வேர்களைத் தேடும் விழுதுகள்- வயாவிளான்.

பலாலியின் வட திசையில் பாக்கு நீரினையும் வங்காள விரிகுடாவினையும் தென் திசையில் வயாவிளான் ஒட்டகப்புலம் குரும்பசிட்டியையும் மேற்குத் திசையில் மயிலிட்டி கட்டுவன் என்னும் கிராமங்களையும் பாதுகாப்பாக கொண்ட கடல்வளம் மிக்க தமிழர்களின் நிலம். செம்மண் கனிவளமும் தென்னந் தோப்புக்களும் பனைவளமும் புகையிலை வெங்காயம் மரவள்ளி போன்ற ஏற்றுமதிப் பயிர்கள் விளையும் விவசாய நிலங்களும் என அழகு நிறைந்த ஊர். மண்ணைக் கிளர்த்து உழுதுண்டு வாழும் விவசாயிகளின் வியர்வைத் துளிகளை சுமந்த விவசாயக் கிராமங்களில் பெயர் பெற்றஇடம் வயாவிளான்.

வடபகுதியில் அமைந்துள்ள ஒரே விமானநிலையமான பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்பு – சென்னை வரையிலான மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவையும் ஆரம்பிக்கப்பட்டது.

அருகாமையில் பெரிய இராணுவ முகாம் ஒன்றும் உள்ளது. இதைவிட யா-பலாலி அரசினர் ஆசிரியர் கலாசாலை, வயாவிளான் மத்திய கல்லூரி, இவற்றுடன் தோலகட்டி சகோதரர்களின் பண்ணை, எலும்பு முறிவிற்கு பாரம்பரிய முறைப்படி புக்கை கட்டி எண்ணெய் காய்ச்சி வைத்தியம் செய்யும் ஒட்டகப்புலம், கல்லடி வேலர் என்பனவும்; வயாவிளான் மண்ணின் பெருமைகளாகும். வயாவிளான் எமது ஊர் என்று கூறினாலும் கல்லடி வேலுப்பிள்ளையின் ஊரா என்பார்கள். அந்தளவிற்கு புகழ் பெற்றவர். இப் புலவரின் வீட்டின் அருகே ஒரு பெரிய கருங்கல் இருந்தது. அக் கல்லில் அமர்ந்தே கவி எழுதுவதால் இப் பெயர் பெற்றுள்ளார். தோலகட்டி பண்ணையில் நெல்லிரசம், பழப்பாகு, பழரசம் முதலியனவற்றை சுகாதார முறைப்படி தயாரித்து ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

இவ்வூரில் ஆரம்பக் கல்வியை அள்ளி ஊட்டும் வடமூலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை மற்றும் ஸ்ரீpவேலுப்பிள்ளை வித்தியாசாலை, ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, குட்டியப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, என பல கல்விக் கூடங்களை தன்னகத்தே கொண்ட அழகிய ஊர்.

1946 இல் ‘செம்மை நெறி நின்று’ பரந்த நிலப்பரப்பில் சிறிய பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு கல்லடி வேலன் தனை இந்த உலகிற்கு தந்தும் பல அறிஞர்களையும் உருவாக்கி கரையாத புகழ் பெற்ற வயவை மத்திய கல்லூரியின் புகழ் உலகெங்கும் பரவி இன்று பவளவிழா கண்டு பெருமை கொள்கிறது. யுத்த காலத்தில் பல இன்னல்களை சந்தித்து இருந்த போதும் இப் பாடசாலையை கட்டிக் காத்த பெருமை அதிபர் ஆ.சி.நடராசா அவர்களையே சாரும். இன்று மீண்டும் சொந்த இடத்தில் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி பல சாதனைகளை புரிந்து கொண்டிருக்கின்றது.

