கொரோனாவுக்கு எதிராக Trump இன் ஆபத்தான மருந்து சிகிச்சை!

கொரோனா வைரசால் 50,000 உயிரிழப்புகளை நெருங்குகிறது அமெரிக்கா.

John Hopkins பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, 866,646 நோயாளிகள் இப்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தற்போதுள்ள பாரிய சுகாதார நெருக்கடியில் அதிபர் Trump இன் “பரிந்துரை” தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

தொழிலதிபரும் அமெரிக்க சனாதிபதியுமான Donald Trump கொரோனாவைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிக ஆபத்தான மருத்துவ சிகிச்சையை பரிந்துரைத்துள்ளார்.

பல விற்பனைத் தொழில்களில் அனுபவம் பெற்ற தொழிலதிபர் Trump நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமெரிக்கர்களுக்கு தனது “புரட்சிகரமான சிகிச்சையை” அறிமுகப்படுத்தியுள்ளார்.

“கிருமிநாசினி (Disinfectant) ஒரு நிமிடத்தில் வைரசை அழிப்பதை நான் காண்கிறேன். ஆதலால், கிருமிநாசினியை உடலுக்குள் ஒரு ஊசி மூலம் நாம் செலுத்தி ஏதாவது செய்ய வழி இருக்கிறதா? அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வது சுவாரசியமாக இருக்கும்” என்று Trump தனது கருத்தைக் கூறினார்.

பின்னர், புற ஊதாக் கதிர்கள் (UV light) அல்லது அதிகூடிய வெப்பத்தில் வைரசு திறன் அற்றது என்பதை பரிசோதிக்கும் புதிய சோதனைகளை மேற்கோள் காட்டி, சூரிய ஒளியில் வெளியே செல்வதன் மூலம் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் தங்களை குணப்படுத்திக் கொள்ளலாம் என்றும் Trump பரிந்துரைத்தார்.

ஆகவே, நோயாளிகளை அதிகூடிய புற ஊதாக் கதிருக்கு உட்படுத்தி வைரசை அழிப்பதா அல்லது நோயாளிகளின் நுரையீரலில் கிருமிநாசினியை ஊசி மூலம் உள்ளே செலுத்தி சுத்தம் செய்வதா என்று தேசிய பாதுகாப்பு திணைக்களத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தலைவர் William Bryan நோக்கி சனாதிபதி கேள்வி தொடுத்துள்ளார்.
மேலும், அவரது இந்த சிகிச்சை பற்றி மருத்துவ நிபுணர்களுடன் தான் ஆலோசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Trump இன் இந்த ஆலோசனை “பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது” என்று பல நிபுணர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ஏனெனில் வைரசுக்கு அஞ்சி, சிலர் கிருமிநாசினியை ஊசி மூலம் உட்செலுத்த முயற்சிக்கக்கூடும், மேலும் இது உயிருக்கு பாரிய விளைவுகளை உண்டாக்கிவிடும்.

எனவே, இவரின் ஆலோசனைப்படி இப்படியான கிருமிநாசினிகளை குடிப்பது அல்லது ஊசிமூலம் உட்செலுத்த முயற்சிக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்களும் நிறுவனங்களும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே hydroxychloroquine மற்றும் மலேரியா நோயிக்கு பயன்படுத்தும் மருந்துகளின் தவறான கலவையை கொரோனாவைரசுக்கு பரிந்துரைத்திருந்தார் என்று பல மருத்துவ நிபுணர்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு