தமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை
தமிழ், தமிழன், தமிழீழம்! இம்மூன்று சொற்களை உச்சரிப்பதே தவறு என்று எண்ணிய சிங்கள கோர முகத்தின் வெளிப்பாடே 1983ம் ஆண்டு எம் தேசத்தில் நடந்தேறிய யூலைக் கலவரம் ஆகும்.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காட்டுமிராண்டி தனமாக கொல்லப்பட்டார்கள். குடியுரிமை பதிவேட்டை கையில் எடுத்து வீடு வீடாக தமிழர்கள் அடையாளம் காணப்பட்டு கண்டதுண்டமாக்கப்பட்டார்கள். உயிருடன் கொளுத்தப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப் பட்டார்கள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக்கிழித்து குழந்தையை எடுத்து எரியும் நெருப்பில் போட்டார்கள், தமிழர்களின் வீடுகள், கடைகள், சொத்துகள் சூறையாடப்பட்டன.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் மிருகத்தனமாக கொல்லப்பட்டார்கள்.இவ்வாறு சொல்ல முடியாத பல கொடுமைகள் சிங்களவர்களால் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டன.


இலங்கையின் சுதந்திரத்துடன் ஆரம்பித்த சிங்கள இனவெறி 1983 உடன் நிற்கவில்லை. அன்றிலிருந்து இன்று வரை சர்வதேசத்தின் பார்வைக்கு கீழ் தொடர்கிறது தமிழின அழிப்பு. இதன் உச்சக்கட்டமே 2009ல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகும்.
அன்றும் இன்றும் தமிழர்கள் கேட்பது ஒன்று தான்: தமிழர்களுக்கான தனித் தமிழீழம். தமிழன் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும், தமிழன் இழந்த ஒவ்வொரு உயிருக்கும், தமிழன் அனுபவித்த கொடுமைகளுக்கும் சிங்கள அரசும் சர்வதேசமும் பதில் சொல்லியே ஆக வேண்டும். சிங்கள அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வரை தமிழனின் குரல் உலகெங்கும் ஓங்கட்டும்.


அன்பார்ந்த மக்களே !
42 ஆண்டுகள் கடந்தும் தமிழ்த் தேசிய இனத்தின் நிலையான இருப்பிற்காக நாம் இலட்சிய உறுதி யோடு போராடி வருகின்றோம்! இந்த நாளில் இத்தளத்தில் பதிவேற்றப்படட்ட படங்களை உங்கள் சமூக வலைத்தளங்களிலும், வேற்றின நண்பர்களுக்கும் பகிரவும். இதனூடாக எம்மினத்திற்கு இழைக்கப்பட்ட இன அழிப்பை உலகறியச்செய்வது நமது ஒவ்வொருவருடைய வரலாற்றுக் கடமையாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.




































































