அந்த சாதனைகளில் ஒன்று இப் பாடசாலையில் கல்வி கற்று விளையாட்டுத் துறையில் அதீத பற்றுக் கொண்ட தர்சினி சிவலிங்கம் ஆசிய ரீதியில் வலைப்பந்தாட்டக் குழவில் தெரிவு செய்யப்பட்டு பல விருதுகள் பெற்று இன்று இலங்கையின் வலைப்பந்தாட்டக் குழுத் தலைவியாக இருந்து வழிநடத்திக் கொண்டிருப்பவர்.

இவர் தோற்றத்தில் மட்டும் உயரமானவர் அல்ல, அவர் அடைந்த உயரங்களினாலும் உயர்ந்தவர். உலகளாவிய ரீதியில் சிறந்த வீராங்கனையாக வலம் வரும் இவர் தற்போது வங்கித் துறையில் பணியாற்றிக் கொண்டே விளையாட்டுத் துறையிலும் சாதனைகளப் புரிந்து தமிழினத்தை தலைநிமிர வைத்த பெருமைக்குரியவராவார். இதைவிட இன்னும் பல சாதனைகளை இப் பாடசாலை தனதாக்கி வருகிறது.

அம்மா என்று தேசியத் தலைவர் முதல் போராளிகள் வரை அன்பாக அழைக்கப்படும் மாணிக்கவாசகன் புனிதவதி என்பவர் ஆரம்பகால போராட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வல்லமை மிக்க மனத்துனிவுள்ள ஓர் உன்னத தாயாவார். 1985ம் காலப்பகுதிகளில் பலாலி இராணுவ முகாமில் இருந்து இராணுவம் வெளியேறாமல் தடுத்து போராடிய போராளிகள் காயப்பட்ட போது அவர்களை உபசரிப்பு உட்பட அரவணைத்து தனித்துவமாக தன் பிள்ளைகள் போல பராமரித்த ஒரு வீரத் தாய். இவரது 2 பிள்ளைகளில் ஒருவர் லெப்டினன் வாசன் என அழைக்கப்படும் மாணிக்கவாசகன் வசீகரன். யாழ்ப்பாண காவல் நிலையம், பலாலி இராணுவ முகாம் தாக்குதல் உட்பட இவரது தலைமையிலே நடைபெற்றது. அம்மாவின் இறுதிக் காலம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளே பராமரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

வயவை மண்ணில் இருந்து மண் மீட்பிற்காய் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த உன்னத வீரர்களான சீவரத்தினம் பிரபாகரன் ( சமாதான செயலகப் பணியாளர் பிரிகேடியர் புலித்தேவன் ) இவர் 1991இல் யாழ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றதன் பின்னர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவர். அதன் பின்னர் இம்ரான் பாண்டியன் படையணியில் தனது தேசியக் கடமைகளை செய்து கொண்டிருந்தார். பூநகரி தவளைப் பாய்ச்சல் சமரில் விழுப்புண் அடைந்த பின்னராக ஆங்கிலப் புலமை காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்பாடலுக்கு செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமையவை போன்ற நிறுவனங்களின் ஊடாக தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தார்.

2002 இல் இருந்து சமாதானச் செயலகத்தின் தேசியக் கடமைகளை செய்து
தமிழீழத்திற்கு அளப்பரிய பணியினைச் செய்து 2009 இல் வெள்ளைக் கொடியுடன்
நயவஞ்சகமாக அழைக்கப்பட்டு சரணடைந்த போது படுகொலை செய்யப்பட்டார்.
மற்றும் சூரியகாந்தி உதயசூரியன் (லெப் கேணல் ஐயன்), சீவரட்ணம் காந்தரூபன்(கரும்புலி லெப்டினன்ட் தங்கத்துரை), பத்திமனோகரன் சர்மிளா (கடற்புலி கப்டன் கனகா), திருநாவுக்கரசு சிவசக்தி (வீரவேங்கை மதி), மரியநேசன் அன்ரூமாட்டின் (மேயர் ராயன்), தேவசகாயம்பிள்ளை எட்வேட்அமலதாசு (லெப்டினன்ட் செல்வக்குமாரன்), தர்மலிங்கம் லோயினி ( 2ம் லெப்டினன்ட் புதுவேங்கை) என இன்னும் பல வீர மறவர்களைத் தந்த வயவை மண் தனது புதல்வர்களினால் பெருமை கொள்கிறது.

