புதிய ஆணையை வெளியிட்டுள்ளார் பிரதமர் Conte


«உங்கள் வலிமையைக் காட்டியுள்ளீர்கள், இப்போது ஒரு புதிய கட்டம் தொடங்குகிறது. நாம் அதை முறையாகவும் கடுமையாகவும் எதிர்கொள்ள வேண்டும்» என்று நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி பிரதமர் Conte கட்டம் 2 இன் நெறிமுறைகளை உள்ளடக்கிய ஆணையைப் பற்றிய உரையைத் தொடங்கினார்.
«தொற்று மீண்டும் பரவும் அபாயத்தை நாம் தவிர்க்க வேண்டும்; உறவினர்களுடனான உறவுகளிலும் கூட முன்னெச்சரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும். வைரசுடன் வாழ ஒரே வழி சமூக இடைவெளியை குறைந்தபட்சம் ஒரு மீட்டராவது வைத்திருப்பதுதான்». எல்லாவற்றையும் மீறி, “தொற்று வளைவு உயரக்கூடும்” என்று அவர் எச்சரித்தார். மேலும், “மீண்டும் ஆபத்து வரக்கூடும், நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்”. ஆகையால், «நீங்கள் இத்தாலியை நேசிக்கிறீர்கள் என்றால் நீங்கள் தொற்றுநோயைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்» என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய ஆணை
கட்டம் 2 க்கான புதிய ஆணையின் நெறிமுறைகள் மே 4 முதல் 17 ம் திகதி வரை செல்லுபடியாகும். மே 4 முதல் மீண்டும் திறக்கக்கூடிய நிறுவனங்கள் ஏப்ரல் 27 முதல் “ஆயத்த நடவடிக்கைகள்” மூலம் மறுதொடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்.
உறவினர்களைச் சந்தித்தல், இறுதி சடங்குகள், எடுத்துச் செல்லும் உணவு (cibo d’asporto)
- மே 4 முதல் “சமூக இடைவெளியை மதித்தல் மற்றும் முகக் கவசம் அணிந்துகொள்வது” போன்றவற்றை கடைப்பிடித்து வசிக்கும் மாநிலத்தில் உறவினர்களை சந்திக்க செல்லுவது அனுமதிக்கப்படுள்ளது. இருப்பினும், “குடும்பக் கூட்டங்கள்” தடைசெய்யப்பட்டுள்ளன.
- இரண்டு மீட்டர் இடைவெளியை பேணுவதன் மூலம் உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ளலாம்.
- அவசர உடல்நலம் அல்லது வேலை காரணங்களைத் தவிர வேறு மாநிலங்களுக்கு இன்னும் செல்ல முடியாது.
- உணவுகளை எடுத்துச் செல்லக்கூடிய வசதிகள் (cibo d’asporto) கொண்ட உணவகங்கள் மட்டுமே மீண்டும் திறக்கப்படலாம்.
- 4ம் திகதியிலிருந்து, பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும் மற்றும் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் 15 பேருக்கு மேல் இல்லாமல் (முகக் கவசங்களுடன்) நடத்தப்படலாம் மற்றும் பாதுகாப்பு இடைவெளியை எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
- பொது மற்றும் தனியார் இடங்களில் அனைத்து மக்கள் கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.
கடைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 18 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன; Bar, உணவகங்கள், சிகையலங்கார மற்றும் அழகு நிறுவனங்கள் ஜூன் 1 முதல் திறக்கப்படும்.
- கடைகள், கண்காட்சிசாலைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 18 முதல் மீண்டும் திறக்கப்படும் .
- Bar, உணவகங்கள் மற்றும் “தனிப்பட்ட பராமரிப்பு” நடவடிக்கைகள் (சிகையலங்கார நிபுணர், அழகு மையங்கள் போன்றவை) பொறுத்தவரை, ஜூன் 1 ல் இருந்து திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
- பள்ளிகளைப் பொறுத்தவரை, அவற்றை மீண்டும் திறந்தால், ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் நோய்த்தொற்றின் புதிய வெடிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஆகையால், நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அவற்றை மூடி வைத்திருப்பது தீர்மானிக்கப்படுள்ளது.
வரி அற்ற முகக் கவசங்கள்
அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் 50 சத யூரோக்கு வாங்கிக்கொள்ளலாம். எனவே , குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும், முகக் கவசங்களுக்கான வரியை (Iva) அரசாங்கம் அகற்றும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
மீட்பு நிதி (Recovery fund)
ஐரோப்பாவில், மீட்புத் திட்டத்திற்காக, “ஒரு முக்கியமான கட்டம் ” மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது நாம் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறான மீட்பு நிதிகள் இனி இத்தாலி போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கடனை உருவாக்காது. அவை உடனடியாக வழங்கப்படவுள்ளன. மேலும், இந்த வகை
“மீட்பு நிதி”, ஒரு புதுமையான கருவி, பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான குழுப்பணி மூலம் இது கிடைக்கப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Sblocco Paese ஆணை
“நாங்கள் நாட்டை மீண்டும் திறக்க ஒரு இணையான ஆணையைத் தயார் செய்கிறோம்”. பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அவசியமான நடவடிக்கைளை அது உள்ளடக்கும். நாட்டின் பொருளாதார சுழற்சியை இயங்க வைக்க தொழில் முனைவோர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது அவசியம். எனவே, “மானியங்களை குறைத்து அதிக ஊழியர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், சுயதொழில் செய்வோர்க்கான 600 யூரோக்கள் சலுகை நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத் தந்துள்ளார்.
கண்காணிப்பு நடவடிக்கைகள்
தொற்றுநோய் வளைவு மீண்டும் உயரும் பட்சத்தில், மாநிலங்களும் அரசாங்கமும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொற்று இனப்பெருக்க குறியீடு “R0” ஒவ்வொரு மாநிலத்திலும் அளவிடப்படும். புதிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சுகாதார வசதிகளின் திறன் கண்காணிக்கப்படும். மேலும், தடைகள் தளர்த்தப்படும் போது மக்களின் நகர்வுகளுக்கான வரைமுறைகளும் அடுத்த வாரங்களில் நிறுவப்படும்.
அத்துடன், சுயஅறிவிப்புப் படிவம் இன்னும் நடைமுறையில் உள்ளது என்று அவர் உரையில் கூறியுள்ளார்.