சர்வதேச கல்வி தினம்

கல்வி என்பது ஒரு மனித உரிமை, பொது நன்மை மற்றும் பொதுப் பொறுப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான கல்வியின் பங்கைக் கொண்டாடும் வகையில், சனவரி 24ஆம் திகதியை சர்வதேச கல்வி தினமாக அறிவித்தது.
மேலும், இன்று, 258 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இன்னும் பள்ளிக்குச் செல்வதில்லை; 617 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் அடிப்படைக் கணித அறிவு அற்றவர்கள்; பெண்கள் மற்றும் இளம்பருவத்தினர் இன்னும் உலகின் சில பகுதிகளில் ஒரே மாதிரியான கல்வி வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 40% க்கும் குறைவான பெண்களே கீழ்நிலைப் பள்ளியை முடித்துள்ளனர், மேலும் நான்கு மில்லியன் அகதிகளாக இருக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளிக்குச் செல்லாத நிலையில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

இன்று அதிவேகமாக வளர்ந்து வரும் இச் சமுதாயத்தில் கல்வியின் பங்கு இன்றிமையாததொன்றே ஆகும். கல்வியில்லேயேல் சிறப்பான எதிர்காலம் இல்லாது என்ற நிலை தோன்றிவிட்ட காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.

இந்தநிலையில், அன்றுதொற்று இன்றுவரை ஈழத்தில் தமிழ் மக்களின் கல்வி நிலையை சீர்குலைத்து இளையோர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக நின்றுகொண்டு இருக்கிறது சிறிலங்கா அரசாங்கம்.

தமிழ் மாணவர்கள் சிறுபான்மையினராக இருந்த போதும் வளக்குறைவான நிலையிலும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் கல்வி பயின்று வந்ததால் பல்கலைக்கழக அனுமதியில், குறிப்பாக பொறியியற்றுறை அனுமதியில், இனவிகிதாசாரத்துக்கு மேற்பட்ட இடங்களை பெற்று வந்தனர். திறமை அடிப்படையில் தமிழ் மாணவர்களின் நுண்ணறிவுடன் போட்டியிட முடியாத சிங்கள மேன்மட்டத்திலிருந்தும் பௌத்தமட்டங்களிலிருந்தும் சிங்கள மாணவர்களை தூக்கிவிடவும், ஏதாவது முறையில் தமிழ் மாணவர்களின் உயர்கல்வி அனுமதியை குறைக்கவும் சிங்கள அரசினால் 1970 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்டதே கல்வி தரப்படுத்துதல் சட்டம் எனும் கொடிய திட்டம்.

இத் திட்டம் பல்கலைக்கழக அனுமதியில் ஒரே காலத்தில் படித்து, ஒரே தேர்வை ஒரு நாளில் எழுதினாலும் தமிழ் மாணவர்கள் சிங்களவரை விடக் கூடுதல் மதிப்பெண் பெறவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தியது. இதே போன்று பல்வேறு விதமான தமிழ் மாணவர்களுக்கு எதிரான தரப்படுத்தல்கள் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதுவே பின் தமிழ் மாணவர்களின் எழுச்சிக்கு முதன்மை காரணியாக அமைந்தது.

2009 இறுதிக் கட்ட போரின் போதும் போரிற்கு பிறகுமான காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்னும் அவர்களுக்குரிய கல்வி கிடைக்காத நிலையிலே உள்ளனர். இன்று இலங்கையில் தமிழ் இளையோர்களின் எதிர்காலத்தை சிங்கள அரசு தன் கைகளுக்குள் வைத்து இன்னும் சூறையாடுகின்றது என்பதே கசப்பான உண்மை.

இந் நிலையில், தாயகத்தில் எமது தமிழ் மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, காலத்தின் தேவைக் கருதி, புலம்பெயர் மண்ணில் வாழும் எமது தமிழ் உறவுகளின் உதவிக்கரமானது இன்று அளப்பெரியது. அந்த வகையில், இத்தாலி வாழ் தமிழ் உள்ளங்களின் நிதிப் பங்களிப்பில் 2021ம் ஆண்டு சிதம்பரபுரத்தில் “வாகை கல்வி நிலையம்” கட்டியெழுப்பப்பட்டது. இன்று பல தமிழ் மாணவர்கள் இலவசமான முறையில் கல்வி எனும் பெரும் செல்வத்தை பெறக் கூடியதாக அமைக்கப்பட்டது தான் வாகை கல்வி நிலையம். அதை இன்னும் சிறப்பாக வளர்ப்பதும் எமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை நிலைநாட்டுவதும் தமிழர்கள் எங்களுடைய கடமையாகும் என்பதை நாம் உணர்ந்துகொண்டு அதற்காக செயற்பட்டு தாயகத்திற்கும் புலத்திற்கும் இடையிலான உறவுப்பாலத்தை இன்னும் மேம்படுத்த உறுதியுடன் உழைப்போம்!

உங்கள் கவனத்திற்கு