சீன தடுப்பூசி பரிசோதனை விலங்குகளில் வெற்றிகண்டுள்ளது

கொரோனாவைரசுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக சீன விஞ்ஞானிகளால் பாரம்பரியமான முறையில் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசி நல்ல விளைவுகளைத் தருகிறது என்ற செய்தி தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை Science எனும் அறிவியல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

COVID-19 ஐ உருவாக்கும் Sars-CoV-2 ஐத் தடுப்பதற்கான மருந்துக் கலவை எலிகள் மற்றும் குரங்குகளில் வெற்றிகரமான விளைவுகளை தந்துள்ளது என ஆய்வு குறிப்பிடுகிறது.

எலிகளில் இத்தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டபோது, COVID இனால் பாதிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்ட நோயாளிகளில் காணப்பட்ட பிறபொருளெதிரிகளின் (anticorpi) அளவை விட வைரசின் ‘Spike ‘ அதாவது வைரசின் மேற்பகுதியில் முற்கள் போன்று காணப்படும் புரதத்திற்கு (மனித உயிரணுக்களுக்குள் நுழைய உதவுவது) எதிராக சுமார் 10 மடங்கு அதிகமான பிறபொருளெதிரிகளின் உருவாக்கத்தைத் தூண்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது சுத்திகரிக்கப்பட்ட செயலிழந்த வைரசுகளிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசி; வைரசை ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் “வெப்பத்தை அடிப்படையாகக் கொண்ட இரசாயனங்கள் அல்லது இயற்பியல் செயல்முறைகளைப் பயன்படுத்தி இது செயலிழக்கச் செய்யப்படுகிறது. இதனால் அது தன்னை மீண்டும் இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே, இது முற்றிலும் பாதிப்பில்லாததாக மாற்றமடைகிறது, ஆனாலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சரியாகத் தூண்டக்கூடிய திறன் கொண்டது என்று நச்சுயிரியல் வல்லுநர் Burioni கூறுகிறார்.

மேலும், இதன் அடிப்படையில், “இனி நோயாளிக்கு ஒரு வைரசு செலுத்தப்படாது, ஆனால் அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட, வைரசுக்கு எதிரான பதிலைத் தூண்டும் திறனற்ற புரதங்கள் செலுத்தப்படும்” என்றும் விளக்கமளித்தார்.

சீன விஞ்ஞானிகளின் குழு இத்தாலி முதல் ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, எசுப்பானியா வரை பல்வேறு நாடுகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் பணியாற்றிவருகிறது. எலிகள் மற்றும் மனிதரல்லாத விலங்குகளில், இது பிறபொருளெதிரிகளைத் தூண்டியுள்ளது. இது பல Sars-CoV-2 வைரசுகளை நடுநிலையாக்கியுள்ளது. இந்த சோதனை தடுப்பூசி “PiCoVacc” என்று அழைக்கப்படுகிறது. இனி மனிதனில் இந்த சோதனைகள் இந்த ஆண்டிற்குள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“முடிவுகள் மிகச் சிறந்தவையாகத் தெரிகின்றன, ஏனெனில் இந்த சோதனை தடுப்பூசிகள் எந்த நச்சுத்தன்மையையும் வெளிக்காட்டவில்லை என்பது மட்டுமல்லாமல், அவை மிக உயர்ந்த அளவிலான நடுநிலைப்படுத்தும் பிறபொருளெதிரிகளை உருவாக்கின (அவை குணமடைந்தவர்களின் குருதி நீர்மத்தில் (plasma) உள்ளவை – குணப்படுத்த பயனுள்ளதாக இருப்பவை). இறுதியாக, மிக முக்கியமான விடயம்: சீன ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவைரசுடன் குரங்குகளை பரிசோதனை ரீதியாக பாதிக்க முயன்றனர். அதன் முடிவாக: தடுப்பூசி போடப்படாத குரங்குகள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டன, அதே நேரத்தில் தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் ஆரோக்கியமாக இருந்தன. நாங்கள் இன்னும் நிறைவான மகிழ்ச்சியடைய முடியாது, ஏனென்றால் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குரங்குகள் குறைந்தளவு மட்டுமே, அவை மனிதர்களுக்கு ஒத்தவை அல்ல: ஆனால் இவை தடுப்பூசிக்கான விலங்கு பரிசோதனையிலிருந்து வந்திருக்கக்கூடிய சிறந்த தரவு ” என்று Burioni சோதனை தடுப்பூசி பற்றிய தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கவனத்திற்கு