ஒரே நேரத்தில் இரண்டு களத்தில் போராடுகிறார் பிரதமர் Conte

வெள்ளிக்கிழமை 10 ஏப்ரல், பிரதமர் Giuseppe Conte மே 3ம் திகதி வரை அவசரகால நெறிமுறைகள் நீடிக்கப்படும் என்று இத்தாலி மக்களுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பாக விரைவில் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவைச் சார்ந்து கடும் விமர்சனம் முன்வைத்தார். இதற்கு மேலாக இவரை குற்றம் சாட்டும் எதிர்க்கட்சி தலைவர்களையே வெளிப்படையாக இந்த பத்திரிகை சந்திப்பில் இவர் விமர்சித்தார்.

இந்த பத்திரிகை சந்திப்பு ஊடாக பிரதமர் Conte ஒரே நேரத்தில் இரண்டு அரசியல் களத்தில் போராட ஆரம்பித்துள்ளார் என்பதை காணமுடியும்.

வெளிநாட்டு ஐரோப்பியக் களம்

LaPresse/Palazzo Chigi/Filippo Attili –

MES (ஆங்கிலத்தில் ESM – European Stability Mechanism) என்பது 2012 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டு வரப்பட்ட ஒரு நிதி உதவித் திட்டம். இதனூடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்தால் 50.000 கோடி யூரோக்கள் வரை உடனடி கடனை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. கடன் பெற்றுக்கொண்ட நாடு ஒரு சிக்கனமான அரசியல் (“Austerity Politics”) நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான அரசியலில் பொதுச்சேவைகளுக்கான நிதிகள் தான் முதலாவதாக முடக்கப்படும். இதனால் MES என்பது ஒரு நாட்டின் இறையாண்மையை பாதிக்கக்குடிய ஒரு கடனாக பார்க்கப்படுகிறது.

வட ஐரோப்பிய நாடுகள் இந்த அவசரக்காலத்தை எதிர்கொள்வதற்கு MES நிதித் திட்டம் போதும் என முடிவை கடைபிடிக்கிறார்கள். இந்த கொரோனாவைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட தென் ஐரோப்பியா நாடுகள் (இத்தாலி, எசுப்பானியா, பிரான்சு) MESன் நிபந்தனைகளை தவிர்க்கும் பட்சத்தில் அதை வேண்டாம் என்று கூறுகிறார்கள். அதற்கு பதிலாக Eurobond பிணைப்பாத்திரங்களை வெளியிட கேட்டுக்கொள்கிறார்கள்.

கடந்த நாட்களில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவில் நிபந்தனையின்றி MES நிதி உதவிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இது சுகாதாரத்துறைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2% வீதத்தை தாண்டக் கூடாது (இத்தாலி நாட்டிற்கு சுமார் 3600 கோடி யூரோக்கள் – 36 miliardi euro) என்ற நிர்பந்தங்களுடன் இந்த கடன் வழங்கப் படுகிறது.

இவ்வாறான முடிவு இந்த அவசரக்காலத்தை எதிர்கொள்வதற்கு பொருத்தமற்றது என்று பிரதமர் Conte பத்திரிகை சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு Eurobond (அல்லது Coronabond என்றும் அழைக்கப்படுகிறது) பிணைப்பத்திரங்களை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த கோரிக்கைக்காக இனி வரும் சந்திப்புக்களில் கைவிடாமல் தொடர்ந்து போராடுவார் என்று உறுதியளித்தார்.

உள்நாட்டு அரசியல் களம்

எதிர்க்கட்சியின் தலைவர்களான Meloni மற்றும் Salvini


இந்த அவசரகாலத்தில் அரசாங்கம் மீதும் தன் மீதும் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியை வெளிப்படையாக பிரதமர் விமர்சித்தார். எதிர்க்கட்சியின் தலைவர்களான Salvini மற்றும் Meloni இந்த நெருக்கடியை பயன்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள் என்று கடுமையாக தெரிவித்துள்ளார். பிரதமர் முன்வைத்த விமர்சனம் இந்நேரத்தில் பொருத்தமற்றது என்றும் அது ஒரு அரசியலுக்காக செய்யப்பட்ட விடயம் என்றும் பல பத்திரிகைகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த நேரத்திலும் தேசிய ஒற்றுமை இல்லாத ஒரு நிலை இத்தாலியில் அமைகிறது. பிரதமரின் கூச்சல் பின்னால் அரசாங்கத்தில் ஆளும் கூட்டணிக்குள் (MS5 + PD) பிளவுகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலைப்பாடு தொடர்ந்து இருந்தால் விரைவில் ஒரு அரசியல் மாற்றம் அமைவதற்கு வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.

இந்த கொரோனா வைரசின் நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியம் தான் ஒற்றுமையின்றி செயற்படுகிறது என்றால், இத்தாலி அரசியல் கட்சிகளும் இந்நேரத்தில் ஒருமித்த குரல் கொடுக்காமல் பிளந்து போய் இருக்கின்றன. இதை வேடிக்கை பார்க்கும் பொது மக்கள் தான் பாதிக்கப் படுகிறார்கள் என்பது தொடர்ந்து வெளிப்படுகிற உண்மை.

உங்கள் கவனத்திற்கு