அதிகூடிய உயிரிழப்புக்கள் மற்றும் மனிதப் புதைகுழி. அமெரிக்காவை முடக்கிய கொரோனாவைரசு.

அமெரிக்காவில், அனைத்து 50 மாநிலங்களிலும், கொரோனாவைரசு காரணமாக பேராபத்தான நிலைமை உள்ளதாக அந் நாட்டு அதிபர் Donald Trump அறிவித்துள்ளார்.
தற்போது வரை 5 லட்சத்திற்கு மேலான நபர்கள் கொரோனாவைரசின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. தற்பொழுது உலகத்தில் கொரோனாவைரசால் அதிகூடிய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. நாளுக்கு நாள் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை ஏனைய நாடுகளைவிட பல மடங்குகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மிக வேகமாக உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் ஆயிரக் கணக்கில் அதிகரித்துக் கொண்டு போகிறது.

New York Times பத்திரிகையின் கணக்கீடுகளின் அடிப்படையில் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா இத்தாலியை பல மடங்கு தாண்டியுள்ளது. உயரிழந்தவர்களின் எண்ணிக்கை இத்தாலியை விட அதிகமாக இருந்தாலும் விகிதத்தை பார்க்கும் பொழுது அது குறைவாக உள்ளது. இத்தாலியில் 1 லட்சம் மக்களுக்கும் 32 பேர் உயிரிழக்கிறார்கள், அமெரிக்காவில் ஒவ்வொரு 1 லட்சம் மக்களுக்கும் இறப்பு எண்ணிக்கை 6 ஆக மாத்திரமே உள்ளது.

இப்படியான கடுமையான சூழ்நிலையிலும் அந் நாட்டு அதிபர் Trump அமெரிக்காவில் அனைத்து வணிக பொருளாதார நடவடிக்கைகளும் மிக விரைவில் சாதாரண நிலைக்கு திரும்பும் என உறுதியாகக் கூறியுள்ளார். கடந்த நாட்களில் உலக சுகாதார அமைப்பு சீனா அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்ற விமர்சனத்தை முன்வைத்தார். உலக சுகாதாரத்திற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை முடக்கப் போகிறார் என்று பலரால் அச்சப்படுகிறது.

இப்படியான தன்னம்பிக்கைகொண்ட செயற்பாடுகள் இருந்தாலும் மறுபக்கம் இந்த கொரோனாவைரசு அமெரிக்காவின் சமூக வர்க்கப் பாகுபாட்டை வெளிக்கொண்டு வருகிறது.

உடல்நலக் காப்பீடு இல்லாதவர்கள் மற்றும் வறுமையில் வாழ்கின்ற பல லட்ச மக்கள் தான் அதிகூடிய பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சிகிச்சைப் பெறாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இவர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் அதிக இறப்பு எண்ணிக்கை கொண்டுள்ள நகரம் New York ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டு போவதால் மற்றும் இடப் பற்றாக்குறை காரணத்தால் உயிரிழந்த உடல்களை பாதுகாத்துக் கொள்வதற்கு 45 குளிரூட்டப்பட்ட சுமையுந்துகள் (refrigerated trucks) New York நகரத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

New York – Manhattan உயிரிழந்த உடம்புகளை பாதுகாத்து கொள்வதற்கு குளிரூட்டப்பட்ட சுமையுந்துகள்
(AP Photo/John Minchillo)


இதற்கு மேலாக மயானங்களில் இடப் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டு வருவதால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆள் நடமாட்டம் இல்லாத Hart Island தீவில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளார்கள்.

கப்பல் அல்லது படகு மூலமே செல்லக்கூடிய Hart Island க்கு உறவினர்கள் இல்லாத அல்லது அடையாளம் கோரப்படாத சடலங்கள் பெரும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 25 நபர்களை அடக்கம் செய்துகொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு இல்லாதவர்களும் வறுமையில் வாழ்ந்த மக்களாகவும் உள்ளார்கள்.

இதே தீவில் 1918 ஆம் ஆண்டு Influenza Spagnola எனும் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இங்கே புதைக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. அதேபோல் இப்பொழுது கொரோனாவைரசினால் இறந்தவர்களும் இங்கே புதைக்கப்படுவது வரலாற்றை திரும்பிப் பார்க்கவைக்கிறது.

உங்கள் கவனத்திற்கு