தமிழால் இணைவோம்


மதிப்பிற்குரிய பெற்றோர்களே !
எமது அடையாளத்தை இனங்காட்டுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கும் அன்பு மழலை செல்வங்களின் பெற்றோர்களுக்கு இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் ஓர் அன்பான, பணிவான வேண்டுகோள் !!!
இத்தாலி தேசத்தில் எம் ஈழத்தமிழரின் வழிவந்தவர்கள் தமிழ் மொழியை ,கலாசாரத்தை ,பண்பாட்டை அறிந்துகொள்வது மட்டுமின்றி புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் எம் இன அடையாளங்களுடன் வாழவேண்டும் .அதற்கு அடிப்டையான தாய்மொழிக் கல்வியை வழங்கும் நோக்குடன் நீண்ட காலமாகப் பணி செய்து வருவதே இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையாகும் .
இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் திலீபன் தமிழ்ச்சோலைகளானது எம் தாய்மொழியாம் தமிழ் மொழிக் கல்விக்காக
ஜெனோவா,பியல்லா,மாந்தோவா,ரெச்சியோ எமிலியா ,போலோனியா,வெரோனா,ரோம்,நாப்போலி,பலெர்மோ ஆகிய பிரதேசங்களில் இந்தப் புதிய கல்வியாண்டிலும் மாணவர்களை வரவேற்றுக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றது.


2025/2026 கல்வியாண்டிற்கான வகுப்புக்கள் புரட்டாதி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் மழலையர் நிலை, சிறுவர்நிலைக்குத் தயாராகவுள்ள மழலைச்செல்வங்களை தங்கள் பிரதேசத் திலீபன் தமிழ்ச்சோலைகளில் இணைத்து தமிழ்ப்பற்றுள்ள குழந்தையாக உருவாக்க முன்வரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்துப் பிரதேசத் திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் தமிழ் ஆர்வலர்கள் பேராசிரியர்கள் துணையுடன் தூய்மையான தமிழ் மற்றும் வரலாற்று மூலங்களையும் ஆய்ந்தறிந்து தரம் வாய்ந்த பாடநூல்களை உருவாக்கி தேர்வுகளை நடாத்தி வருவதும் தாங்கள் அனைவரும் அறிந்ததே. தேர்வுகளின் பெறுபேறுகள் எம் சிறார்களின் வாழிட மொழிக்கற்கை நெறிக்கும் மற்றும் உயர்கல்வி வகுப்புகளில் கூடுதல் புள்ளிகள் பெறவும் பயனுள்ளதாக அமையும் என்பதும் தெளிவு.
நாம் எங்கு வாழ்ந்தாலும் தமிழனாகத்தான் வாழ்வோம் என்ற தாரக மந்திரத்தை எம் குழந்தைகளுக்குள்ளும் விதைத்து விருட்சமாக்குங்கள்!


அழகுத் தமிழை ஆவலாய் பயின்றிடவும் ,உலகில் தமிழராய் ஒன்றிணையவும் ,ஊக்கமுடன் உயர்வு பெற்றிடவும் எங்களது திலீபன் தமிழ்ச்சோலையில் மழலைகளை இணைத்திடுங்கள்.
இனிவரும் காலம் நம் குழந்தைகள் கையில் என்பதனை நினைவில் வைத்துக்கொள்வோம்.
‘தமிழே எங்கள் உயிர்”
நன்றி.
இத்தாலி தமிழ்க் கல்விச்சேவை
