கொரோனாவைரசு: 5 மாதங்களில் விஞ்ஞானம் அறிந்தது என்ன?

COVID-19 கடந்த மாதங்களில் உலகத்தை முடக்கி வீட்டில் அடைத்து வைத்து இருக்கிறது. இதனால் சுகாதாரச் சிக்கல்களுக்கு மேலாக சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை பல நாடுகள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

புதிய கொரோனாவைரசு (அறிவியல் பெயர் SARS-CoV-2) என்று குறிப்பிடப்படும் தீநுண்மியால் இந்த COVID-19 (COronaVIrus Diseas – 2019) நோய் ஏற்படுகிறது. இந்த வைரசு கொரோனா தீநுண்மி வகையைச் சேர்ந்துள்ளது. இவ் வகை தீநுண்மிகள் முதலில் 1960ம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த கொரோனா வகையைச் சேர்ந்த வைரசுகளால் தான் SARS, MERS மற்றும் இன்று COVID-19 நோய்கள் ஏற்படுகிறன. இவை அனைத்தும் கடும் சுவாசப் பிரச்சனை நோய்களை உண்டாக்குகின்றன. ஆனால் COVID-19 நோயின் தாக்கம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சில மாதங்களிலே இந்த புதிய கொரோனாவைரசு பல நாடுகளை முடக்கியும் மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களையும் பலியெடுத்துள்ளது. மேலும், இந்த நோய் தொடர்ந்து பரவிக் கொண்டே வருகிறது.

கொலுப்பு இரசாயனங்களால் சூழப்பட்ட கண்ணுக்குத் தெரியாத முற் பந்து போல் இருக்கும் இந்த நுண்ணுயிரின் ஒரு அசாதாரண சாதனை இது என்றே சொல்லவேண்டும். கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் மனிதன் தற்போது போராடிவருகிறான் என்பதே உண்மை.

கொரோனாவைரசு: 5 மாதங்களில் விஞ்ஞானம் அறிந்தது என்ன?

மறுபுறம், COVID-19 நோயை ஏற்படுத்தும் Sars-CoV-2 வைரசு பற்றிய அறிவியல் சார்ந்த தகவல்கள் குறிப்பிடத்தக்கன. இது ஐந்து மாதங்களுக்கு முன்பு அறிவியலுக்கு எட்டாத ஒரு நுண்ணுயிராக இருந்தது. இன்று இது எந்தவொரு முன் ஆதாரங்களின்றி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

எங்கிருந்து, எப்படி இந்த வைரசு தோன்றி மனிதனை தாக்கியது?

Sars-CoV-2 வைரசு வௌவால்களிலிருந்தே தோன்றியுள்ளது என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வௌவால்கள் வைரசுகளை எதிர்ப்பதற்கு வலுவான எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த எதிர்ப்புத் திறனை முடக்குவதற்காகவே வைரசுகள் மிக வேகமாக வௌவால் உடம்புகளில் பெருக்கமடைகின்றன. இதன் மூலம் தாக்கப்பட்ட வௌவால்கள் விரைவாக இனப்பெருக்கம் செய்ய உதவுவதோடு பிற உயிரினங்களுக்கு பரப்பும் நோய்க்காவிகளாக மாற்றமடைகின்றன. இதற்குப் பின்னர், குறைந்தளவு எதிர்ப்பு சக்தி கொண்டுள்ள ஏனைய பாலூட்டிகள் அல்லது உயிரினங்களே இந்த வைரசுகளின் இரையாக மாறுகின்றன. இவற்றுக்குள் மிக இலகுவாக நுழைந்து தாக்குகின்றன.

கொரோனாவைரசு: 5 மாதங்களில் விஞ்ஞானம் அறிந்தது என்ன?
எறும்புண்ணிகள் (pangolino) வழியாக வைரசு மனிதர்களை தொற்றத் தொடங்கியுள்ளது என்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

வௌவால்களில் இருந்து மனிதர்களுக்கு நேரடியாகத் தொற்றுதல் ஏற்படவேண்டும் என்று அவசியம் இல்லை. இந்த தொற்றுதல் வேறு உயிரினங்களூடாக ஏற்படலாம். எறும்புண்ணிகள் (pangolino) போன்ற விலங்குகள் வழியாக Sars-CoV-2 வைரசு மனிதர்களை தொற்றத் தொடங்கியுள்ளது என்று பெரும்பாலான ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

வைரசினால் தாக்கப்பட்ட வௌவாலின் மூலம் தொற்றுக்கு உள்ளாகிய வேறு விலங்குகள் ஊடாக Wuhan சந்தையில் மனிதனுக்குள் இந்த வைரசு ஊடுறுவியிருக்கலாம். மேலும், அவர் மூலம் இந்த பரவல் சங்கிலித் தொடர் ஆரம்பித்திருக்கலாம் என Sydney பல்கலைக்கழக நுண்ணுயிர் பேராசிரியர் Edward Holmes கூறுகிறார்.

