இத்தாலி பியல்லா நகரில் இடம்பெற்ற பல்லின மக்களின் மகாநாட்டில் ஈழத்தமிழர்கள்.
இத்தாலி பியல்லா வல்திலானா நகரசபையின் ஏற்பாட்டில் 05/07/2025 அன்று “போர்கள், காலநிலை மாற்றங்களை எதிர்த்து போராடுபவர்கள்” எனும் தலைப்பில் பல்லின மக்களை ஒன்றிணைத்து மகாநாடு நடைபெற்றது. இதில் ஈழத்தமிழர்களும் தமது தேசிய அடையாளங்களுடன் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இத்தாலி தேசிய அளவில் பணியாற்றும் துறைசார்ந்த நிபுணர்களும், பேராசிரியர்களும் போர்களால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக ஆளமான கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
ஈழத்தமிழர் சார்பாக உரையாற்றிய தமிழ் இளையோர் அமைப்பு, வல்திலானா நகரசபை உறுப்பினரான செல்வி மதுஷா அவர்கள் “ஈழத்தமிழர்கள் பெரும் யுத்தத்தை சந்தித்து இன்றுவரை இன அழிப்பை எதிர்கொண்டு வருகிறோம்” என்ற கருத்தை மிகவும் ஆளமாக பதிவு செய்ததோடு அதற்கான நீதி தேடும் செயற்பாடுகளுக்கு அனைவருடைய ஆதரவையும் கோரியிருந்தார். அவருடைய உரையை ஆர்வத்தோடு உள்வாங்கிய பலர் தமிழின அழிப்பிற்கான நீதிக்கான போராட்டங்களில் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்து இளையோர்களால் மேற்கொள்ளப்படும் இத்தாலிய அரசிற்கு தமிழின அழிப்பிற்கான நீதி கோரி அனுப்பும் கையெழுத்து மனுவில் கையொப்பமிட்டது குறிப்பிடத்தக்கது.
வல்திலானா நகரசபையில் வாழ்ந்து வரும் அனைத்து பல்லின மக்களின் தேசிய கொடிகளுடன் எமது தேசிய கொடி அவ் அரங்கில் கட்டப்பட்டது மட்டும்மல்லாது, இளையோர்களால் மண்டபத்தின் நுழைவாயிலில் தமிழின அழிப்பு மற்றும் வரலாற்றை காட்சி படுத்தும் சுவரொட்டியுடன் எமது தேசிய கொடியும் காட்சி படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு அனைத்துப் பணிகளிலும் எமது இளையோர் மிகவும் சிறப்பாக பணியாற்றியதை பார்த்து வேற்றின மக்கள் பாராட்டியது எமது இனத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது.








































