வேர்களைத் தேடும் விழுதுகள்-நீர்வேலி

நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் என்றதும் பனைமரம் அதன் குறியீடாக அமைவதைப்போல நீர்வேலி என்றதும் எல்லோரது நினைவுக்கும் வருவது வாழைமரம் ஆகும். இவ்வூரின் பெயர்க்காரணமாக வலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் “நீர்வேலி” என்னும் பெயரைக் கொண்டதாகவும்  மேலும் நிலத்தின் கீழ் நன்னீரூற்று அமைந்துள்ள சிறப்பும் இயற்கையாகவே இக்கிராமத்துக்கு உண்டு என்பதாலும் “நீர்வேலி” என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. இது தவிர “வேலி” என்ற சொல்லிற்கு ஊர், இடம் என்ற பொருள்களும் தமிழ் அகராதியில் உண்டு. ஆகவே மன நீர்மை மிக்க மக்கள் வாழும் ஊர் என்ற பொருளிலும் இது வழங்கப்பெறக் காணலாம். “நீரகம் பொருந்திய ஊரகத்திரு” என்னும் ஒளவைப்பாட்டியின் வாக்கிற்கமையப் பொருந்திய இக்கிராமத்தில் வாழும் மக்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்களென்றால் மிகையாகாது. இக்கிராமம் பலவகைச் சிறப்புகளும் கொண்டதாகவே அமைந்திருக்கின்றது. மனிதவாழ்க்கைக்கு இன்றியமையாதது நீரேயாகும். இந்த நீர்வளம் இயற்கையாக அமைந்திருப்பதும், அதற்கேற்ப நிலவளச் சிறப்பு அமைந்திருப்பதும் மிகவும் சிறப்பிற்குரியனவே.

யாழ்ப்பாண நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும் பிரதான வீதியில் 10வது கிலோமீற்றரிலிருந்து 13வது கிலோமீற்றர் வரை அமைந்துள்ளதே இக்கிராமம். இக்கிராமத்தின் கிழக்குப் பக்கமாக கிராமத்தை ஊடறுத்துச் செல்வது யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியாகும். இக்கிராமத்தின் மேற்குப்பக்கமாக கிராமத்தை ஊடறுத்து யாழ்ப்பாணத்திலிருந்து அச்சுவேலிக்குச் செல்லும் வீதியே இராச பாதை வீதியாகும். இன்னும் கிராமத்தின் வடக்குப் பக்கமாக யாழ்.பருத்தித்துறை வீதியில் வாய்க்கால் தரவைப் பிள்ளையார் கோயிலடியிலிருந்து கிராமத்தை ஊடறுத்து அச்செழுவூடாக செல்லும் வீதி புன்னாலைக் கட்டுவன் வீதியாகும். மேலும், கிராமத்தின் தென்பகுதியில் கந்தசுவாமி கோயிலடியில் யாழ். பருத்தித்துறை வீதியிலிருந்து ஆரம்பாகி கிராமத்தின் மத்திய பகுதியையும் தெற்குப் பகுதியையும் பிரிக்கும் வகையில் கரந்தனுக்கு ஊடாக ஊரெழுச் சந்தியை நோக்கிச் செல்லும் வீதியே  நீர்வேலி கரந்தன் வீதியாகும்.

இந்த வீதிகள் கிராமத்தின் இயற்கை நிலப்பகுப்பிற்கு ஏற்றவகையிலேயே அமைந்துள்ளன என்றால் ஏற்புடைத்தாகும்.  ஏனெனில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் கிழக்குப் பக்கமாய் அமைந்த பகுதி வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதநிலப்பரப்பாலான பகுதியாகும். இம்மருத நிலப்பகுதியின் கிழக்குப்பக்கமே கிராமத்தின் கிழக்கெல்லையாக அமைந்துள்ள பாய்ந்துவரும் மழைநீரைத் தன்னகத்தே அடக்கி தனக்கு நீராலான எல்லையாக தொண்டமனாற்றையும் யாழ்ப்பாணக் கடலேரியையும் தொடுக்கும் நீர்நிலையமைந்துள்ளது.

