தமிழரின் திருநாளாம் தைப் பொங்கல்

உணவு இல்லையேல் மனிதனில்லை எனும் நிலையில், அவ்வுணவை மனிதர்களிற்கு தருவது விவசாயம். விவசாயத்தையும் அதற்காக உழைக்கும் விவசாயினருக்கும், விளைச்சல் கொடுத்த பூமி, கதிரவன், உதவிய கால்நடை போன்றவைக்கு நன்றி செலுத்தும் நாளாகவே தைப் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. சங்க காலம் தொட்டு இன்றுவரை இத் திருநாளே தமிழரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை சிறப்பித்துக் காட்டுகிறது.

இத் தைத் திருநாள் குறித்து எமது திலீபன் தமிழ்ச் சோலை மாணவியால் எழுதப்பட்ட சிறியக் கட்டுரை கீழே:

தைப் பொங்கல்

‟தைப் பொங்கல் திருநாள் இது இயற்கையைப் போற்றி வாழ்ந்த தமிழருடைய உயர்ந்த சிந்தனையில் உருவாகிய நாளாகும். இந்நாளே தமிழருடைய புத்தாண்டு நாளும் ஆகும்.

இதை உழவர் திருநாள், தைப்பொங்கல் திருநாள் என்றும் அழைப்பர். இந்த உலகிலே மழை பெய்வதற்கும் பயிர்கள் நீரையும் ஒளியையும் பெற்றுச் செழிப்பதற்கும் உயிர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் விளைவதற்கும் மூல காரணியம் கதிரவனே. இக் கதிரவனை போற்றி நன்றிகூறும் நாளே தைப்பொங்கல். அதுமட்டுமன்றி, உழவர்களுக்கும் நன்றிகூறும் நாளும் தைப்பொங்கல் ஆகும்.

இத் தைப் பொங்கலானது தாயகத்திலும் புலத்திலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது. பொங்கல் அன்று வைகறையில் எழுந்து நீராடிய பின் முற்றத்தில் கோலம் இடுவர். மாவிலை தோரணம் கட்டுவர். புதுப் பானைக்கு இஞ்சி, மஞ்சள் இலைகளைக் கட்டுவர். பானையை அடுப்பில் வைத்துப் பசும் பாலை ஊற்றுவர். பால் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்” என்று கூறியபடி புத்தரிசியை இடுவர். பயிற்றம் பருப்பு, முந்திரி வற்றல், மரமுந்திரிப்பருப்பு, வெல்லம் என்பவற்றை சேர்த்துப் பொங்கல் பொங்குவர். பொங்கல் மணம் கமழ்ந்து வர இறக்குவர்.

கீழ் வானில் கதிரவன் காலிக்கும்போது தலைவாழையிலையில் பொங்கலைப் படைப்பர். பொங்கலோடு முக்கனிகளும் பண்ணியங்களும் சேர்த்துப் படைப்பர். எல்லோரும் ஒன்றுசேர்ந்து கதிரவனை வணங்குவர். அதன்பின் விருந்தோம்பல் பண்பாடு சிறக்க சுற்றத்தாருடன் சேர்ந்து பொங்கலை உண்டு மகிழ்வர்.”
“தை பிறந்தால் வழி பிறக்கும்”

உங்கள் கவனத்திற்கு