தமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை

தமிழ், தமிழன், தமிழீழம்! இம்மூன்று சொற்களை உச்சரிப்பதே தவறு என்று எண்ணிய சிங்கள கோர முகத்தின் வெளிப்பாடே 1983ம் ஆண்டு எம் தேசத்தில் நடந்தேறிய யூலைக் கலவரம் ஆகும்.

ஆங்கிலேயர்களின் காலனித்துவத்திற்கு பின்னர், சிங்களவர்கள் தங்களது சிங்கள பௌத்த ஆதிக்கத்தை தமிழர்கள் மீது திணித்தார்கள். தமிழர்களுக்கு பிரஜா உரிமையை மறுத்தார்கள், தமிழர் தேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டார்கள், தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளை மறுத்தார்கள். இவற்றிற்கு எதிராக அகிம்சை வழியில் போராடிய எம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்டது வன்முறை மட்டுமே. தமிழர்கள் வாழ்விலும் வயிற்றிலும் அடித்து தமிழினத்தை வேரோடு அழிப்பதை இலக்காகக் கொண்ட சிங்கள அரசு, தமிழர்களுக்கு தமிழீழம் தான் நிரந்தர தீர்வு என்பதனை ஏற்க மறுத்து இனவழிப்பை ஆரம்பித்தது. தமிழன் தலை தூக்கி விடுவான் என்று ஐயம் கொண்ட சிங்கள இனவாத அரசு தரப்படுத்தல் எனும் சட்டத்தை அமுல்படுத்தி தமிழ் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பையும் இளையோர்களுக்கு வேலை வாய்ப்பையும் மறுத்து எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. தமிழன் குட்டக் குட்ட தலை குனிவான் என்று தப்பு கணக்கு போட்ட சிங்கள இனவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது தமிழ் இளைய சமுதாயம். இதனை பொறுத்துக் கொள்ளாத சிங்கள மக்கள், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை காரணமாக வைத்து, தமிழர்கள் மீதான இனப்படுகொலையை இனவாத அரசின் ஆதரவுடன் ஈவு இரக்கமின்றி நிறைவேற்றினார்கள்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காட்டுமிராண்டி தனமாக கொல்லப்பட்டார்கள். குடியுரிமை பதிவேட்டை கையில் எடுத்து வீடு வீடாக தமிழர்கள் அடையாளம் காணப்பட்டு கண்டதுண்டமாக்கப்பட்டார்கள். உயிருடன் கொளுத்தப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப் பட்டார்கள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக்கிழித்து குழந்தையை எடுத்து எரியும் நெருப்பில் போட்டார்கள், தமிழர்களின் வீடுகள், கடைகள், சொத்துகள் சூறையாடப்பட்டன.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் மிருகத்தனமாக கொல்லப்பட்டார்கள்.
இவ்வாறு சொல்ல முடியாத பல கொடுமைகள் சிங்களவர்களால் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டன.

இலங்கையின் சுதந்திரத்துடன் ஆரம்பித்த சிங்கள இனவெறி 1983 உடன் நிற்கவில்லை. அன்றிலிருந்து இன்று வரை சர்வதேசத்தின் பார்வைக்கு கீழ் தொடர்கிறது தமிழின அழிப்பு. இதன் உச்சக்கட்டமே 2009ல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகும்.
அன்றும் இன்றும் தமிழர்கள் கேட்பது ஒன்று தான்: தமிழர்களுக்கான தனித் தமிழீழம். தமிழன் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும், தமிழன் இழந்த ஒவ்வொரு உயிருக்கும், தமிழன் அனுபவித்த கொடுமைகளுக்கும் சிங்கள அரசும் சர்வதேசமும் பதில் சொல்லியே ஆக வேண்டும். சிங்கள அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வரை தமிழனின் குரல் உலகெங்கும் ஓங்கட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

உங்கள் கவனத்திற்கு