ஆனையிறவு அடிமைச்சின்ன அழிப்பும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான மறைமுக அங்கீகாரமும்

ஈழத்தமிழர்களின் பாரம்பரிய பூமியாகிய வடதமிழீழத்தின் யாழ் தீபகற்பத்தையும் வன்னிப்பெருநிலப்பரப்பையும்  இணைக்கும் நிலப்பரப்பே ஆனையிறவு ஆகும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் ஏறத்தாழ 1760ம் ஆண்டளவில் கட்டப்பட்ட பாஸ்குலா என்று பெயரிடப்பட்ட சிறு கோட்டை பகுதியே தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் பின்னர் சிறீலங்கா அரசுகளாலும் ஈழத்தமிழர்களை அடக்குமுறைக்குள்ளாக்கி அவர்களின் அன்றாட வாழ்க்கையில் மற்றும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில்  பெரும் பெரும் துன்பங்களையும் இடர்களையும் உருவாக்கிய கூட்டுப்படைத்தளமாக உருவெடுத்தது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் இதன் தாக்கத்தை உணர்ந்த விடுதலைப்புலிகள் தமது போராட்ட வரலாற்றில் முதன்முறையாக குறியீட்டு பெயருடன் மிகப் பெரிய தாக்குதலை 1991ம் ஆண்டு மேற்கொண்டனர். “இதுவே ஆகாய கடல் வெளிச்சமர்” என்ற குறியீட்டு பெயருடன் நடாத்தப்பட்ட தாக்குதலாகும். ஒரு மாத காலம் வரை தொடர்ந்த இத்தாக்குதலில் சில படைமுகாம்கள் அழிக்கப்பட்டாலும் முழுவெற்றியை பெற்றுத்தரவில்லை. இதற்கு காரணமாக எதிரியானவன் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் பெரும்படையினரையும் ஆட்லறிகளையும் தரையிறக்கியதே காரணமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக இயக்கச்சி வரை பல முகாம்கள் கொண்ட பெரும் தளமாக இதனை சிங்கள இராணுவம் மாற்றிக் கொண்டது. 1997இல் மீண்டும் ஒரு தாக்குதல் விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட போதும் பதினொரு ஆட்லறிகளை அழித்ததுடன் நிறைவுக்கு வந்தது.

பின்னாளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஓயாத அலைகள் 1,2 இராணுவ நடவடிக்கைகள் மூலம் வன்னி பெருநிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது இப்படைத்தளம் விடுதலைப் புலிகளின் அடுத்த குறியாகும் என சிறிலங்கா அரசு அதன் பாதுகாப்புக் குறித்து அமெரிக்க மற்றும் சர்வதேச இராணுவ வல்லுநர்களின் ஆலோசனையை வேண்டியது. அதன் நில அமைப்பு அது ஒரு மிகப்பெரிய தற்காப்படைத்தளமே அன்றி அதை தாக்குதலுக்கு இலக்காவது சாத்தியமில்லாதது என இராணுவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மறுபுறத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை மிகத்துல்லியமான திட்டமிடல் மட்டுமே இதை வெற்றி கொள்ள முடியும் எனவுணர்ந்து அதற்குரிய ஆயத்தங்களை மேற்கொண்டனர். அதற்காக கிற்லரின் நாசிப்படைகளுக்கெதிராக கூட்டுப்படைகள் செய்த நோர்மண்டி தரையிறக்கம் போன்ற ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டனர். 400க்கும் மேற்ப்பட்ட கப்பல்களில் விமானப்படையின் துணைகொண்டு ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட படையினரை பொதுவெளியில் தரையிறக்கியதே நோர்மண்டி தரையிறக்கம் ஆனால் இங்கோ இராணுவ வலயத்திற்குள் வெட்டவெளியில் பதினைந்து ஆயிரம் படையினர் நடுவே ஆயிரத்து இருநூறு வீரர்கள் கொண்ட தமிழர் சேனை வெறும் படகுகளில் தரையிறக்கப்பட்டனர்.

பலகளங்கள் கண்ட சமர்க்களநாயகன் பால்ராஜ் தலைமையில் இடம்பெற்றது மாமுனை குடாரப்புத்தரையிறக்கம். கரும்புலிகளின் ஊடுருவல் அணியினர் ஆட்லறி தளங்களை தாக்கியழிக்க தரையிறக்கப்பட்ட வீரர்கள் பலத்த எதிர்ப்புகள் மத்தியில் பெரும் போரிட்டு இத்தாவில் பகுதியில் கண்டி வீதியை இடைமறித்து நிலையெடுத்தனர். மறுபுறத்தில், தாளையடி செம்பியன்பற்று பகுதியை ஊடறுத்து வந்த படையணி தொடர்பு ஏற்படுத்த, படைவழங்கல் குடிநீர் வசதியற்ற நிலையில் பலத்த உயிர்சேதங்களுடன்  ஆனையிறவு படைமுகாம் புலிகள் வசமானது. 99ம் ஆண்டு இறுதிப்பகுதியிலிருந்து படிப்படியாக திட்டமிட்டு வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பரந்தன் என முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் தரையிறக்கத்துடன் தொடங்கிய இறுதித்தாக்குதல் ஏப்ரல் 22ம் நாள் முடிவுக்கு வந்தது.

மிகத்துல்லியமாக திட்டம் இடப்பட்டு பெரும் தளபதிகள் வழிநடத்த அர்ப்பணிப்பும் மனவுறுதியும் கொண்ட போராளிகள் கொண்ட மகளிர் படையினர், சார்ள்ஸ் அன்ரனி மற்றும் பல சிறப்பு படையணிகள் இணைந்து நடாத்திய இப்பெருஞ்சமரின் வெற்றியானது சிறீலங்கா அரசு மட்டும் அன்றி சர்வதேச அளவில் விடுதலைப்புலிகள் அமைப்பினரை மரபுவழி இராணுவமாக ஏற்றுக் கொள்ள வைத்தது. அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இராணுவ வல்லாண்மையை உணர்ந்த சர்வதேசம்  அவர்களின் நிழல் அரசையும் ஏற்றுக்கொண்டு சிறீலங்காவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி விடுதலைப்புலிகளின் இராணுவ மேலாண்மையை தடுத்து நிறுத்தியது.

தொடர்ச்சியாக உருவாகிய சர்வதேச சூழல் பாதகமாக அமைய ஈழத்தமிழர்கள் பகடைக்காயாக பலிக்கடாக்களாக ஒரு பெரும் இனவழிப்பை சந்திக்க நேர்ந்தது துர்ப்பாக்கிய நிலையே. இது இன்று வரை தொடர்கின்றது. ஆனால் காலம்காமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரத்தின் விளைநிலமாக தமிழரின் எழுச்சியை பறைசாற்றும் மானமறவர்களின் மனவுறுதிக்கு சான்றாய் விளங்கும் கரந்தடிப்படையாக தொடங்கி மரபுவழி இராணுவ கட்டமைப்பாக மாறிய ஒரு பெருந்தலைவனின் வழிகாட்டலில் உருவாகிய சரித்திரத்தில் இடம் பெற்ற வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தின் சாட்சியாய் ஆனையிறவு படைத்தள அழிப்பு வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

உங்கள் கவனத்திற்கு