குழந்தைகளின் மனவுளைச்சலை சமாளிக்க உதவுங்கள்

மனவுளைச்சல் என்பது பெரியவர்களின் பிரச்சினை எனும் எண்ணம் பலருக்கு இருக்கக்கூடும். ஆனால் குழந்தைகளும் பல விதமான உளவியல் தாக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.

அவர்களின் மனநிலையை பெற்றோர்கள் புரிந்து கொண்டு அவர்களை அச்சிக்கலில் இருந்து வெளிகொண்டுவருவது மிகவும் முக்கியம். ஆகையால், உலக சுகாதார அமைப்பினால் அறிவுறுத்தப்பட்ட சிலவற்றை இந்த கட்டுரையில் இணைத்துள்ளோம்.

குழந்தைகள் பல்வேறு வழிகளில் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதிக விடாமுயற்சி, ஏக்கம், பணிந்துபோகுதல், கோபம் அல்லது பரபரப்பு, படுக்கையை நனைத்தல் போன்ற செயல்கள் மூலம் அதனை வெளிப்படுத்துகின்றனர்.

ஆதலால், உங்கள் பிள்ளைகளை ஆதரவளிக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களின் கவலைகளைக் கேட்டு அவர்கள் மீது அதிக அன்பையும் கவனத்தையும் செலுத்துங்கள்.

குழந்தைகளை முடிந்தவரை உங்களுக்கு நெருக்கமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களை விளையாட விட்டு ஓய்வெடுக்க விடுங்கள்.

உங்கள் குழந்தையிடமிருந்து பிரிந்திருப்பவர் என்றால் (எ.கா. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலை), அவர்களுடன் ஒழுங்கு முறையான தொடர்புகளை அமைத்து (எ.கா. தொலைபேசி மூலம்) உங்களால் முடிந்த அளவு உறுதியளியுங்கள்.

என்ன நடந்தது மற்றும் தற்போது என்ன நடக்கின்றது என்பதை, வயதுக்கு ஏற்ற சொற்களை பயன்படுத்தி , அவர்களுக்கு புரியுமாறு விளக்குங்கள். தெளிவான தகவல்களை அவர்களுக்கு வழங்குங்கள்.

குழந்தைகளுக்கு கடினமான காலங்களில் பெரியவர்களின் அன்பும் கவனமும் தேவை. அவ்வகையில் போதுமான நேரத்தையும் கவனத்தையும் அவர்களுக்கு நீங்கள் வழங்குவது மிகவும் அவசியம்.

உங்கள் பிள்ளைகள் சொல்ல நினைப்பதை காதுக் கொடுத்து கேளுங்கள். அன்புடன் பேசி ஆதரவளியுங்கள். உங்களால் முடிந்தால், சிறிது நேரம் என்றாலும் அவர்களோடு விளையாடப்பாருங்கள்.
வழக்கமான நடைமுறைகளான: கற்றல், விளையாடுதல் மற்றும் ஓய்வெடுத்தல் ஆகியவற்றை குறிக்கப்பட்ட நேரத்தில் பின்பற்றுங்கள்.

என்ன நடந்தது, இப்போது என்ன நடக்கிறது, நோய் தொற்றுதலை எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் அலட்சியமான பட்சத்தில் என்ன நடைபெறலாம் (உதாரணமாக வீட்டில் உள்ள ஒரு நபரே உடல் நிலை சுகயீனத்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகலாம்) என்பது பற்றிய தகவல்களை சிறுவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் தெளிவாக எடுத்துரைக்கவும்.

எனவே, தற்போதைய நிலைமையில் பிள்ளைகள் வீட்டிலே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நண்பர்களின் பிரிவு அதிகமாக உணரக்கூடிய கால கட்டம் இது. பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது, அவர்களைப் புரிந்து கொள்ள கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். இதனால், உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு மற்றும் நட்பு ஏற்படக்கூடும். இதுவே, பிள்ளைகளின் வளர்ச்சி காலத்தில் ஒரு திடமான உறவுநிலை உருவாக்க வழிவகுக்கும்.

மேலும், உங்களால் சமாளிக்க முடியாத அளவிலான பிரச்சனை என்றால் உளவியல் ஆலோசகரிடம் குழந்தையை அழைத்துச் செல்ல தயங்காதீர்கள்!

எங்கள் “பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு” கட்டுரை வசிப்பதற்கு.

உங்கள் கவனத்திற்கு