தமிழர் விழா 2026 ரெச்சியோ எமிலியா, இத்தாலி.
இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய தமிழர் விழா 18/01/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 15.30 மணிக்கு ரெச்சியோ எமிலியா பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
“சுழன்றும் ஏற்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே துணை “
என்பதற்கிணங்க தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு நாள்.
அந்தவகையில் இளைய தலைமுறையினருடன் , தேசிய செயற்பாட்டாளர்கள் ,
திலீபன் தமிழ்ச் சோலைகளின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் றெஜியோ வாழ் எமது ஈழத் தமிழ் உறவுகளும் இணைந்து சிறப்பித்திருந்தனர்.
கலை மற்றும் கலாச்சாரம் ஒரு சமூகத்தினை பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். தமிழர் கலைகள் தமிழர்களின் தொன்மையான பண்பாடு, நாகரிகம், மற்றும் வாழ்வியலை உலகிற்கு பறைசாற்றும் பண்பாட்டு பாலமாகவும் செயற்படுகின்றன.
எமது நோக்கமும், எமது மொழியை அழியவிடாது பாதுகாப்பதாகும். புலம்பெயர் தேசமதில் பிறந்த எம் குழந்தைகளுக்கு, எம் பெரியோர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொண்ட ,நமது பாரம்பரிய கலைகள் அழிந்து விடாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் என்பதனை உணர்ந்து, நம் தேசியத் தலைமையால் கட்டமைத்துக் கொடுக்கப்பட்ட ஒழுக்க நெறியின்படி இந்நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் முதலில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன், மங்கள விளக்கேற்றி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வரவேற்பு நடனம், பொங்கல் விழாவை போற்றும் நடனங்கள், காவடியாட்டம், கரகாட்டம், கும்மி, கோலாட்டம், மற்றும் பல நடனங்கள், சிறியவர்களின் நாடகங்கள், பட்டிமன்றம், பாடல்கள், பெரியவர்களின் நாடகம் போன்ற நிகழ்வுகளுடன் அரங்கம் நிறைந்த றெஜியோ வாழ் ஈழத் தமிழ் மக்களுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
தமிழர் கலைகள் இன, மொழி அடையாளங்களைத் தாங்கி, புதிய நுண்ணறிவுகளுடன் செழுமை பெறவும், தொடர்ந்தும் தமிழ் இளையோர் அமைப்பினராகிய எம்மால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், உங்களது ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பு.


















































