வடக்கே அமைந்துள்ள நீர்வேலி புன்னாலைக்கட்டுவன் வீதிக்கு வடக்கே ¼ மைல் தூரத்தில் அமைந்துள்ளது கிராமத்தின் வடக்கெல்லைக் கிராமமான சிறுப்பிட்டிக் கிராமம். மேட்டு நிலமாகவும், தரிசு நிலமாகவும் அமைந்த சிறிய பகுதி என்பதனாலேயே சிறுப்பிட்டி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. மேற்கே யாழ். நல்லூர் அச்சுவேலி இராசபாதைக்கு கிழக்கால் அமைந்த பகுதி மணலும் களியும் சேர்ந்த இருவாட்டி நிலப்பகுதியாகவும், இராசபாதையின் மேற்குப் பகுதி செம்மண்ணும், செம்மண் களியும் சேர்ந்த செம்மண் நிலப்பகுதியாகவும் அமைந்துள்ளது. இந்த இராசவீதியிலிருந்து ½ மைல் தூரத்திலேயே அமைந்துள்ளது நீர்வேலியின் மேற்கெல்லைக் கிராமமாகிய அச்செழு, ஊரெழு, உரும்பிராய் ஆகிய கிராமங்களின் ஊரெல்லைகள். தெற்கே கிராமத்தின் மத்திய பகுதியையும் தென்பகுதியையும் பிரிக்கும் எல்லையாக அமைந்த கரந்தன் வீதியின் தென்புறமும் செம்மண்களி சேர்ந்த நிலப்பகுதியாக அமைந்துள்ளது. இந்த வீதியிலிருந்து தெற்கே ½ மைல் தூரத்தில் அமைந்துள்ளது கிராமத்தின் தெற்கெல்லைக் கிராமமாகிய கோப்பாய்க் கிராமம். தென்மேற்குப் பகுதி ஆரம்ப காலத்தில் சிறு, பற்றைக்காடுகள் நிறைந்திருந்ததால் ’கரந்தன்’ எனவும் மேற்குப் பகுதி: மாலையெனவும் வடமேற்குப் பகுதி: கவடியெல்லை, மாசுவன் எனவும், தென்கிழக்குப் பகுதி கிராஞ்சி எனவும் வழங்கப்படுகின்றது. மற்றும் கிராமத்தின் நடுப்பகுதியில் கட்டிமேடை, ஒல்லை, கேராலி வத்தை, யாரைப்புலம், கம்பன் புலம், முங்கொடை என்பனவும் கிராமத்திலுள்ள குறிச்சிப் பெயர்களாகும்.

கிராமத்தின் நில அமைப்பும் நீர்மட்டத்திலிருந்து மேற்கே செல்லச் செல்ல உயர்ந்துகொண்டு செல்வது காணக்கூடியதாகவுள்ளது. இதனால் நீரின் சுவையும் கிழக்கே எல்லையில் உவர் நீரும் மேற்கே செல்லச் செல்ல படிப்படியாகச் சுவைத் தன்மை மாறி நன்னீரும் பெறக்கூடியதாகவுள்ளது.  இக்கிராம எல்லைக்குள்ளேயே நீர் மட்டத்திலிருந்து நிலத்தின் உயரம் 20அடி வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்வேலியின் செல்வமாக சுமார் 3900 மேற்பட்ட பரப்புடைய வயல் நிலம் இருக்கிறது. ஆவணி அல்லது புரட்டாதி மாதங்களில் இங்கு நெல் விதைப்பு இடம்பெறும். அறுவடையின் பின்னர் இத்தரவை மந்தை மேய்ப்பிற்கு உரிய நிலமாகப் பேணப்படுவதையும் அவதானிக்கலாம்.

