பெருமையான தமிழ் மொழி

எமது தாய் மொழியாம் தமிழ் மொழி ஒரு பெருமையான மொழியாகும். உலகில் முதலில் தோன்றிய மனிதனோடும் இயற்கையோடும் இணைந்து வளர்ந்த மொழி. 

திங்களொடும் செழும் பரிதி 
தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் 
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த 
தமிழோடும் பிறந்தோம் நாங்கள்
—-

என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறுவதை இங்கு நோக்குவது பொருத்தமானதாக அமைகிறது.

இம்மொழியானது பிற எந்த மொழியினதும் நிழல்கூடப் படாத வகையில் தனித்துவமாக வளர்ந்த தன்னிகரில்லாத மொழி. இயல்பாகத் தோன்றிய இயன் மொழியாகிய எம் தாய் மொழிக்கு 16 பண்புகள் உள்ளன என்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் “தமிழ் வரலாறு” என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவற்றைச் சிறிது இங்கு நோக்குவோம்.

  1. தொன்மை — காலத்தால் முந்தியது.
  2. முன்மை — முதன்மையானது
     எ+கா: அறிவியல் கூறும் பரிணாம வளர்ச்சியை ‘ஓரறிவதுவே’ என்னும் தொல்காப்பியப் பாடல் ஏற்கனவே கூறிவிட்டது.
  3. எளிமை — எளிமையான, மென்மையான 30 ஒலிகளைக் கொண்டது. 
  4. ஒண்மை — ஒளி பொருந்தியது. இருளகற்றும் தன்னேரில்லாத் தமிழாகிய திருக்குறள் போன்ற நூல்கள் கொண்டது.
  5. இளமை — பல பிள்ளைகளைப் பெற்றும்  இளமை குன்றாதிருத்தல்
  6. வளமை — சொல் பொருள் இலக்கண இலக்கிய வளம் கொண்டிருப்பது.
  7. தாய்மை — ஏனைய மொழிகளுக்குத் தாயாக இருப்பது.
  8. தூய்மை — பிற மொழிச் சொற்கள் கலப்பின்றி இருப்பது.
  9. செம்மை — செம்மொழிக்குரிய பண்புகளைக் கொண்டிருப்பது.
  10. மும்மை — இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழாக இருப்பது.
  11. இனிமை — கற்குந்தோறும் இனிமை தோன்றுவது.
  12. தனிமை — வேற்று மொழிச் சொற்கள் அகத்தியமின்றி தனித்தியங்கும் தன்மை கொண்டது.
  13. பெருமை — போற்றப்படத் தக்கது.
  14. திருமை — செழுமையானது.
  15. இயன்மை — இயல்பாகவே தோற்றம் பெற்றது. 
  16. வியன்மை — உலகெங்கும் வியாபித்துக் காணப்படுவது.

தமிழ் மொழியின் தொன்மையை நோக்கும்போது கி.மு.12,000 ஆயிரம் ஆண்டளவில் தமிழன் ஒலியெழுத்துக்களை அமைத்தான்.
தொடர்ந்து கி.மு. 11,000 ஆண்டளவில் பல்துறை சார்ந்த இலக்கியங்கள் உருவாகின. இந்த இலக்கியங்களை ஆய்வு செய்ய, பண்டையோன் மரபில் வந்த பாண்டிய மன்னர் கழகங்களை உருவாக்கினர். கழகம், சங்கம் என்றும் சொல்லப்படுகிறது. சங்கம் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழுக்கே உரியது. எமது தாய் மொழியானது 50,000 ஆண்டுகளுக்கு முன்னதான வரலாற்று ஆவணங்களையும் 5,000 ஆண்டு காலத்திலான இலக்கண வளத்தையும் கொண்டது.

இவ்வாறு தொன்மைச்சிறப்புடையதுதான் எமது தாய் மொழியான தமிழ் மொழி. தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் எனப்பட்ட திராவிட மொழிகளைத்  தமிழன்னை பிறப்பித்தாலும் தான் இளமை குன்றாமல், தனித் தன்மையை இழக்காமல், அழியாமல், சிதையாமல் கன்னித் தமிழாக என்றும் தனி நடை போடுகிறாள்.

