என்றும் எங்களுடன் அன்ரன் பாலசிங்கம்

ஈழ விடுதலைப் போராட்டத்தில், அரசியற் துறையில் முக்கிய பங்காற்றி தீர்க்கமான அரசியற் பாதையில் எமக்கான சுதந்திரம் நோக்கி கொண்டுசென்றவர் “பாலாண்ணை” என அழைக்கப்பட்ட திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

04.03.1938ல் மட்டக்களப்பில் பிறந்த இவர் இங்கிலாந்து குடியுரிமையைக் கொண்ட இலங்கைத் தமிழராவார். இவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். அதுமட்டுமன்றி வேறுபல கல்வி நிலையங்களும் இவருக்கு கௌரவப் பட்டங்களை அளித்துள்ளது.

ஆரம்பத்தில் இலங்கையில் வீரகேசரி பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். அக் காலகட்டத்திலேயே அன்ரன் பாலசிங்கம் அவுஸ்திரேலியப் பெண்ணான அடேலை திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவரும் சேர்ந்து விடுதலைப் பாதையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

மதியுரைஞராக, தத்துவ ஆசிரியராக ராஜதந்திரியாக விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து விடுதலைப் போராட்டத்தில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர் அன்ரன் பாலசிங்கம். இதனாலேயே தேசத்தின் குரல், ராஜதந்திரப்பறவை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

இந்தியா இருந்து செனிவா வரை பல சுற்று பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்து தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியவர். தமிழீழத் தேசியத் தலைவருக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலகப் போராட்டங்களையும் அரசியல் பிரமுகர்களின் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்து விடுதலைக்கான உழைப்பினை வழங்கியதில் இவரே முதன்மையானவர்.

தவறுகளை நகைச்சுவையாகவும், வெளிப்படையாகவும் அரங்கத்தில் சுட்டிக்காட்டி பேசும் பேச்சாற்றல் இவரின் தனித்தன்மை என்றே சொல்ல வேண்டும். தன் உடல்நலம் குறைவுற்றிருந்த பொழுதிலும் கடல்வழி பன்னாடுகளுக்குச் சென்று தாயகத்தின் அரசியல் செயல்பாடுகளை எடுத்துக்கூறியதுடன் 2002ம் ஆண்டு இலங்கை அரசுடன் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இவரின் பங்கு அளப்பெரியது.

தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்திற்கு பக்கப்பலமாக இருந்து தன்னையே அற்பணித்த இவர், 14.12.2006ம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார். அவரின் மறைவு தமிழினத்திற்கு என்றும் நிரப்பமுடியாத வெற்றிடம் ஆகும்.

உங்கள் கவனத்திற்கு