இத்தாலி பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலை வாணிவிழா 2025
புதிய புதிய ஆற்றல்களை நம்மிடத்தே உண்டாக்குகின்ற தன்மை படைத்த ராத்திரியான நவராத்திரியின் கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களைத் தருகின்ற முப்பெருந் தேவியரையும் வணங்கி, இறுதி நாளாகிய விஜயதசமி விழா பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் மிகவும் சிறப்புற நடைபெற்றது. இவ்விழாவினைப் பூசகர் திரு. சோதிலிங்கம் ஸ்ரீகரன் ஐயா அவர்கள் கலந்துகொண்டு பூசைகளை மிகவும் சிறப்பான முறையில் நடத்தியதோடு குழந்தைகளுக்கான வித்தியாரம்ப நிகழ்வான ஏடு தொடக்குதலும் நடைபெற்றது.


தொடர்ந்து பலெர்மோ ஒருங்கிணைப்புக்குழுவின் உபகட்டமைப்பான மாலதி கலைப்பள்ளி தவிர்க்க முடியாத காரணங்களால், சில காலங்களாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் பரதக்கலையை எமது எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் நோக்கில், புதிய நடன வகுப்புகள் ஆசிரியை செல்வி. கங்காதரன் சௌமியா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விஜயதசமி நந்நாளில் கலைத்தாயின் அருளோடும், எல்லாம் வல்ல நடராசரின் ஆசியுடனும் சலங்கைப் பூசைகள் இடம்பெற்று, இக்கலையை கற்பதற்கு பெற்றோர்கள் தமது குழந்தைகளை ஆர்வத்துடன் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.






















