மேலும் கிராமத்தின் கிழக்கெல்லையாக  சமவெளியான தரிசுநிலம் பெருமரங்களற்ற வெளியாகவும், களிமண் பிரதேசமாகவும் பயிரேதும் செய்ய முடியாத உவர் நிலமாகவும் உள்ளது. இந்நிலப்பகுதியில் ஆரம்பகாலத்தில் விமான தளம் அமைக்கத் திட்டமிடப்பட்டதாகவும் சதுப்பு நிலப் பகுதியதனால் பொருத்தமில்லையெனக் கைவிடப்பட்டதாகவும் அறியக்கிடக்கின்றது. . புல்தரவையாகக் காணப்படுகின்ற இப்பகுதியில் மந்தை இனங்கள் கூட்டங்கூட்டமாக மேயும் மேய்ச்சல் தரவை, மந்தையினங்கள் நீர் அருந்த குளங்கள், குட்டைகள், அதையடுத்து மாட்டு வண்டிச் சவாரி நடக்கும் சவாரித் திடல் முற்றவெளி 1950ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இன்னும் கிழக்குப் பகுதியில் தாழைகள் கூட்டம் கூட்டமாக நிற்கும் காட்சியும் ஒரு அழகுக்காட்சியாகும். வயல் நிலத்திற்கு அடுத்த படியாக வீட்டுநிலப்பயிர்ச் செய்கையும் முக்கிய இடம்பெறுகின்றது. ஒரு கொடி நறுமலர்களை மலர்வதற்கு நல்ல நீர்வேண்டும், பசளை வேண்டும் அதே போலக் கிராமத்தின் புகழ்பூப்பதற்கு நல்லவளம் வேண்டும். மக்களின் செயற்பாடுகள் வேண்டும். மேற்கே செல்லச்செல்ல நல்ல செம்மண் பரப்புகள் கொண்ட பொன் விளையும் பூமி உண்டு. இந்தப் பூமிகளைப் பண்படுத்திக் காலத்துக்குக் காலம் வேண்டும் பயிர் செய்து‚ “ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை” என்று பறைசாற்றக் கூடிய ஏராளர்களின் நன்முயற்சி இக்கிராமத்தின்  புகழ்பூப்பதற்கு ஒரு காரணமாகும்.

வாழைச்செய்கைக்கு பெயர்பெற்ற பூமியான இங்கே 12000 பரப்பு தோட்டநிலத்தில் வாழைச்  செய்கை பண்ணப்படுகின்றது. தோட்டங்களில் எட்டு அடி இடைவெளியில் வாழைக்குட்டிகளை நாட்டிச் செய்கை பண்ணுவதை அவதானிக்கலாம். இதனால் “கதலிவனம்” என்கிற சிறப்பை உடையது. தவிர புகையிலை, வெங்காயம் போன்றனவும் மரக்கறிச் செய்கைகளும் பரவலாக நீர்வேலியில் இடம்பெறுவதை அவதானிக்கலாம். பொருளாதார ஈட்டல்களுக்காக  பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை வேலைகள்  போன்றவற்றில் மக்கள் ஈடுபடுகின்றனர். 

மேலும் விவசாயம் மட்டுமல்ல கைத்தொழிலும் நாட்டு வளர்ச்சிக்கு இன்றியமையாதனவேயென அறைகூவி நிற்கும் கைத்தொழிற் சாலைகளும், கைத்தொழிலாளர்களும் கிராமத்தின் புகழுக்கு இன்னொரு காரணமாக அமைந்துள்ளன. இரும்புத் தொழில்கள் மற்றும் மரவேலைகள் நீர்வேலி காமாட்சியம்பாள் கைத்தொழிற்சங்கத்தினை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இங்கே மிதிவண்டி, மணிக்கூடு போன்றன கூட உருவாக்கப்பட்டதாகக் கூறுவர். இன்றும் நீர்வேலிப் பூட்டு, நீர்வேலிக் கத்தி, நீர்வேலி வண்டில் என்பன தரங்குன்றாது சந்தையில் முன்னணியில் நிற்கின்றன. இன்றும் நீர்வேலித்தெளி கருவியும் சந்தையில் முன்னிற்பதேயாகும். இந்துச்சிற்ப சாத்திர மரபுப்படி வாகனங்கள், தேர் போன்றவற்றை செய்து வரும் ஆச்சாரியார்களும் நகை வேலை செய்யும் மக்களும் நீர்வேலியின் கைத்தொழிற்துறையில் தடம் பதித்துச் செயற்படுகின்றனர். இவற்றினைப் போலவே சுருட்டுக்கைத்தொழிலும் சிறப்புற்று விளங்குகிறது.

