடைபெற்றது. “குஞ்சண்ணை” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இவர், தன்னை ஒரு விடுதலைச் செயற்பாட்டாளராக இணைத்து தேசியச் செயற்பாடுகளில் நீண்டகாலமாக ஆர்வத்துடன் ஈடுபட்டவர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையை சிரம்தாங்கி, மாவீரர்களது கனவுகளை நனவாக்கும் உறுதியோடு தீவிரமாகச் செயற்பட்டவர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகப் பொறுப்பாளராகப் பணியாற்றிய காலப்பகுதிகளில் தாயக உறவுகளின் வாழ்வியல் மேம்பாட்டிற்காகவும், பலெர்மோவாழ் தமிழ் மக்களின் நலனுக்காகவும் அயராது உழைத்த திரு. சு. சச்சிதானந்தம் அவர்கள் கொரோனா பேரிடர்காலப் பகுதியிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் அரும்பணியாற்றினார். இறுதிவரை விடுதலைப் பற்றுறுதியுடன் செயற்பட்ட இவரது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் “நாட்டுப்பற்றாளர்” என்ற மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.

தனது அன்பாலும் பொறுமையாலும் இத்தாலிவாழ் தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம்வகிக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ்ப்பிராந்திய நிர்வாகப் பொறுப்பாளர் “நாட்டுப்பற்றாளர்” சு. சச்சிதானந்தம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள், இத்தாலிய பிரமுகர்கள், திலீபன் தமிழ்ச்சோலை மற்றும் மாலதி கலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது வீரவணக்கத்தைச் செலுத்தினர். பொதுச்சுடரேற்றலுடன் வணக்கநிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து, திரு. சு. சச்சிதானந்தம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது துணைவியார் மலர்மாலை அணிவிக்க, இத்தாலியப் பிரமுகர் நினைவுச் சுடரினை ஏற்றிவைத்தார். அதனையடுத்து அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன இடம்பெற்று, “நாட்டுப்பற்றாளர்” திரு. சு. சச்சிதானந்தம் அவர்கள் தொடர்பான நினைவுகள் பகிரப்பட்டன.

உங்கள் கவனத்திற்கு