இத்தாலி வல்திலானா மாநகர சபை முதல்வருடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு செல்வராசா கஜேந்திரன் சந்திப்பு

16.10.2023 ,பிற்பகல் 18,00 மணிக்கு வல்டிலானா மாநகரசபை முதல்வர் திரு மாரியோ கார்லி அவர்களுக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கும் இடையில் நகர சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. ஆரம்பத்தில் நகரசபை சார்பாக பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்ற முதல்வர் அவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வல்திலானா நகரத்தில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களுடன் இணைந்து ஆற்றிய பணிகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

தொடர்ந்து திரு செல்வராசா கஜேந்திரன் அவர்களால் கடந்த 2009 இல் ஈழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிவில்லை என்பதனையும் 2009 க்கு பின் தமிழர் தாயகத்தில் சிங்கள அரசுகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மிகவும் ஆதார பூர்வமாக விளக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கடந்த 14 ஆண்டுகளாக நீதிகோரிப் போராடிவருகின்றபோதும் அவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதனையும் தெளிவு படுத்தினார். தமிழர் தேசத்தில் இடம்பெறும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், நில ஆக்கிரமிப்புக்கள், இராணுவ மயமாக்கல், கடந்த 14 வருடங்களாக கடற்தொழிலாளர்களது தொழில் திட்டமிட்டு கடற்படையினரது துணையுடன்அழிக்கப்படுதல், நீதித்துறை, காவல்துறை, உள்ளிட்ட அரச திணைக்களங்கள் அனைத்தும் அரசியல்மயப்பட்டுள்ளதுடன், இனவாதமயப்பட்டும் ஊழல் நிறைந்தும் காணப்படும் நிலையில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேசத் தரப்புக்களால் வழங்கப்படும் நிதி உதவிகளை தமிழர்கள் மீது குறிவைத்து அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைகளை மேலும் வலுப்படுத்தவே வழிவகுக்கும் என்பதனையும் தெளிவுபடுத்தினார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக சர்வதேசம் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்த சட்டத்தை திணிக்க முற்படுவதாகவும், இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணையை பரிந்துரைப்பதையும் சுட்டிக்காட்டி இவற்றால் தமிழர் எதிர்கொள்ளும் சவால்களையும் விளக்கியதைத்தோடு இந்த நிலைப்பாட்டினைச் சர்வதேச சமூகம் மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி விசாரணைஅனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திக்கூடாக மேற்கொள்வதற்கும், அரசியல் தீர்வாக தாயகம், தேசம், இறைமை, தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்கவும் இத்தாலி அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வல்திலானா நகரசபையும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று தமிழ் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதல்வர் நகரசபை நிர்வாகத்தோடு கலந்துரையாடி தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்கவும், உரிமைகள் கிடைக்கவும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்ற உறுதிமொழியுடன் சந்திப்பு நிறைவுபெற்றது.

உங்கள் கவனத்திற்கு