இக்கிராமத்தவர்கள் தொன்றுதொட்டு வள்ளுவர் கூறிய வழியில் நின்று விருந்தோம்பலில் சிறந்து விளங்கியுள்ளார்களென்பதும் அப்பண்பு இக்கிராம மக்களுக்குப் பாரம்பரியமானதென்பதும் யாவராலும் போற்றப்படும் உயர்ந்தபண்பாகும். பெயருக்கேற்ற வகையில் நீர்வேலி தண்ணீருக்குப் பஞ்சம் இல்லாத ஊர். இதனால் நீர்ப்பஞ்சம் இல்லாத இந்த ஊரில் விளைச்சலுக்கும் குறைவில்லை. பஞ்சமில்லாத இந்த ஊரில் வாழ்வோர் கொடைச்சிறப்பு உடையவர்களாக வாழ்கின்றனர். இக்காரணத்தால் தொன்மைக்காலம் தொட்டு ஒழுக்கத்துடனும் கொடைச்சிறப்புடனும் இக்கிராம மக்கள் வாழ்ந்துள்ளனர். இக்கிராம மக்கள் வழங்கிய விருந்தோம்பலில்  மகிழ்ந்த வரகவி சின்னத்தம்பிப்புலவர் “நீர்வேலி கோப்பாய் நிறை செல்வமாகும்” என்று பாடியுள்ளார். இக்கிராம வளத்தைப் பாடமுனைந்த அறிஞர் கு.சிற்சபேசன்

“புன்னை மாதுளை பூங்கொதி மாபுளி
தென்னை கூவிளந் தேனுகர் வண்டினம்
துன்னு பூக வனந்தொறும் வாழையோ
அன்ன தாழையோடு அடர்ந்தது சோலையே”
 

என்று வியந்து பாடுகிறார்.

தவிர அறிஞர்களும் குருமார்களும் கலைஞர்களும் வேளாண்மை செய்பவர்களும் கவிஞர்களும் நிறைந்து வாழ்ந்ததாலும், வாழ்வதாலும் இவ்வூர் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது. அதிகளவில் இந்துக்கள் வாழும் இந்த ஊரில் இந்துக்கோயில்கள் அதிகளவிலும் சிறப்புற்றும் காணப்படுகின்றன. இவையனைத்துக்கும் மேலாக நீர்வேலிக் கிராமத்தில் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மூன்று பெரும் சைவக் கோயில்கள் வடக்கு, மத்தி, தெற்கு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளதோடு மற்றும் பல ஆலயங்களும் ஆங்காங்கே அமைந்துள்ளன. நீர்வையம்பதி – நீர்வேலி என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற இந்த ஊர் வரலாற்றுச்சிறப்புமிக்கது. யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர்களில் ஒருவனான சிங்கைப் பரராசசேகரனின் மருமகனும் அவனது முதல் மந்திரியாகத் திகழ்ந்தவனுமாகிய தமிழில் இரகுவம்ச மகாகாவியத்தை எழுதிய ‘அரசகேசரி’ என்பவர்  அமைத்ததாகக் கருதப்படும் அருள்வளர் அரசகேசரிப் பிள்ளையார் கோயில் நீர்வேலியூரின் நடுநாயகமாக விளங்குகிறது. இது இவ்வூரின் தொன்மைச் சிறப்பைக் காட்டி நிற்கிறது. இவ்வூரினூடே பழங்கால அரசர்கள் பாவித்த “இராசவீதி” ஊடறுத்துச் செல்கின்றமையும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