இந்த திராவிட மொழிகள் தூய தமிழன்னையிடமிருந்து எவ்வாறு பிறந்தன? என்றொரு வினா எழுகிறது. தமிழ் மொழியுடன் வடமொழியின் கலப்பினால் தான் இந்த மொழிகள் பிறந்தன.
கடைசியாக மலையாளம் பிறந்தது 15 ஆம் நூற்றாண்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு மேலும் மேலும் தமிழ் மொழியுடன் வடமொழி மிதமாகக் கலந்து மணிப் பிரவாள நடை உண்டாகியது. இது என்னவென்றால் மணியும் பவளமும் மாறி மாறிக் கோர்த்த மாலை போல தமிழுடன் சமஸ்கிருதம் பாதிக்குப் பாதியாகக் கலந்திருந்தது. இதுவே மணிப் பிரவாள நடை. 

இப்படி தமிழ் அழிந்து விடும் நிலைக்குத் தள்ளப் படுவதையுணர்ந்த மறைமலை அடிகள், பருதிமாற்கலைஞர் போன்ற தமிழார்வலர்கள் கி.பி.1916 இல் தனித் தமிழியக்கத்தைத் தொடக்கி, தமிழ் அழிந்து விடும் பேரிடரிலிருந்து காத்தனர். பின்பு தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் அதை முன்னெடுத்துச் சென்றனர். பின் தேவ நேயப்பாவாணர் தனது வாணாளில் 50 ஆண்டு காலத்தைத் தமிழாராய்ச்சியில் செலவிட்டு தமிழுக்கு உயிரூட்டினார். அதனால் இப்போது தமிழன்னை வீறுநடை போடுகிறாள் என்றால் மிகையல்ல.

மேலும் தமிழர்களின் ஆட்சி முறை, வாழ்க்கை முறை, மொழி, இலக்கியம், வணிகம் முதலியவற்றில் கி.மு. ஆயிரங்களுக்கு முன்னரே தமிழர் மிகவுயர்ந்து விளங்கியமைக்குக் கழக நூல்கள் சான்று பகர்கின்றன. அச்சான்றுகளை இக்கால அகழ்வாராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

இத்தகைய பெருமைக்குரிய தமிழ் மொழியின் வரலாறுகள் திரிக்கப் பட்டு, தமிழின் புலமைகள் மற்றும் அதன் கலைச் செல்வங்கள் களவாடப்பட்டு, அவற்றிலுள்ள அரிய செய்திகளைத்
தங்களுடையதாக்கிய பின் அதன் மூலப் பிரதிகள் சுட்டெரிக்கப்பட்டன. இந்த திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகளுக்கு உரித்தானவர்கள் யார் என்று கேட்டால், ஈரான், ஈராக் பகுதியிலிருந்து மேச்சல் நிலம் தேடி வந்தேறிய ஆரியரே. அவர்களைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அவர்களின் மொழியான சமஸ்கிருதமே தமிழின் மூல மொழி என்று பொய்யுரைகள் புனையப்பட்டு மெய்யாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கற்றறிந்த தமிழ்ப் புலவர்களும் இதை உண்மையென நம்பிக் கிடந்தனர். “சமஸ்கிருதத்தினால் தமிழ் வளம் பெற்றது” என்றொரு பொய்யான கூற்று பண்டிதர்களிடத்திலும் பாமரர்களிடத்திலும் வலம் வந்து கொண்டிருந்தது. இதை அறிந்த மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் வெகுண்டெழுந்து, தமிழ் மொழி, வடமொழி ஆகியவற்றின் வேர்ச் சொற்களை ஆராய்ந்து அதன் பயனாக, வடமொழி வரலாறு, தமிழ் மொழி வரலாறு என இரு நூல்களை 1972 இல் எழுதி 1974இல் வெளியிட்டார். அதிலிருந்து வடமொழியானது தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவில்லை; மாறாக, தமிழ் மொழிதான் வடமொழியின் தாய் மொழியாகவுள்ளது என்பதை மிகத் துல்லியமாக, வெளிநாட்டு மொழியியல் வல்லுநர்களும் வியக்கும் வகையில் நிறுவிக் காட்டியுள்ளார்.

