தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

“எமது விடுதலைப் போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல், கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்” தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை.

மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக விளங்குவது கல்வி. எக்காலத்திலும் அழியாத செல்வமாக திகழ்வதும் கல்வியே. ஒரு சமுதாயத்தின் தூண்களாக எழுபவர்கள் மாணவர்கள்.

காலம் காலமாக, தமிழீழத்தில் எமது தமிழ் மாணவர்கள் தங்களுடைய இவ் அடிப்படை உரிமைக்காக சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வருகின்றார்கள். காலனித்துவ காலக்கட்டத்தில் இருந்தே எமது தமிழ் மாணவர்கள், கல்வியில் சிறந்தவர்களாக விளங்கினார்கள். இதனைப் பொறுத்துக் கொள்ளாத சிங்கள ஆட்சிபீடம் 1971ல் “தரப்படுத்தல்” எனும் இனவெறிச் சட்டம் ஊடாக, பல்கலைக்கழக அனுமதிக்கு, தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் எனும் சட்டத்தை அமுல்படுத்தியது.இவ் வகையில், உதாரணமாக, மருத்துவத்துறைக்கு அனுமதி பெற தமிழ் மாணவர்களுக்கு 250 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, சிங்கள மாணவர்களுக்கு வெறும் 229 புள்ளிகளே தேவை என நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறான இனவெறிச் சட்டங்களால் எமது தமிழ் மாணவர்களுக்கு பொது அலுவலகங்களில் கூட வேலைவாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டன.

இவ் அநீதிகளுக்கு எதிராகப் போராட துணிந்தவர் தான் பொன்னுத்துரை சிவகுமாரன் அவர்கள். இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவனாக கல்வி பயின்றார். தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தமிழ் மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் தன்னை மாணவர் பேரவையில் இணைத்து போராட ஆரம்பித்தார். இதனால் இவர் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார். சாதியம், பெண் அடக்குமுறை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.

தமிழ் மக்களின் விடியலுக்காக துணிந்து போராடிய பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு ஜூன் 5ம் திகதி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

இவரின் வீரச்சாவு இளைஞர்களிடத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மயானத்திற்கு பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாகக் கூட அது அமைந்தது. இவரின் வீரச்சாவை அடுத்து ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந் நாளானது, தமிழீழ தேசத்திலும் புலம்பெயர் மண்ணிலும் வாழும் தமிழ் மக்களால் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டு வருகிறது.

உங்கள் கவனத்திற்கு