ஊரின் நடுநாயகமாக விளங்கும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோவிலின் திருமஞ்சனக்கிணறு அற்புதமானதும் தான்தோன்றியானதும் ஆகும். இதனை ஒட்டிப் பல செவிவழிச் செய்திகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த ஊற்றிலிருந்து வெளிப்படும் தீர்த்தமானது அமிர்தம் போலவும், நல்லநீர்ப் பெருக்கோடும் இருப்பது கண்டு ஆனந்தமடைந்து தீர்த்த அமைப்புள்ள இடத்தில் ஆலயம் அமைப்பதே அரசமரபு எனக்கருதி அப்புண்ணிய தீர்த்தத்தை திருமஞ்சனமாகக் கொண்டு, விநாயகப்பெருமானுக்குரிய ஆலயம் அமைத்து பிரதிட்டை செய்தார். அரசகேசரி என்ற மந்திரியால் 16 ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதால் இவ்வாலயம் அரசகேசரிப் பிள்ளையார் கோயில் என வழங்கப்படலாயிற்று.  செம்மண் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோயில் என்றும் அழைப்பதுண்டு. இந்த ஆலயத்தில் உள்ள திருத்தேர் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்தது. கலைநயம் மிக்கது.

இத்திருக்கோவில் போலவே நீர்வேலி தெற்கில் புகழ்மிக்க கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. அழகிய இராசகோபுரத்துடன் திகழும் இக்கோவிலிலுள்ள ஆறுமுகசுவாமி மற்றும் நடராசர் திருவுருவங்கள் புராதன சிற்பக்கலைக்கு சான்றாகும்.

நீர்வேலிக் கிராமத்தின் வடகிழக்கில் வாய்க்காற்தரவைப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவ்வாலயம் ஆலய குருமார்களால் பரிபாலிக்கப்படுகின்றது. ஆலயத்திலுள்ள பழைமை வாய்ந்த ஜோடிக்குதிரை வாகனம் கண்ணையும் கருத்தையும் கவரும் எழிலுடையது. 18 ஆம் நூற்றாண்டில் உருவான இவ்வாலயம் சிறப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தையும், அற்புத மகிமைகளையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளதொரு ஆலயமாகும்.

இம்மூன்று புராதன ஆலயங்களையும் தவிர நீர்வேலி வடக்கில் செல்வக்கதிர்காம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலய கருவறை வடிவமைப்பு சிறப்பானது. குமாரபுட்கரணி என்ற இந்த ஆலய தீர்த்தக்கேணியின் வடிவமைப்பும் வித்தியாசமாக உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் அருகருகே காமாட்சியம்பாள் ஆலயம்ராசராசேசுவரியம்பாள் ஆலயம்காளியம்பாள் ஆலயம் என்ற மூன்று பெரிய அம்பாள் ஆலயங்கள் அமைந்துள்ளன. தவிர வைரவர், காளி போன்ற பல்வேறு தெய்வங்கட்கும் ஊரில் பல்வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்வேலி மேற்கில் மீனாட்சியம்பாள் ஆலயமுள்ளது. ஊரினைச் சுற்றிலும் காவற்தெய்வங்களின் சிறிய பெரிய ஆலயங்கள் உள்ளன.
இந்த ஆலயங்கள் யாவற்றிலும் வருடாந்தம் பெருந்திருவிழாக்களும் தினமும் கிரமமாகப் பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவற்றினைப் போலவே நீர்வேலி வடக்கில் கத்தோலிக்க மக்களுக்காக பரலோக மாதா தேவாலயம்  வழிபாடாற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி  பெற்றுள்ள இந்தத் தேவாலயமும் ஊரின் வளத்தில் பங்காற்றி வருகின்றது. நீர்வேலிக் கிராமத்தின் எல்லைகள் நாலாபக்கங்களும் ஆலயங்கள் அமைந்து காவல் தெய்வங்களாக விளங்கும் சிறப்பு மேலும் கிராமத்தின் சிறப்பிற்கும் புகழுக்கும் ஒரு படிக்கல்லாகும்.

கல்வி வளர்ச்சியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியினது பங்கு பிரதானமாகும். நீர்வேலியில் அத்தியார் இந்துக்கல்லூரி, சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை, கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம், றோ.க.த.க. பாடசாலை, இந்துத்தமிழ்க்கலவன் பாடசாலை என்ற ஐந்து பாடசாலைகள் அமைவு பெற்றுள்ளன.