மேலும், தமிழ் மொழியில் மிகப்பல வட சொற்கள் தேவையற்ற முறையில் திட்டமிடப்பட்டே புகுத்தப்பட்டுள்ளன. இந்த வட சொற்களைத் தமிழ் மொழியைவிட்டு நீக்கினால் தமிழ் மொழி அழிந்து விடாது. அது மிடுக்குடன் தனக்குத் தேவையான சொற்களைத் தனது வேர்ச் சொல்லில் இருந்து தோற்றுவித்துப் புதுப் பொலிவுடன் திகழும். அதேநேரம், வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற்களை நீக்கினால் வடமொழி அழிந்து படும். இதிலிருந்தே விளங்கவில்லையா தமிழ் மொழிதான் வடமொழிக்கு உதவிய தாய் மொழியென்று? 

இலங்கையின் கம்பந்தோட்டா மாவட்டம், திஸ்ஸாமஹராமாவில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இருந்து பொறிக்கப்பட்ட மண்கல துண்டுகள்: இடமிருந்து வலமாக முதல் எழுத்து “ளி”, இரண்டாவது எழுத்து “ரா” மற்றும் மூன்றாவது “தி”. வலமிருந்து இடமாக அவை “திரளி” என படிக்கப்படுகின்றன. நான்காவது மற்றும் ஐந்தாவது குறியீடுகள் அல்லது சுவர் ஓவியங்கள் ஆக உள்ளன. ஆறாவது எழுத்து “மு” மற்றும் ஏழாவது எழுத்து “றி”. கடைசி இரண்டு எழுத்துக்கள் இடமிருந்து வலமாக “முறி” என படிக்கப்படுகின்றன. புராணத்தின் காலமுடிவைக் குறிக்கும் செங்குத்து கோடு சிறிது தொலைவில் காணப்படுகிறது.

அத்துடன்,  கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமற்கிருத மொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி என்பவர் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பின்பற்றியே தான் அதை எழுதியதாக, தான் எழுதிய “சாம்பவதி பரிணயம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான வரலாறுகள்  இப்படி இருக்கும்போது, பின் தோன்றிய வடமொழியானது தமிழ் மொழியைத் தாழ்த்தி தான் முன்னுக்கு வருவதற்குக் காலங்காலமாக கங்கணங்கட்டி நிற்கிறது. இன்றும் கூட தமிழை அழித்துவிடச் சில சூழ்ச்சிகள் நடந்து கொண்டுதான்
இருக்கின்றன. அதனாலேயே ஆரியத்தையும் வடமொழியையும் சாடிப்பேசும் நிலை எமக்கு ஏற்படுகின்றது.

இந்தியாவில் மற்றைய மாநிலங்களில் மொழிக் கல்வி கட்டாயம் என்று இருக்கும் நிலையில் தமிழ் நாட்டில் மாத்திரம் கட்டாயமின்றி விருப்ப மொழியாக இருக்கிறது. இதைப்பற்றி எண்ணும்போது
தமிழகத்தின் ஆட்சியில் இருப்பவர்களின் விழிப்புணர்வற்ற தன்மை வெளிப்படுகிறது.

தமிழ் நாட்டிலும் சரி தமிழீழத்திலும் சரி இருக்கும் ஆட்சியாளர்கள் தமிழின விரோத ஆட்சியாளர்கள். அதனால் தமிழ் மக்களாகிய நாம் விழிப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டும். மொழியை அழித்தால் இனம் தானாக அழிந்து விடும்.  “தமிழின் இருப்பே தமிழரின் இருப்பு ” என்பதைப் புரிந்து தமிழ் அன்னையை வாழ வைக்க வேண்டும். 

வேற்று மொழியைப் படிக்கலாம்; அதில் பாண்டித்தியமும் பெறலாம். ஆனால் வேற்று மொழிச் சொற்களை எழுத்திலும்  பேச்சிலும் எம் மொழியுடன் கலப்பது, தவறு! தரக்குறைவு!! இனத்
துரோகம்!!! என்பதை யாவரும் அறிந்து கொண்டு தமிழன்னையை வாழ விடுவோமாக.

துணை நூல்கள்:
1.  தழிழ்   10
     இத்தாலி மேற் பிராந்திய கல்வி மேம்பாட்டுப் பேரவை
 2.  தமிழ் மொழி
      பட்டயக் கல்வி முதலாம் வருடம்.
3.  இணையம்.

உங்கள் கவனத்திற்கு