நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. நோயின்றி வாழ உடலாரோக்கியமும் உளமகிழ்வும் வேண்டும். உடல் உறுதியடைய நிறையுணவை உண்ண வேண்டும். உணவால்  கிடைக்கும் மாப்பொருள், கொழுப்பு, புரதம், உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் ஆகிய ஐந்து ஊட்டச் சத்துகளின் மூலம் எம்மால் சோர்வடையாமல் நாள்தோறும் சகல வேலைகளையும் செய்யமுடிகிறது. குறிப்பாக வளரும் தலைமுறைக்கு போசாக்குத் தேவையினைப் பூர்த்திசெய்யும் உணவு அவசியமாகும்; எனவே சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான உணவை அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். உதாரணத்திற்கு  பால், முட்டை, தானியங்கள், பழங்கள், மீன், இறைச்சி, கீரை வகைகள் ஆகியவை உடலின்  வளர்ச்சியைப் பேணி, உறுப்புகளை வலிமைப்படுத்தக்கூடியவை; பதிலாக அரிசி, கோதுமை, சர்க்கரை, தேன், கிழங்கு வகைகள் போன்றவை உடலுக்கு சக்தி அளிக்கின்றன.

பொதுவாக என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம், எந்த அளவு சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துத்தான் ஆரோக்கியத்திற்கான பிரதிபலன் கிடைக்கும். சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவே ஆரோக்கியத்திற்கு அடிப்படை; ஆனால் நிறையுணவாக பழங்களையும் காய்கறிகளையும் மட்டும்  நினைவில் கொள்வதால் பலர் இவற்றை வெறுத்து, ருசிக்காக இரசாயனப் பதார்த்தங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை விரும்பி உண்கின்றார்கள்: எடுத்துக்காட்டாக வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக பொரித்த, வறுத்த உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆகவே ஆரோக்கியத்தின் சீர்கேட்டிற்கு அவசர யுகமும் என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பற்றிய அறியாமையும் முக்கிய காரணங்களாக அமைகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக மன உளைச்சல், ஆதரவற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, வீட்டுப் பிரச்சனைகள், எடை அதிகரித்து விடுமோ என்ற பயம் போன்ற காரணங்கள் சரியான முறையில் கவனிக்கப் படாவிட்டால் ஆறுதல் அளிப்பதற்காகத் தவறான உணவுப் பழக்கங்களைத் தூண்டிவிடும். இவ்வுண்ணுதல் கோளாறுகளால் கூடுதலாக இளைஞர்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

உணவு உட்கொள்ளுதலில் ஏற்படும் சீர்குலைவுகள்

 • உடல் மற்றும் உளவியல் சேதம்

பெரும்பாலானவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு, பதட்டநிலை, அடிக்கடி தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணங்கள், மன அழுத்தம் போன்ற இடையூறுகள் ஏற்படுகின்றது. இடையூறுகளால் ஏற்படும் பிரச்சனைகளை மூலக்காரணிகளை அறிந்து தீர்த்துக்கொள்ளலாம். இவ்விடயூறுக்கு உள்ளாகுவதற்குக் காரணமாக இயல்புக்கு மாறான உணவுப் பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றின் ஊடாக அவர்கள் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிலர் தமது உடல்நிறை, அழகு இவற்றைப் பற்றி அளவுக்கு அதிகமாக சிந்திப்பதால் அவர்களது இறுக்கமான உணவுப் பழக்கத்தாலும், கூடுதலான உடற்பயிற்சிகளினாலும் தமது உடல்நிறையைக் குறைக்கின்றனர்.  

கூடுதலான இளம் வயதினர் தமது எண்ணத்தில் உருவாகும் தோற்றத்துடன் தம்மை ஒப்பிட்டு தமது உடல் சார்ந்து வாழ்கின்றனர். உடலின் நரம்பு தொகுதியானது, அளவுக்கு அதிகமான உணவை உண்ணும்போதோ அல்லது குறைந்த நேரத்தில் உண்ணும்போதோ வாந்தி, அல்லது வேறு விதமான மறுதாக்கத்தை ஏற்படுத்தி பாரிய மனத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்விடைப் பிரச்சனைகளுக்கு உள்ளாகுபவர்கள் தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனையைப் பெற்று அவர்களின் உடல் இடையை சம நிலைக்குக் கொண்டு வந்து இவ்விடையூறுகளிலிருந்து மீளலாம் என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியமானது.

சமச்சீர் உணவு கூம்பு

உணவு உட்கொள்ளுதலில் ஏற்படும் சீர்குலைவுகளுக்கான காரணங்கள் எவை?