அத்தியார் இந்துக் கல்லூரி பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழத்துஇலக்கிய மரபிலும் இந்துப்பண்பாட்டு மரபிலும் முக்கிய பங்காற்றிய பேரறிஞர்களில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரும் குறிப்பிடத்தக்கவர்களாவர். யாழ்ப்பாணமண்ணை பாரம்பரியமாகக் கொண்ட இவர்கள் அந்நியர் ஆட்சிக்காலத்தில் சைவமும் தமிழும் தழைத்தோங்க அயராது உழைத்த பெருந்தகைகளாக விளங்குகின்றனர். நீர்வேலியைப்பிறப்பிடமாகக் கொண்ட சிவசங்கரபண்டிதர் நாவலர் பெருமானாரின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன் இந்துப்பண்பாட்டின் ஒரு கனதியான பாத்திரமாகவும் திகழ்ந்துள்ளார்.  இவரது  மகனான சிவப்பிரகாசப்பிள்ளை என்பவரே அத்தியார் கல்லூரியின் உருவாக்கத்திற்கு காரணமாக திகழ்ந்துள்ளார். சிவப்பிரகாசப்பிள்ளை அவர்கள்  வித்தியசாலையை நீர்வேலியில் 1880 இல் நிறுவினார்.

அப்பாடசாலை  பண்டிதர் பாடசாலை என அழைக்கப்பட்டதோடு அது சைவபிரகாச வித்தியாசாலை என பதிவுப்பெயர் கொண்டதாக இவ் இந்துக்கல்லூரி விளங்கியது. நுற்றாண்டுகளுக்குமேல் இயங்கிய இப்பாடசாலை சிவப்பிரகாசபண்டிதரின் மறைவின் பின் அவரின் மகன் நடராசப்பண்டிதரால் நிர்வகிக்கப்பட்டு  வந்தது. இக்காலத்தில் பண்டிதர் குடும்பத்தினர் தமது சொந்தச்செலவில்  காணி வாங்கி சாதாரண கொட்டில்கள் அமைத்து கல்வி போதித்திருந்தனர்.பல்வேறு சூழ்நிலை காரணமாக குறிப்பாக பொருளாதாரப்பிரச்சினை காரணமாக பண்டிதர் நடராசரால் பாடசாலை நடாத்த முடியாத நிலைவந்து அதனை அவர் கையளிக்க விரும்பிய நிலையில் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்கள் அதனை விலைக்கு வாங்கி தனக்கு சொந்தமாக்கினார். பண்டிதர் காலத்தில் இருந்த காணியை விட மேலும் பல காணிகளை வாங்கி கட்டடங்கள் பலவும் அமைக்கப்பட்டு கல்விச்செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டன.  இதனைத்தொடர்ந்து அத்தியார் அருணாசலத்தின் பொறுப்பின் கீழ் தமிழ்ப்பாடசாலை இயங்கிவந்த அதேவேளை ஆங்கிலக்கல்வியை விருத்திசெய்யும் நோக்குடன் ஒரு உபபாடசாலையான நீர்வேலி இந்து ஆங்கிலப் பாடசாலையை 1929 இல் நிறுவினார். 1945 இல்  “அத்தியார் இந்துக் கல்லூரியாகிய தமிழ்ப்பாடசலையும்1929 இல் ஆரம்பிக்கப்பட்ட நீர்வேலி இந்து ஆங்கிலப்பாடசலையும் இணைக்கப்பட்டு அத்தியார் இந்துக் கல்லூரி என்ற பெயரில்  முழுமைபெற்று இயங்கத்தொடங்கியது. இதே போலவே 125 ஆண்டுகளைக் கடந்தும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை அறிவொளி பரப்பி வருகிறது.

கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயமும் சிறுவர்களின் அடிப்படைக்கல்வியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. இப்பாடசாலை நீர்வேலிக் கிராமத்தில் கரந்தன் சந்தியில் இராசவீதியின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இப்பாடசாலை அமைந்துள்ள காணியை திருமதி அன்னபூரணம் இராமுப்பிள்ளை  அவர்கள் அன்பளிப்பாக வழங்கியமையால் இராமுப்பிள்ளை வித்தியாலயம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாடசாலை 08/01/1979 இல் 20மாணவர்களுடனும் ஒர் ஆசிரியருடனும் ஆரம்பிக்கப்பட்டது.