எனவே, இதனால் பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் அல்லது இருமலினால் வெளியேறும் நீர்த்துளிகள் ஊடாக ஏனையோருக்கு பரவி வருகிறது.

இந்த வைரசு எப்படி பரவுகிறது? எப்படி மனிதனை தாக்குகிறது?

வைரசு நிறைந்த துகள்கள் மற்றவர்களால் உள்ளிழுக்கப்படுகின்றன. இவை தொண்டை மற்றும் குரல்வளையில் காணப்படுகின்ற உயிரணுக்களுடன் தொடர்பு கொள்கின்றன. இந்த வைரசின் மேற்பரப்பு ஒரு வகையான புரதத்தைக் கொண்டுள்ளது, அதன்மூலம் தனது மரபணுவை மனித உயிரணுக்களுக்குள் உள்நுழைய செய்கிறது. உள்ளே நுழைந்ததும், வைரசு தனது பல நகல்களை உருவாக்குகிறது. இவை பெருகி உயிரணுவிலிருந்து வெடித்து, இத் தொற்று உடலில் ஏனைய பகுதிகளுக்குப் பரவத் தொடங்குகிறது.

உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் பிறபொருளெதிரிகள் (anticorpi), உடலில் தோன்றும் வைரசுகளை அல்லது கிருமி போன்றவற்றை இனங்கண்டு அழிக்க செயல்படும். இவ்வாறாகத்தான் மனித எதிர்ப்புத் திறன் செயற்படுகிறது.
இந்த பிறபொருளெதிரிகள் உடலில் நுழைந்த Sars-CoV-2 வைரசினை குறிவைக்கின்றன மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துகின்றன.

பொதுவாக இந்த COVID-19 தொற்று மென்மையானது, அதுவே வைரசின் வெற்றியின் ரகசியம். பலர் நோய்த்தொற்று ஏற்பட்டதைக் கூட அறிவதில்லை, எனவே அவர்கள் வேலையிடம், வீடுகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் மற்றவர்களை தொற்றுக்கு உள்ளாக்குகின்றனர்.
நோயின் அறிகுறிகள் காணுவதற்கு சில நாட்கள் கடந்து போவதால் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் தங்களை அறியாமல் நோய்க்காவிகளாக செயற்படுகிறார்கள். ஆகையால், இந்த தொற்றுப் பரவல் சங்கிலியைத் துண்டிப்பது மிகவும் கடினமானது என்று Notthingam பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிர் பேராசிரியர் Ball கூறுகிறார்.

கொரோனாவைரசு: 5 மாதங்களில் விஞ்ஞானம் அறிந்தது என்ன?
நுண்நோக்கியில் SARS-CoV-2

ஏன் இந்த வைரசு மரணத்தை ஏற்படுத்துகிறது?

கொரோனாவைரசு மனித உயிரணுக்களுக்குள் உள்சென்று, பெருகி சுவாசக் குழாயூடாக நுரையீரலை சென்றடைகிறது.

அங்கு உடலின் நோயெதிர்ப்பு சக்திகள் மூலம் சிலவற்றை அழிக்க முடிந்தாலும், பலம் வாய்ந்த வைரசுகளை அழிப்பது சிரமமாகிறது. அழிக்கப்பட்ட உயிரணுக்களின் பாகங்கள் நுரையீரலில் நிரம்பத் தொடங்க நோயாளி தீவிர சிகிச்சைக்குக் கொண்டுச் செல்லப்படுகிறார்.

சில சந்தர்ப்பங்களில், ஒரு மனிதனின் எதிர்ப்புசக்தி வைரசை எதிர்கொள்வதற்கு அதிகளவில் பிறபொருளெதிரிகளை நுரையீரலுக்குள் ஈர்க்கிறது. இதன் விளைவாக நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த செயல்முறையின் கட்டுப்பாட்டை மீறி, அதிக நோயெதிர்ப்பு உயிரணுக்கள் உள்செல்வதால், வீக்கம் மோசமடைகிறது. இது cytokine storm என்று அழைக்கப்படுகிறது. சில சமயங்களில், இதனால் நோயாளி உயிரிழக்க நேரிடுகிறது.

5 நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட படம்
5 நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட படம்
5 நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட படம்
முதல் X-Ray படம்
முதல் X-Ray படம்
கொரோனா வைரசு நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பு


தற்போது வரை இந்த வைரசுக்கு எதிராக 78 விதமான தடுப்பூசித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என Nature எனப்படும் மருத்துவவியல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. வைரசுத் தடுப்பு மருந்து சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய நோயறிதல் சோதனைகளும் தோன்றியுள்ளன. இருப்பினும் பல விஞ்ஞானிகளின் கருத்துக்கள் அடிப்படையில் தடுப்பூசிகளுக்கு பெரிய அளவிலான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆகையால், இதற்குரிய மருந்து எதுவாக இருக்கப்போகிறது என்பது இன்னும் கேள்விக்கிடமாகவே இருக்கின்றது.

உங்கள் கவனத்திற்கு