பிராந்திய வல்லாதிக்கத்தின் கையாலாகாத்தனம் – யாழ் வைத்தியசாலைப் படுகொலை

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலை மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் ஒரேயொரு மருத்துவமனையாகக் கருதப்பட்டது. வைத்தியசாலை, வைத்திய சேவை என்பது யுத்த கால நேரத்திலும் எப்போதும் 24 மணி நேரமும் சேவையாற்றும் ஒரு மனையாகும். அந்தவகையில் இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட படுகொலைகளுள் உலகத்தின் பார்வையில் இருந்து கணிசமான அளவிற்கு மறைக்கப்பட்டதும் நம் நெஞ்சங்களில் இருந்து என்றைக்கும் மறக்க முடியாததுமான ஒரு சம்பவமே இந்த யாழ் வைத்தியசாலைப் படுகொலை.

 1987 அக்ரோபர் மாதம் இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தொடங்கியதிலிருந்து யாழ் நகரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய இராணுவத்தினர் ஈடுபட்டனர். அந்த வகையில் யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து யாழ் நகரப் பகுதி மீது பெருமளவிலான எறிகணைத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் மேற்கொண்டதனால் அதில் காயமடைந்த உயிர்களை காப்பாற்றும் நோக்கில் யாழ் வைத்தியசாலை ஊழியர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றி வந்தனர். யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றும் என்ற அச்சத்தில் பணிக்குச் செல்ல தயக்கமடைந்த நிலையிலும் பலர் தமது கடமைகளுக்குச் சென்றனர். 

அந்தவேளையில், 1987ம் ஆண்டு அக்ரோபர் மாதம் 21ம் 22ம் திகதிகளில் மருத்துவமனைப் பக்கத்தில் இருந்து தம் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் மருத்துவமனைக்குள் விடுதலைப்புலிகள் நடமாடுவதாகவும் சொல்லிக் கொண்டே இந்தியப் படைகள் உள்நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடாத்தினர். இந்திய அமைதிப்படை இராணுவத்தினரின் சரமாரியான துப்பாக்கிச் சூட்டிலும், கிரனைட் தாக்குதல்களிலும் தாதிமார்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 68 பேர் என நூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலியாகின.                                                           

அவர்களின் பெயர் விபரங்கள்:-
மருத்துவர் ஏ.சிவபாதசுந்தரம், மருத்துவர் எம்.கே.கணேசரத்திரம், மருத்துவர் பரிமேழலகர், திருமதி. வடிவேலு, திருமதி. லீலாவதி செவிலியர்கள் திரு.சண்முகலிங்கம், திருமதி. சிவபாக்கியம், திருமதி. ராமநாதன் மருத்துவ அவசர உந்து ஓட்டுநர் திரு.கனகலிங்கம், தொலைபேசி இயக்குனர் திரு.கிருஷ்ணராஜா, பணி மேற்பார்வையாளர் திரு.செல்வராஜ் உட்பட 11 பேரும், சிற்றூழியர்கள் மற்றும் நோயாளிகள் 46 பேர்.

சில நோயாளிகள் இறந்தவர்களைப் போல தரையில் வீழ்ந்து கிடந்தமையால் உயிர் தப்பினர். ஒரு மருத்துவரும் மூன்று தாதிமாரும் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவரும் தாதிகளும், நாங்கள் சரணடைகிறோம் ” எனக்கூறியும் கேட்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், மருத்துவமனையின் கதிரியக்கப் பிரிவில் 19 மணி நேரத்திற்கும் அதிகமாக பதுங்கி இருந்த பெண் மருத்துவரும் இரண்டு தாதிமாரும் நோயாளிகளுடன் இராணுவ மேஜரிடம் சரணடைந்து நிலமையை விளக்கிய பின்னர் கைகளை தூக்கியவாறு வெளியே வந்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் இந்திய இராணுவம் இங்கே கிடக்கும் பிணங்களை எரித்து விட வேண்டும் எனக்கேட்டுக் கொண்டது. இந்த உயிரற்ற உடல்கள் மூன்று நாட்களாக வைத்தியசாலையிலேயே இருந்தன. மரணச் சடங்கிற்காக வெளியில் கொண்டு செல்லக் கூடாது எனவும் இறந்தவர்களைப் பார்ப்பதற்கு வெளியில் இருந்து உறவினர்கள் உள் வருவதற்கும் இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை. அதன் பின்னரே வைத்தியசாலை மைதானத்தில் வைத்து எரியூட்டப்பட்டது.

இதேபோலவே சந்திரிக்கா அரசாங்கத்தின் ஆட்சியின் போதும் கிளிநொச்சி வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலை எவராலும் மறக்க முடியாது. பிறந்து சில நிமிடங்களேயான பச்சிளங் குழந்தைகள், குழந்தைகளைப் பெற்றெடுக்க வந்த தாய்மார்கள் எனப் பலர் மண்ணில் புதைக்கப்பட்டனர். மகிந்தராஜபக்ஷாவின் ஆட்சியின் போதும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது ஈவிரக்கம் இல்லாது எறிகணைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். இவையெல்லாம் ஈழத்தில் வைத்தியசாலைகள் மீது நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல் கொண்ட, மனித குலத்திற்கு விரோதமான படுகொலைகள் ஆகும்.

யுத்த காலத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர்கள் கூட நடுநிலையாளராக கருதப்பட்டு மதிக்கப்பட வேண்டியவர்கள். சர்வதேச நியமங்களின்படியும் சட்டங்களின்படியும் வைத்தியசாலைகள் தாக்குதல்களில் இருந்து விலத்தி வைக்க வேண்டும். ஆனால் உலகில் மிகப்பெரிய சனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்கள், அப்பட்டமாக மீறிய ஒரு சம்பவமாகவே இது அமைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை முழுக்க முழுக்க தனது சுய லாபத்துக்காகவும், பிராந்திய செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் என்ற வல்லாதிக்கக் கனவுக்காகவும், ஈழப் பிரச்சனையைக் கையாண்டு ஈழத்தமிழர்களை வைத்துப் பகையாடியது.

இனப்படுகொலைகளில் இலங்கை அரசு இழைத்த பல்வேறு போர்க் குற்றங்களை பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய அரசு தமிழர் தாயகத்தில் நடாத்தி கோரத்தாண்டவம் ஆடியது. எனவே பிராந்திய வல்லாதிக்கத்தின் கையாலாகத்தனத்தினால் யாழ் வைத்தியசாலையை பிண வைத்தியசாலையாக மாற்றியது. இந்த அரசையே எமது மக்கள் தம்மை மீட்பர் என்று எண்ணி மாலை போட்டு வரவேற்று மகிழ்ந்த எமது மக்களுக்கு இந்திய அரசு தந்த பரிசு இதுவே!

ஆக்கம்: Reggio Emilia திலீபன் தமிழ்ச் சோலை

உங்கள் கவனத்திற்கு