இத்தாலி ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை முத்து விழா 2025.


முத்துத் தமிழ் நித்திரையிலும் எத்துணைச் சொத்துத் தான். புத்துலகம் செல்லச் சித்தரப் புரவியாகும் வித்துவப் பல்லக்கு.எத்தகு வேளையும் புத்துணர்வு தரும் முத்தமிழின் சங்கமத்தில் முத்து விழாவை கண்டு நிற்கும் ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை (07/12/2025) ஞாயிற்றுக்கிழமை 30 ஆவது ஆண்டு விழாவில் புதிய கட்டிடத்திறப்பு விழாவுடன் தமிழர் இல்லமாக பெயர் சூட்டப்பட்டு பூத்துக்குலுங்கி நிற்கின்றது.

இந்த நிறைவான தருணத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழத் தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கத்துடன் தியாகதீபம் திலீபன் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தமிழர் இல்லத்தில் மக்கள் நிறைந்த மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலுடன் பாரம்பரியக் கலையான ஊரகக் கலையுடன், இயல், இசை,நாடக நிகழ்வுகள் இனிதே ஆரம்பமானது. வரவேற்புரை, சலங்கைநாதம், தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள், பஞ்சதந்திர நாடகம்,பண்ணிசை,
வில்லிசை,சிலம்பு செப்பிய அறம் நாடகம் என சிறப்பான நிகழ்ச்சிகளுடன் அனைத்துலக தமிழ் மொழி பொதுத்தேர்வில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12வரை கற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து திலீபன் கலைக்கூட மாணவிகளுக்கு அனைத்துலகக் கலைத்தேர்வுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பூத்தது சங்கமித்த நிகழ்வுடன் முத்து விழா மலர்ந்து நின்ற தருணத்தின் நிறைந்த பதிவுகளுடன் தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கவிடப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.