வலி சுமந்த மே மாதத்தில் தமிழ் தேசியத்தை சிதைக்கும் களியாட்டங்கள் விழி தமிழா!


அனைவருக்கும் வணக்கம்.
இத்தாலியில் சமீபகாலமாக எமது வருங்கால சந்ததியின் தேசிய உணர்வை சிதைக்கும் வகையிலும் ,சமூகச்சீர்கேடுகளை உருவாக்கும் நோக்கிலும் திட்டமிட்டு சில விடயங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. தாயகத்தில் இடம்பெறும் சமூகச்சீர்கேடுகள் போலவே இங்கும் எமது இளைய தலைமுறையினரைத் திசை திருப்பும் வகையில் கேளிக்கைகள், களியாட்டங்கள் போன்ற செயல்களை ஒழுங்குபடுத்தி, இளம்சமூகத்தினரை அவர்களின் மாயவலைக்குள் சிக்க வைக்கிறார்கள். அதற்கு எம்மவர்களில் சிலர் துணைபோகிறார்கள்!
குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் மிகப்பெரிய தமிழின அழிப்பு நடந்தேறியது. அது தமிழனாகப் பிறந்த அனைவர் மனதிலும் ஆழமான வடுவாக பதிந்தே உள்ளது. இதற்கு நீதி கோரி கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்த்தேசிய அமைப்புகள் தாயகத்திலும் புலத்திலும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த வலிசுமந்த மாதத்தில் எமது வருங்கால இழைய சந்ததிக்கு தமிழ்த்தேசிய உணர்வூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது நாமனைவரும் அறிந்ததே! அதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் களியாட்ட, கேளிக்கை நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இதுவே சர்வதேச சமூகத்தின் முன் ஈழத்தமிழின அழிப்புக்கெதிராக நடாத்தப்படும் செயற்பாடுகளுக்கு வலுச்சேற்கும் என ஆழமான நம்பிக்கை கொண்டு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பலவகையான அறவழிப் போராட்டங்களை நடாத்தி வருகின்றோம் .ஆனால் இவை எல்லாவற்றையும் மழுங்கடிக்கும் செயற்பாடுகளை தேசத்தின் நலன் கருதாது தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் நடவடிக்கையாகவே இவ்வாறான களியாட்ட, கேளிக்கை நிகழ்வுகள் தமிழீழ மக்களால் பார்க்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்ள மறுத்து இயங்கும் இந்நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எம் அன்புக்குரிய ஈழத்தமிழ் மக்களே! எங்கெல்லாம் எமது சமூகத்தினர் ஒன்று கூடுகிறார்களோ அங்கெல்லாம் எமது இன
ஒற்றுமையையும் பண்பாட்டு விழுமியங்களையும் எமது தேசிய உணர்வையும் சிதைக்கும் வகையில் பல செயல்களைச் செயற்படுத்தி வருகின்றனர். நாம் யார் என்பதையும் எமது அடையாளத்தை மறந்தும், இப்படியான சூழலுக்குள் சிக்கி விடாமலும் எமது இளைய தலைமுறையினரை அதற்குள் அகப்பட்டு விடாமலும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதனால் அனைவரையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.