இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025, 27.11.2025 வியாழக்கிழமை அன்று Teatro Zappalà மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடனும் நடைபெற்றது. இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடி மற்றும் இத்தாலியத் தேசியக் கொடியேற்றப்பட்டதோடு ஈகச்சுடரேற்றலுடன், வெண்திரையில் மாவீரர் துயிலுமில்லக் காட்சி ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், முதல் மாவீரரான சங்கர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அனைத்து மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் மாவீரர் நினைவு சுமந்த எழுச்சி கானங்கள், தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு அவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன. அத்துடன், மாலதி கலைப்பள்ளி, திலீபன் தமிழ்ச்சோலை, சன் பிலிப்புநேரி மாணவர்களின் மாவீரர் வணக்கப் பாடலுக்கான நடனங்கள், எழுச்சிநடனங்கள் போன்றவற்றுடன், அனைத்துலகச் செயலகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் உரை ஆற்றினார். தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின், மாவீரர் நாள் சிறப்புரை, நன்றியுரைகள் வழங்கப்பட்டதுடன், தேசியக்கொடி இறக்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடன், மாவீரர்களை நெஞ்சிலே சுமந்த வண்ணம் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நிறைவு பெற்றது.