உணவுக் கோளாறுகளை ஏற்படுத்துவதில் மிகப் பெரிய பொறுப்பு சமூகத்தில் இருக்கும் எடுத்துக்காட்டுகளுக்கே உண்டு எனலாம். அதாவது மெல்லிய உடலமைப்பே அழகானது என்று விளம்பரமாக்குவதும், குறிப்பாக இளைஞர்கள் மாடல்களைப் போல் தோற்றமளிக்க முயற்சிப்பதுமே இன்று “அழகு” என்ற சொல்லிற்குள் அடங்கிவிடுகிம் எடுத்துக்காட்டுகளாகின்றன. 

உணவுக் கோளாறுகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் ஆபத்தான காரணிகள்:

 • குடும்பத்தில் உணவுக் கோளாறுகள் உள்ள நபர்;
 • மனச்சோர்வு;
 • உடல் தோற்றம் மற்றும் உடல் எடை மெல்லியதாக இருப்பதில் அதிக கவனம் (குறிப்பாக ஒரு வேலைத் தேவையுடன் இணைந்தால், உதாரணமாக நடனக் கலைஞர்கள் மற்றும் சில துறைகளின் விளையாட்டு வீரர்களுக்கு உடல் மெல்லியதாக இருப்பது முக்கியம்);
 • சமூக அழுத்தம், கவலைகள், குறைவான  சுயமரியாதை;
 • நேசிப்பவரின் மரணம்;
 • வேலை, பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏற்படும் மனஅழுத்த சூழ்நிலைகள்.

உளவியலுக்கும், உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன?

உணவானது நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையான ஒன்றாகும். நீங்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுகிறீர்கள் என்றால், உங்கள் உடல் நலம் மற்றும் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும். ஆரோக்கியமான உணவை உண்ணக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உண்ணும் உணவுகளிலிருந்து அமைதியான உணர்வைப் பெறலாம். உணவு உட்கொள்ளும் முறையில் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய எடை அதிகரித்துவிடுமோ என்கிற பயத்திலேயே இருப்பார். உண்ணுதற் குறைபாட்டுப் பிரச்சனை கொண்டவர்கள் பொதுவாக மனச்சோர்வும் பதற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆரோக்கியமான உடல்எடையைவிடக்  குறைவான எடையை உடையவராக இருந்தாலும், அவர் தன் மனத்துக்குள் தன்னுடைய எடை மிகவும் அதிகம் என்று எண்ணியபடி  இருப்பார். இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் உண்ணுதற் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

ஒருவருக்கு பதற்றம், மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவர் எல்லாமே தன்னுடைய கட்டுப்பாட்டைவிட்டு விலகிக் கொண்டிருக்கிறது என்று உணரலாம். அந்த உணர்வுகளைச் சமாளிக்க இயலாமல் அதிகம் சாப்பிடத் தொடங்கலாம் அல்லது அதிக உடற்பயிற்சி செய்யத் தொடங்கலாம். இப்படிச் செய்தால் தங்களுடைய வாழ்க்கையைத் தங்களால் கட்டுப்படுத்த இயலும் என்று இவர்கள் தவறாக நம்பி உணவு/உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

நாம் உண்ணும் உணவு மற்றும் நமது உணவுப் பழக்கங்கள் நமது உணர்வுகளைப் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

 • கலாச்சாரப் பிரச்சனைகள் ;
 • வேலைப் பிரச்சனைகள்;
 • குடும்பப் பிரச்சனைகள் ;
 • தனிப்பட்ட பிரச்சனைகள் ;
 • பொருளாதார நிலைப் பிரச்சனைகள் ;
 • உளநலம் சார்ந்த பிரச்சனைகள் என்பன எடுத்துக்காட்டுகள்.

பலர் மனஅழுத்தம் போன்ற உணர்வுகளை சமாளிக்க, ஒரு கருவியாக உணவைப் பயன்படுத்துகின்றனர்; மற்றும் மகிழ்ச்சி உணர்வுகளை நீட்டிக்க பலர் உணவைப் பயன்படுத்துகின்றனர். உணர்வுகளை அமைதிப்படுத்தவும், மன நிம்மதிக்காகவும் உணவைப் பயன்படுத்துகின்றனர். 

அதிக அளவு உணவு உட்கொள்ளுதல் பெரும்பாலும் நோய்களையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்துவதோடு எதிர்மறை உணர்வுகளையும் அதிகரிக்கச் செய்யும்.

உங்கள் கவனத்திற்கு