இத்தாலி மேற்பிராந்தியத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

இத்தாலி மேற்பிராந்தியத்தியத்தைச் சேர்ந்த ஜெனோவா , பியல்லா, மாந்தோவா, வெரோனா, ரெச்சியோ எமிலியா, போலோனியா, ரோம், நாப்போலி நகரங்கள் ஒன்றிணைந்த தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சிநாள் 2025 நிகழ்வுகள் ரெச்சியோ எமிலியா நகரத்தில் 30/11/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மண்டபம் நிறைந்த மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.

எமது வீரவிடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்படுகிறது. இவர்களது இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்கு சக்தியாக அமைந்து விட்டன. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சுதந்திர சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.

“எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கௌரவத்துக்காக, பாதுகாப்புக்காக, தமது இன்னுயிரை ஈந்துள்ள இந்த மகத்தான தற்கொடையாளர்கள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்”
என்ற தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை மனதில் நிறுத்தி தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து இத்தாலிக் கொடி, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசியத்தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரை ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துலகத் தொடர்பகத்தின் 2025ம் ஆண்டு மாவீரர் நாளுக்கான உத்தியோகப்பூர்வ கொள்கைப்பகுப்பு அறிக்கையும் ஒலிபரப்பப்ட்டது. மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்லப்பாடல் ஒலிக்க மாவீரர் குடும்ப உறவினர்கள் மற்றும் திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், இளையோர் அமைப்பினர், மகளிர் அமைப்பினர், பொதுமக்கள் ஆகியோர் மலர்வணக்கம். சுடர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து விடுதலை எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமாகி எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட அறிவாடல் போட்டிகளில் இத்தாலி நாட்டிலிருந்து பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கம் வழங்கப்பட்டது.

அடுத்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் பங்கேற்ற மாவீரர் நினைவுசுமந்த ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து சமகால அரசியல் சூழல் தொடர்பான சிறப்பு உரையோடு எழுச்சி நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் ஒன்றிணைந்து உறுதி மொழி எடுத்துக்கொண்டதன் பின்பு தேசியக்கொடிகள் கையேற்கப்பட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் ஒளிபரப்பப்பட்டு இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழத் தயக்கம் என்ற எமது தாரக மந்திரத்துடன் 2025 வருடத்திற்கான மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உங்கள் கவனத்திற்கு