மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் கௌரவிப்பு – 2022

தேச விடுதலைக்காய் வெஞ்சமரில் களமாடி தம் உயிரை ஈகம் செய்த வீரமறவர்களின் தியாகங்களை கௌரவிக்கும் நிகழ்வு மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் கௌரவிப்பு-2022 இன்று ஜெனோவா திலீபன் தமிழ்சோலையில் நடைபெற்றது.

அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் ஈகைச்சுடரை வீரவேங்கை நெடியவனின் சகோதரி ஏற்றி வைத்தார். தொடர்ந்து சமநேரத்தில் மாவீரர்களின் உறவுகள் விளக்கேற்றி மலர்தூவி வீரர்களை நினைவுகூர்ந்தனர். 

தொடர்ந்து திலீபன் தமிழ்சோலை மாணவர்களின் கவிதையாக்கங்களுடன் மாணவர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். தாம் தன் கண்ணென போற்றிய பிள்ளைகளை தாய்மண் மீட்புக்காய் செருக்களம் அனுப்பி அவர்கள் போராட்டகளத்தில் மடிந்த செய்தி கேட்டு தம் பிள்ளைகளை மண் மீட்பிற்காய் இழந்த ஒவ்வொரு உறவுகளின் மனக்குமுறல்கள், ரணங்களும் இங்கே சொல்லி மாளாதவை.. 

தமிழீழ விடுதலைக்காய் தம் உறவுகள் ஒவ்வொருவரையும் இழந்து தவிக்கும் உறவுகளின் உணர்வுகளை நாம் போற்றி வணங்க வேண்டும். “நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும் என்ற எம் தேசியத்தலைவர் அவர்களின் கனவு, எதிர்பார்ப்பு ஓர் நாள் நனவாகும். இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!

உங்கள் கவனத்திற்கு