நீர்வேலி றோ.க.த.க பாடசாலை 1905ஆம் ஆண்டில் சுவாமி ஞானப்பிரகாசரால் சிறிய ஓலைக்கொட்டிலில் நிறுவப்பட்ட பாடசாலையும். நீர்வேலியில் பரலோகமாதா தேவாலயமும் இப்பாடசாலையும் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து நிறுவப்பட்டன. இப் பாடசாலை இன்று மாடிக்கட்டிடங்கள் கணினிக்கூடம், அதிபர் அலுவலகம் நூல் நிலையம், சிறிய விளையாட்டு மைதானம், சமையற் கூடம் ஆகிய வளங்களுடன் காணப்படுகிறது.

இவை போலவே கடந்த ஐம்பது வருடங்களாக நீர்வேலி தெற்கில் இந்துத்தமிழ்க்கலவன் பாடசாலை இயங்கி வருகின்றது. நீர்வேலியின் கல்விப்புலத்தில் தனியார் கல்வி நிலையங்களும் முன்பள்ளிகளும், பாலர் பகல் விடுதியும் அறநெறிப்பாடசாலைகளும் கூட தத்தம் நிலையங்களை நாடி வருவோர்க்கு அறிவொளியூட்டி வருகின்றன. அதற்கு மேலாக ஆலயங்களும் சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன. சிவசங்கரபண்டிதர் என்னும் சைவப் பெரியார் இக்கிராமத்தில் வாழ்ந்து சைவப்பணி, தமிழ்ப்பணியாற்றியதோடு திண்ணைப்பள்ளிக்கூடமமைத்து தமிழ் இலக்கண வகுப்புக்கள் நடாத்தி வந்தமையும் கலைவளர்க்கும் கலைநிலையங்களும், வாசிகசாலைகளும், இந்துமத வளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் சமய அபிவிருத்தி மன்றங்களும், மாதர் அபவிருத்தி மன்றங்களும், விளையாட்டுக் கழகங்களும் ஆங்காங்கே அமைந்து செயலாற்றுகின்றன. 

மேலும் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதை நிலைநாட்ட நோய்களைக் குணமாக்க சித்த வைத்திய முறையில் வைத்தியசாலைகளும், மேலை நாட்டு வைத்தியசாலைகளும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் அமைந்து சேவையாற்றி வருகின்றமையும் ஓரம்சமாகும். இன்னும், கிராமத்தின் மேற்கு ஊர்களிலிருந்து பாய்ந்துவரும் மழைநீர் கிழக்குநோக்கிப் பாயும் ஆறுபோன்ற பெரும் வெள்ளவாய்க்கால்கள் நான்கு அமைந்துள்ளமை இக்கிராமத்துக்குப் பெரிதும் பெருமை தருவதாக அமைந்துள்ளமையும் கிராமத்தின் புகழுக்கு ஒரு அம்சமாகும். எனவே, பலவகைச் சிறப்புகளும் கொண்டதே “புகழ்பூத்த நீர்வேலி” என்பது வெளிப்படையாகின்றது.

அதுமட்டுமல்லாமல்  மாவீரரின் வீரம்செறிந்த விடுதலைப் போர்பற்றியும் இலட்சியப்பற்றுடன் இணைந்த இனப்பற்று, நாட்டுப்பற்று என்பவைபற்றியும் நீர்வை யூரார் அறிந்து கொண்டு, தம்மை இழந்து தமது இனத்தின் பெருமையையும் தாய்நாட்டின் விடுதலையையும் நேசித்த மண்ணாகவும்  தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தடம் பதித்த அழியாத வரலாறும் நீர்வையூருக்கு உண்டு என்பதும் தெளிவாகிறது. அந்தவகையில் விடுதலைப் போரிலே  வீர காவியமான சில மண்ணின் மைந்தர்கள் வருமாறு.