இந்த அழகிய ஊரின் வணக்கத் தலங்களாக வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம், தான்தோன்றிப் பிள்ளையார், ஞானவைரவர் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம், அபிராமி அம்மன் ஆலயம், குரும்பசிட்டி அண்ணமார் கோவில் என்பன குறிப்பிடத்தக்கன.

போர்த்துக்கேயர் எங்கள் வழிபாட்டுத் தலங்களை இடித்தழித்த போது அம்மன் ஆலயத்தில் உள்ள கருவறை அம்மனை அந்நியர் காலம் அகலும் வரை ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைத்து அர்ச்சிக்கப்பட்டு வந்தன. பின்பு அதே இடத்தில் கோவில் அமைத்து கருவறையில் வைத்து வழிபடப்பட்டன. இதனால் மனையுடையம்மன் என சிறப்பிக்கப்பட்டது. மேலும்; கிறித்தவ ஆலயங்களான அந்தோனியார் தேவாலயம், வடமூலை உத்தரிய மாதா தேவாலயம் என பல ஆலயங்களையும் கொண்டமைந்த சிற்றூர்.

இக் கிராமத்தவர்களின் தபாலகமாக வசாவிளான் சந்தியில் உள்ள வீடு ஒன்றில் இயங்கிய காலப்பகுதியில் உப தபால் அதிபராக திரு சரவணமுத்து அவர்கள் கடமையாற்றினார். பரந்த நிலப்பரப்பினை உடையதாகவும் பலாலி விமான நிலையமஇ; பலாலி ஆசிரியர் கலாசாலை, பலாலி இராணுவ முகாம் என்பவற்றின் அரச நிர்வாகச் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் மக்களின் ஊடகமாகவும் விளங்கிய உப தபால் அலுவலகம் பாரிய சிறப்பினைச் செய்து வந்தது.

மேலும் இச்சந்தியில் இருந்த என்.கே கடை மிகவும் பிரபல்யமானது.
தமிழீழ மீட்புப் போரைப் பொறுத்தவரையில் பலாலி வயாவிளான் பகுதிகளில் இடம்பெற்ற போரினால் ஏற்ப்பட்ட இடப்பெயர்வே முதலாவது இடப்பெயர்வு ஆகும்.

1986 தை 13 இல் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றிய மக்களை 1987 ஆடி
மாதத்தில் வந்திறங்கிய இந்திய அமைதிப்படை உருவாக்கிய அமைதிக் காலத்தில் மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு குடியேறிய மக்களை மீண்டும் 1990 ஆனி மாதம் 15 இல் இரண்டாவது முறையாகவும் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேறிய மக்கள் 30 வருடங்களாக பல இன்னல்களை சந்தித்து மீண்டும் 2010 புரட்டாதி 2 இல் மீளக் குடியமர அனுமதித்த போது தமது காணிகளை அடையாளம் காண முடியாமல் செப்பனிடப்பட்டும் படாமலும் இருந்த வீதிகளின் இரு பக்கமும் செடிகளும் மரங்களும் ஓங்கி வளர்ந்து காடாகக் காட்சியளித்ததைக் கண்டு மனம் கலங்கி நின்றார்கள்.

அறிவிலே தெளிவாகவும் அகத்திலே அன்பினையும் நீராகக் கொண்டு இந்த மண்ணில வளர்க்கப்பட்ட மரங்களில் இருந்து முளைத்த விழுதுகளினால் பெரு விருட்சமாய் வளர்ந்து தனது கிளைகளை புலம்பெயர் தேசத்தில் பரப்பி தாயகத்தில் உள்ளன. வேர்களினால் மீண்டும் பெரு விருட்சமாய் இவ்வூர் செழித்து வளர்ந்து வருகின்றது.

உங்கள் கவனத்திற்கு