சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய ஆறு போராளிகளது 14வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய ஆறு போராளிகளது 14வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு இத்தாலி பலெர்மோ மாநகரில் நடைபெற்றது.

23 வருடங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் அயராது உழைத்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பேச்சுவார்த்தை அணிக்குத் தலைமையேற்றுச் செயற்பட்டவர். தினேஸ் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட இவர், அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு சிங்கள அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர். தாயகத்திலும், புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக விளங்கியதோடு பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பையும் பெற்றிருந்தவர்.

தான் நேசித்த மண்ணினதும் மக்களினதும் விடுதலைவேண்டி பயணித்திருந்தவேளை இரண்டகர்களின் சதிக்கு இலக்காகி, 02/11/2007 அன்று காலை ஆறு மணியளவில் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத்தாக்குதலில் வீரகாவியமானார். அவருடன் லெப்.கேணல் அலெக்ஸ், மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், மேஜர் நேதாஜி, லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகிய ஆறு விடுதலைப் புலிகளும் வீரமரணம் அடைந்தார்கள்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் ஏனைய
ஆறு விடுதலைப் புலிவீரர்களுடைய நினைவுவணக்க நிகழ்வு இத்தாலி பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் கடந்த 02/11/2021 அன்று நடைபெற்றது. பொதுச்சுடரேற்றல், ஈகச்சுடரேற்றல், சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன இடம்பெற்றிருந்தன. இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டு தமது வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.

உங்கள் கவனத்திற்கு