கப்டன் சிறையஞ்சான் சுந்தரேஸ்வரன் சஞ்சீவன்

வீரவேங்கை பாமா விஜயகுமார் கவிதா

வீரவேங்கை சிவநேசன்
சபாரட்ணம் சிவநேசன்
வீரவேங்கை ராதை
விக்கினேஸ்வரி கணேசு

வீரவேங்கை பாரதி சின்னத்தம்பி சுகிர்தா

2ம் லெப்டினன்ட் கண்ணையா வேலாயுதம் சிவகுமார்

வீரவேங்கை ஈழமணி செல்வம் நந்தன்

வீரவேங்கை சீலன்
குமாரசாமி ஜெயானந்தன்

கப்டன் ஜெகன் (அக்காச்சி) சிவகுருநாதன் சிறிகாந்தன்

மேஜர் கார்வண்ணன் (ராஜன்) கார்த்திகேசு வில்வராஜன்

லெப்டினன்ட் தொல்காப்பியன் சுப்பிரமணியம் வசந்தரூபன்

லெப்டினன்ட் துலாஞ்சினி துரைராசா வசந்தகுமாரி

2ம் லெப்டினன்ட் கர்ணன்
வீராச்சாமி இராஜேஸ்கண்ணா

2ம் லெப்டினன்ட் மன்மதன் தங்கவேல் நகுலேஸ்வரன்

வீரவேங்கை சுகி
துஸ்யந்தி நடேசபிள்ளை

வீரவேங்கை றெஜினோல்ட் பாலசிங்கம் கண்ணன்

2ம் லெப்டினன்ட் முத்தமிழ்செல்வன்
நல்லதம்பி நிசாந்தன்

2ம் லெப்டினன்ட் நங்கை சிதம்பரப்பிள்ளை சதீஸ்வரி

கப்டன் கண்ணாடி (ராஜன்)
இராசதுரை ஜெயக்குமார்
வீரவேங்கை புனிதன் (துமிலன்)
நாகரத்தினம் கஜன்

வீரவேங்கை அருணன் வீரச்சாமி அருளம்பலம் தேவதாஸ்

கப்டன் செந்தமிழ்நம்பி இராசையா பிரபாகரன்

லெப்டினன்ட் அமலன் (நகுலன்) வேலாயுதம் நகுலேஸ்வரன்

2ம் லெப்டினன்ட் நாதன்
அங்கமுத்து சந்திரகுமார்

வீரவேங்கை கோன் சண்முகம் பாலமுருகன்

வீரவேங்கை சோலைமதி
சின்னராசா சுஜாத்தா

வீரவேங்கை சின்னஅக்காச்சி பஞ்சலிங்கம் தயானந்தன்

 2ம் லெப்டினன்ட் போர்வாணன் ஆசீர்வாதம் பிரதீப்ராஜ்

 2ம் லெப்டினன்ட் கானகவேல் சின்னத்துரை கிருபாகரன்

 லெப்டினன்ட் சூரியன் பாலசிங்கம் ஜெயக்குமார்

மேஜர் செந்தூரன்
கபிலரட்ணம் சுசிகரன்

கப்டன் உதயசங்கர் செல்லத்துரை மங்களேஸ்வரன்

 2ம் லெப்டினன்ட் புலியவன் சுந்தரலிங்கம் மதன்

கப்டன் பெரியதம்பி (லட்சுமணன்)
பொன்னுத்துரை செலஸ்அமீன்

கப்டன் தமிழரசன் (சிவா) அருள்சீலன் கெலன்

 2ம் லெப்டினன்ட் நங்கை சிதம்பரப்பிள்ளை சதீஸ்வரி

 கப்டன் தயாவதி கணேசமூர்த்தி லலிதாதேவி

வீரவேங்கை வீரச்செல்வன் (வதனன்) பாலசிங்கம் சின்னப்பு யோசப்எடிசன்

இவ்வாறாக எனது பெற்றவர்களின் வேர்களைத்  தேட விளைகையில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட நீர்வை மண்ணின் சிறப்பும் விடுதலைக்காக வீரகாவியமான மறவர்கள் பற்றிய தேடலும் என் தேடலை உணர்வு பூர்வமாக்கியது என்பதில் எந்தவித  சந்தேகமுமில்லை.

போலோனியா திலீபன் தமிழ்ச்சோலை, இத்தாலி

உங்கள் கவனத்திற்கு